மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்த சமூகமும் ஆதரவுக்கரம் நீட்ட முன்வர வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச.02) வெளியிட்ட அறிக்கை:
"கண்ணியம் மற்றும் சமத்துவ வாழ்க்கைக்காகத் தேடலுடன் வாழும் லட்சக்கணக்கான அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
நீடித்த, அணுகத்தக்க, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய, கரோனாவுக்குப் பிந்தைய உலகை மீண்டும் சிறப்பாகக் கட்டமைக்க வேண்டுமென்ற கருப்பொருளுடன் 2020 உலக தினத்தை அனுசரிக்குமாறு உலக நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளை அவர்களது குடும்பத்தினரே சுமையாகக் கருதும் நிலையில், இவர்களுக்குப் பாதுகாப்பாக மொத்த சமூகமும் மத்திய, மாநில அரசுகளும் கடமையாற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால், நமது அரசுகள் இக்கடமையினைத் தட்டிக்கழித்து வருவது வேதனையளிப்பதாகும்.
வேலைசெய்யத் தகுதி படைத்த மாற்றுத்திறனாளிகளை 63.7 சதவீதம் பேர் வேலையின்றி வாடுகின்றனர். எஞ்சியவர்களும் அத்துக்கூலிகளாகவும் அன்றாடங்காய்ச்சிகளாகவும் உள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில் இவர்கள் அனுபவிக்கும் துயரம் சொல்லி மாளாது.
இயல்பாகவே நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதில் கரோனா தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதால் இவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து உணவுகள் வழங்கிட வேண்டுமென ஐநா பொதுச் செயலாளரின் வேண்டுகோளைக் கூட மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. வாழ வழியின்றி மாற்றுத்திறனாளிகளும், அவர்தம் பெற்றோர்களும் தற்கொலையில் மடிந்துபோன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
கரோனா காலத்தில் பல லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகைகளை வாரி வழங்கிய பாஜக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வெறுமனே ரூ.1,000 வழங்குவதாக அறிவித்து அதையும் சுமார் 3.5 சதவீதத்தினருக்கு மட்டும் வழங்கிவிட்டு, கோடிக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றியுள்ளது.
அமலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமலாக்க முயலாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக குற்றம்புரிவோர் மீதான தண்டனைக்கான சரத்துக்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் அச்சட்டத்தை மத்திய அரசு திருத்த முயன்றபோது மாற்றுத்திறனாளிகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலுவாகக் குரல் கொடுத்த பின்னணியில் மத்திய அரசு பின்வாங்க நேரிட்டது.
அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வதால் சமூக நீதி அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய 4 சதவீதப் பணி வாய்ப்புகள் தற்போது குறைந்து வருகின்றன. தனியார் துறை பணிகளில் குறைந்தபட்சம் 5 சதவீதப் பணிகளை வழங்க வேண்டுமென்ற மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்ட சரத்துக்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தாத நிலையில் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.
பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கண்டறிந்து உடனடியாக நிரப்ப வேண்டுமென்று 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது.
தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மாத உதவித்தொகை ரூ.3,000 அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிடவும், சமூகத்தில் கவுரவமான பாதுகாப்பான வாழ்க்கை உத்தரவாதத்தினைப் பெற்றிட மாற்றுத்திறனாளிகள் நடத்தும் அனைத்துப் போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சோதனைகள் நிறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்த சமூகமும் ஆதரவுக்கரம் நீட்ட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தினத்தில் அனைவரையும் வேண்டுகிறது".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago