2021-ல் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில் சபதமேற்போம் என, அமமுக தொண்டர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, தினகரன் இன்று (டிச.2) தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
"தமிழகம் என்றென்றைக்கும் நினைத்துக் கொண்டாடுகிற தனிப்பெரும் தலைவரான ஜெயலலிதா நம்மைவிட்டு மறைந்து நான்காண்டுகள் கடந்தோடிவிட்டன. ஆனால், நம் இதயத்தைவிட்டு அகலாமல் ஒவ்வொரு கணமும் நம்மை வழிநடத்தி வருபவர் ஜெயலலிதாதான். சோதனை நெருப்பாறுகளைக் கடந்து நெஞ்சு நிமிர்த்தி நாம் பயணிப்பதற்கான துணிச்சலை நமக்குத் தந்து கொண்டிருப்பதும் நமக்குள்ளிருந்து இயக்கும் ஜெயலலிதா எனும் அற்புத சக்திதான்!
தமிழ்நாட்டின் பெருமைகளை எல்லாம் சிங்கம் போலக் காத்து நின்றவர் அவர். இந்திய தேசம் மட்டுமல்ல; உலகமே போற்றுகிற பல நல்ல திட்டங்களை ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காக செயல்படுத்திய தங்கத்தாரகை. அவர்களது பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே தீயசக்திகளைக் குலைநடுங்கச் செய்தவர். தன் வாழ்வையே வேள்வியாக மாற்றி, தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக அர்ப்பணித்த அரும்பெரும் தலைவர் அவர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் உருவாக்கிய ஆட்சியை எத்தனையோ இன்னல்களுக்கு இடையில் இரும்புப் பெண்மணியாக நின்று காப்பாற்றிக் காட்டியவர் சசிகலா. எனினும் சிலரின் சுயநலத்தால், தவறான நடவடிக்கைகளால் எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா காத்து நின்ற இயக்கம், திசை மாறி, மாலுமி இல்லாத கப்பலாக, தமது தனித்தன்மையை இழந்து தத்தளித்து நிற்கிறது.
ஆட்சி அதிகாரம் இருப்பதால் மட்டுமே தங்களோடு ஒட்டிக் கொண்டிருப்பவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு தானே பெரிய ஆளுமை என தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள். எதிரிகளுக்கு எப்போதும் அச்சம் தரும் அசலான வீரவாளுக்கு அட்டைக்கத்தி ஒருபோதும் ஈடாக முடியாது என்பது தெரியாமல், அர்த்தராத்திரியில் குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தின் காலம் முடிந்துவிட்டால் அடுத்த நொடி சுற்றியிருக்கும் அத்தனை பேரும் பறந்துவிடுவார்கள் என்பதறியாமல் பணக்குவியலை வைத்து பலவித மனக்கணக்குகளைப் போடுகிறார்கள்.
வெறுமனே பணத்தை மட்டும் வைத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என மனப்பால் குடித்துக்கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள்.
இப்படித்தான் 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் என்ன பதில் கொடுத்தார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். அந்தத் தேர்தல் களத்தில் தொண்டர்படையின் சக்தியும், மக்களின் ஆதரவும் கொண்டு தீயசக்திக் கூட்டத்தை நம்முடைய ஜெயலலிதா வீழ்த்திக் காட்டினார்.
2016-ம் ஆண்டிலும் திரும்பவும் எழுந்திருக்க முடியாத அடியை அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர் இல்லாத 2021 தேர்தல் களத்தில் எப்படியாவது தங்களின் கனவை நனவாக்கிவிட வேண்டும் என்று தீயசக்திக் கூட்டம் இன்றைக்கு துடித்துக்கொண்டிருக்கிறது. அதனை முறியடிப்பதற்கான ஆற்றலும், எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கிற தொண்டர் படையும், எழுச்சி மிகுந்த இளைஞர் பட்டாளமும் நம்மிடம்தான் இருக்கின்றன.
அவற்றைக்கொண்டு இந்த மண்ணில் திமுக தலையெடுப்பதைத் தடுத்தே தீரவேண்டிய பெரும் பொறுப்பையும், கடமையையும் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களான நம்முடைய கரங்களில் காலம் வழங்கியிருக்கிறது.
ஏனெனில், அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் தமிழகத்தின் நலன்களைக் காவுகொடுத்து துரோகம் செய்த திமுகவினர், 10 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் காய்ந்து போய் மக்களின் மீது பாய்வதற்குத் தயாராகி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊருக்கு ஊர் எதையெல்லாம் அபகரிப்பார்கள், என்னென்ன அட்டூழியங்களை அரங்கேற்றுவார்கள், சாதாரண மக்களின் நிம்மதி எப்படியெல்லாம் குலைந்து போகும் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.
இத்தகைய தீயசக்தியைத் தோலுரித்துக் காட்டவேண்டியவர்களோ அவர்களுக்கே வால்பிடித்து, வந்தனம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். பொல்லாத கணக்குகளை எல்லாம் நாள்தோறும் போட்டுக் காட்டுகிறார்கள். இல்லாத கணிப்புகளை எல்லாம் வெளியிடுகிறார்கள். சொல்லாத கதையெல்லாம் சொல்கிறார்கள்.
கடந்த தேர்தலின்போது ஒரு தொகுதியில் 'போட்டியே போடாத கட்சி குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை வாங்கியதாக' கணித்த அதிமேதாவிகள்தான் இப்போது புது பொய் மூட்டைகளோடு கிளம்பியிருக்கிறார்கள். எப்படியாவது மக்களைக் குழப்பிவிட்டு தங்களுக்குப் பிடித்தமானவர்களை மீன் பிடிக்கச் செய்துவிடவேண்டும் என நப்பாசையோடு இருக்கிறார்கள்.
எத்தனையோ பேரின் வாழ்வைச் சின்னாபின்னம் செய்த கஜா போன்ற புயல்களின் போதெல்லாம் மக்களை மறந்தவர்கள், மக்களால் விரட்டப்பட்டவர்கள் எல்லாம், அடிக்காத நிவர் புயலுக்காக மிகுந்த அக்கறை காட்டுவதைப் போல நடிக்கிறார்கள். இவர்கள் குறுக்கே நின்று தடுத்ததால்தான் புயலே மிரண்டு போனது என்று புதுக்கதை விடுகிறார்கள். மழையில் நனைந்தார், சொந்தக் கைகளாலேயே குடை பிடித்தார் என்றெல்லாம் மாய்ந்து, மாய்ந்து போற்றிப் பாடுகிறார்கள்.
இப்படி இவர்கள் எத்தனை செப்படிவித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நெஞ்சமெல்லாம் வஞ்சகத்தோடு இவர்கள் ஊதி பெரிதாக்கும் பிம்பங்களை நம்பி ஏமாற மக்கள் தயாரில்லை. அப்பாவுக்கு மகனாகப் பிறந்ததாலும், அதிர்ஷ்டக் காற்றால் கோபுரத்தில் ஒட்டியிருப்பதாலும் மட்டுமே 'இன்னாருக்கும், இன்னாருக்குமே போட்டி' என்று திட்டமிட்டு உருவாக்கப்படும் மாயத்தோற்றங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அடித்து நொறுக்கப்போகிறார்கள்.
வெற்றிடத்தை எந்தக் காற்று வேண்டுமானாலும் நிரப்பலாம் என்பது விஞ்ஞானத்தில் சாத்தியமாக இருக்கலாம். அரசியல் ஆளுமைக்கான வெற்றிடத்தை, அதிர்ஷ்டத்தால் விட்டத்தில் பாய்ந்தவர்களால் ஒரு நாளும் நிரப்பவே முடியாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நிரூபிக்கப் போகிறார்கள். அதற்கேற்ப நம்முடைய களப்பணிகளை ஒவ்வொரு தொண்டரும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தடுத்து செய்ய வேண்டியவை, எக்காரணம் கொண்டும் தீயசக்திக் கூட்டம் அதிகாரத்திற்கு வந்துவிடாமல் தடுப்பதற்கான உத்திகள், மக்களுக்கு அளித்திடப் போகும் வாக்குறுதிகள், வேட்பாளர் தேர்வு என சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்துப் பணிகளிலும் நாம் முழு கவனம் செலுத்தி வருகிறோம். ஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டிகளாக இனி வரும் நாட்களில், களத்தில் சுற்றிச்சுழலப்போகிறோம்.
எனவே, எதைப்பற்றியும் கவலைப்படாமல், 'வெற்றி நமதே!' என்று முழங்கி ஒவ்வொருவரும் களமிறங்குவோம். ஜெயலலிதா கட்டிக்காத்த பெருமைகளை மீட்டெடுக்க, தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் கம்பீரமான ஆட்சியை, தமிழக மக்களின் பேராதரவுடன், அவரின் உண்மையான பிள்ளைகளான நாம்தான் அமைக்கப் போகிறோம்.
அதற்காக ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்தி, நாம் ஒவ்வொருவரும் மனதார உறுதியேற்போம். நாளைய சரித்திரம் பேசப்போகும் நமது வெற்றியை 2021-ல் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து வணங்கிடச் சபதம் ஏற்போம்".
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago