சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்; சமூக நீதியா? கூட்டணி பேரத்துக்கான நாடகமா? - திருமாவளவன் கேள்வி

By செய்திப்பிரிவு

தலித் மக்களைப் புறக்கணிக்கும் அதிமுக அரசுக்கு தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கை:

"அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், காட்டப்படும் ஓரவஞ்சனையையும் தலித் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலின்போது அதிமுகவுக்குத் தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதை ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி கொஞ்சநஞ்சமல்ல. விசிக சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கான நிதியைக் குறைத்து பல்லாயிரக்கணக்கான தலித் மாணவர்களின் உயர்கல்வியைப் பறித்தது; அமைச்சரவையிலும் நிர்வாகத்திலும் ஆதிவ்திராவிடர்களைத் தொடர்ந்து புறக்கணித்துவருவது; தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமலும், ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்தாமலும் வேடிக்கை பார்ப்பது; சென்னை உயர் நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டும் மாநில எஸ்.சி. ஆணையத்தை இதுவரை அமைக்காமல் இழுத்தடிப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்.

பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளிலும் பஞ்சாயத்து செயலாளர் பதவிகளிலும் எஸ்.சி. மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது; அதனால் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் செயல்பட விடாது முடக்கப்படுவதற்கு மறைமுகமாகத் துணைபோவது; மனுஸ்மிருதியில் இருப்பதை மேற்கோள்காட்டியதற்காக என் மீது அவசர அவசரமாக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது; ஆனால், நூற்றுக்கணக்கில் புகார் கொடுத்தும் கூட வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைப் பாதுகாப்பது; அரசுப்பணிகளில் ஆதி திராவிட மக்களுக்கான இடங்களை சரிவர நிரப்பாமல் வஞ்சிப்பது; ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டுவது; பஞ்சமி நிலம் இரண்டரை லட்சம் ஏக்கர் கண்டறியப்பட்ட பிறகும்கூட அதை உரியவர்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்துவது போன்ற அதிமுக அரசு தொடர்ந்து இழைத்துவரும் அநீதிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இவ்வாறு தொடர்ந்து தலித் மக்களின் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்தி வரும் முதல்வர், திடீரென நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அவரது ஓரவஞ்சனை போக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

சாதியின் பெயரால் எவ்வளவு மோசமான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டாலும் அதற்கு ஒருபோதும் பணியமாட்டோம் என அப்போதே சாதி சங்கங்களைப் புறந்தள்ளிய துணிச்சல் மிகுந்த தலைவர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் என்பதை நாடறியும். அத்துடன், கடைகள், வணிக நிறுவனங்கள், வீதிகள் போன்றவற்றுக்கு சாதிப் பெயர்கள் கூடாது என்றும்; அவ்வாறு ஏற்கெனவே சூட்டப்பட்ட பெயர்களை உடனே அழிக்க வேண்டுமென்றும் ஆணையிட்டு அதனை நடைமுறைப்படுத்தி சாதிவெறி பிடித்த பிற்போக்கு சக்திகளின் வாலை நறுக்கியவர் எம்ஜிஆர் என்பதும் வரலாறு.

அதேபோல, அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதாவும் சாதியவாத சக்திகளுக்கு அஞ்சாதவர் என்பதை வரலாறு சொல்லும். ஒரு கட்சியை வெளிப்படையாக சாதிக் கட்சி - வன்முறைக் கட்சி என்றும்; அவர்கள் ஏற்படுத்திய சேதங்களுக்காக ரூ.73 கோடியை அரசுக்குச் செலுத்த வேண்டுமென்றும் சட்டப்பேரவையிலேயே பேசியது; அது இன்றும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படாமலிருப்பது; சாதியின் பெயரால் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் தூண்டியோரைக் கைது செய்து சிறைப்படுத்தியது போன்றவை அவரது அஞ்சாமைக்கும் சாதியவாதத்துக்கு எதிரான அவரது அணுகுமுறைகளுக்கும் சான்றுகளாகும்.

இத்தகைய தலைவர்களின் வாரிசுகளாகத் தங்களை அறிவித்துக் கொண்டு இன்று ஆட்சி நடத்துவோர் அரசியல் ஆதாயத்துக்காக அஞ்சிப் பணிந்து அறிவிப்புகளை வெளியிடுவது அத்தலைவர்களுக்குக் களங்கம், இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கைகளே ஆகும்.

தலித் சமூகத்தினருக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பிற சமூகங்களையும் அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்புக்கு உட்படுத்துவது ஏற்புடையதே. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாறுபாடு ஏதுமில்லை.

இந்நிலையில், சமூக நீதியின் அடிப்படையில்தான் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக, கூட்டணி பேரத்துக்காக இந்த நாடகம் நடத்தப்படுகிறதா? அத்துடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா?

முதல்வரின் அறிக்கையின்படி இது சமூக நீதிக்காகத்தான் மேற்கொள்ளப்படுகிறது எனில், ஆதி திராவிட மக்களின் கோரிக்கைகள் எதுவும் சமூக நீதி என்பதற்குள் வராதா? அல்லது, அரசியல் ஆதாயத்திற்காக, சாதிய வாக்குகளுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வெளிப்படையாக ஆட்சியாளர்கள் ஒப்புக் கொள்வார்களானால், பெரும்பான்மையான மக்கள்தொகையைக்கொண்ட சமூகமான தலித் மக்களின் வாக்குகளை அதிமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா? அல்லது தலித் மக்களுக்கு வாக்குரிமையே இல்லையா?

அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக, தங்களுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையே இல்லை என்று வெளிப்படையாகச் செயல்படுவது போல, ஆதி திராவிட மக்களின் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என அதிமுக முடிவெடுத்து விட்டதா?

அதிமுக அரசின் இந்த ஓரவஞ்சனைப் போக்கு, தலித் மக்களைப் புறக்கணிக்கும் போக்கு, சாதியவாத அரசியலுக்குப் பணியும் போக்குத் தொடருமேயானால், உரிய நேரத்தில் தலித் மக்கள் அதிமுகவுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்