தென் தமிழக கடற்கரையோரம் புயல் எச்சரிக்கை; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள்: முதல்வர் பழனிசாமி தகவல்

By செய்திப்பிரிவு

தென் தமிழக கடற்கரையோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும் என்பதால், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 01) வெளியிட்ட அறிக்கை:

"தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 930 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும், டிசம்பர் 3-ம் தேதி காலை குமரிக்கடல் பகுதிக்கு வரும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, 1.12.2020 முதல் 4.12.2020 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் மற்றும் இதர மாவட்டங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்யக் கூடும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஏற்கெனவே, 18.9.2020 அன்று தலைமைச் செயலாளர் தலைமையிலும், 12.10.2020 மற்றும் 23.11.2020 ஆகிய இரு தினங்களில் எனது தலைமையிலும், 21.10.2020 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தலைமையிலும், விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

கடந்த 23.11.2020 அன்று நிவர் புயல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டேன். மேலும், 24.11.2020 அன்று எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவரச கால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு, நிவர் புயல் தொடர்பான நிலவரங்களை நேரடியாக அறிந்து தேவையான அறிவுரைகளை வழங்கினேன்.

இத்தகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும், அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரின் சீரிய கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள், கள நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து அதற்கு ஏற்ப வழங்கப்பட்ட குறிப்பான அறிவுரைகள் மற்றும் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நிவர் புயலினால் ஏற்பட இருந்த அதிகப்படியான பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறைக்கப்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு பின்வரும் அறிவுரைகள் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

- வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், 1.12.2020 அன்று மாலையிலிருந்து போதுமான எரிபொருளுடன் ஜேசிபி மற்றும் லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

- தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை பிற மாவட்டங்களிலிருந்து பெற்று தயார் நிலையில் வைக்க வேண்டும்.

- தென் தமிழக கடற்கரையோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும் என்பதால், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள், கன்னியாகுமரி (2), திருநெல்வேலி (3), தூத்துக்குடி (2) மற்றும் மதுரை (2) மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

- நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் இருக்க தேவையான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அவ்விடங்களில் கண்காணிக்க காவல்துறை / வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும். மேலும், தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தொடர்புகொண்டு, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

- பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

- நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாய் மற்றும் போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

- கரோனா மற்றும் இதர தொற்று ஏற்படா வண்ணம், அனைத்து நிவாரண முகாம்களிலும் கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்கவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும், சுகாதாரக் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

- கடலோர கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரங்களான கட்டு மரங்கள், மின் மோட்டார் பொருத்திய படகுகள், மீன் வலைகள் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

- உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க உடனுக்குடன் திடக்கழிவுகளை அகற்றி, தேவையான கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அதற்கு தேவையான அளவுக்கு கிருமி நாசினி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

- தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீரேற்றம் செய்து முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

- நீர்நிலைகளின் நீர் கொள்ளளவு, பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

- அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளையும் கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

- மழை நீர் கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அடைப்புகளின்றி உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துப் பொருட்கள், பசுந்தீவனங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

- நடமாடும் தொலைத் தொடர்பு கருவிகளை தயார் நிலையில் வைத்து, தொலைத் தொடர்பு பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.

புயலால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வாழுகின்ற தென் மாவட்ட பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்:

- வங்கக்கடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீசக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

- தற்போது, ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீன்பிடி படகுகளின் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலத்தின் கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்குமாறு, தொடர்புடைய மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

- பொதுமக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

- மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாள அறிவுறுத்தப்படுகின்றனர்.

- பலத்த காற்று வீசும் போது பொருட்கள் நகரவும், மரங்கள் விழவும் வாய்ப்புள்ளதால் அச்சமயங்களில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

- அதிகாரப்பூர்வ மற்றும் நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவை தவிர TN-SMART செயலி, TWITTER - TNSDMA மற்றும் அலைபேசி மூலமாகவும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படுகின்றன.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. அரசின் அறிவுரைகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்