புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு, நிவாரண பணிகள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
புரெவி புயல்:
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடக்கும். பின்னர் டிசம்பர் 3-ம் தேதி காலை தென்தமிழக கடல் பகுதியை நெருங்கும். இந்த புயலுக்கு 'புரெவி' என பெயரிடப்பட்டுள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும். மேலும், மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றிருந்த விசைப்படகுகளும் கரை திரும்பிவிட்டன.
3-ம் எண் எச்சரிக்கை கூண்டு:
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மாவட்டம் முழுவதும் கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வருவாய் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு படையினர், வேளாண்மை துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேரும் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர். இவர்கள் மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவசர ஆலோசனை:
இந்நிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புயல் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு, நிவாரண பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்துக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள அரசு முதன்மை செயலரும், கருவூல கணக்குத்துறை ஆணையருமான குமார் ஜெயந்த் இன்று மாலை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
படகுகள் கரை திரும்பின:
தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. நிவாரண முகாம்கள், உணவு, குடிநீர், மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் போன்ற அனைத்தும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கின்றன. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
72 படகுகள் கடலில் இருந்தன. அதில் 64 படகுகள் ஏற்கனவே கரை திரும்பிவிட்டன. 8 படகுகள் வந்து கொண்டிருக்கின்றன. திருச்செந்தூரை தாண்டி தூத்துக்குடி அருகே வந்துவிட்டன. அவைகளும் இரவுக்குள் கரைக்கு வந்துவிடும் என்றார் அவர்.
63 நிவாரண முகாம்:
மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறும்போது, மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 36 இடங்களிலும் அதிகாரிகள் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 63 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அவைகளில் குடிநீர், உணவு, ஜெனரேட்டர், டார்ச் லைட், பாய், தலையணை போன்ற அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்கள் குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 637 குளங்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். உடைப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்ய 30 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. மழைநீரை வெளியேற்ற தூத்துக்குடியில் 200 மோட்டார்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்ய இன்று சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மீட்புக் குழுவினர்:
எஸ்பி ஜெயக்குமார் கூறியதாவது: புயல் வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். தேசிய மீட்புக் குழுவினர் 40 பேர் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களும் இரவுக்குள் வந்துவிடுவார்கள். அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுவார்கள். அதேபோல மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 130 காவலர்கள் உள்ளனர். இவர்கள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களிடம் 24 வகையான மீட்பு உபகரணங்கள் உள்ளன. அதுபோல உள்ளூர் போலீஸார் 1200 பேர் தயார் நிலையில் உள்ளனர் என்றார் எஸ்பி.
இதற்கிடையே மாவட்டத்தில் இன்று மழை ஏதும் பெய்யவில்லை. காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளும் அமைதியாக காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago