வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (நவ. 30) தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
"தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் மாபெரும் பெருந்திரள் போராட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கிறது. போராட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில் போராட்டக் களத்திற்கு நீங்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள்.
சமூக நீதிப் போராட்டம் என்பது முடிவில்லாதது. பல்வேறு தரப்பினருக்காக, பல்வேறு கோரிக்கைகளுக்காக சமூக நீதிப் போராட்டம் நீண்டு கொண்டே இருக்கும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் முதற்கட்டப் போராட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் நாளை தொடங்குகிறது.
» 7.5% உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த 7 மாணவிகளின் கல்விச் செலவு: திமுக ஏற்றது
» டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுநகரில் வங்கி முற்றுகை போராட்டம்: 52 பேர் கைது
அடுத்தகட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் எனப் பல நிலைகளில் பல்வேறுகட்டப் போராட்டங்களை நடத்தவிருக்கிறோம்.
இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் மாபெரும் நிறைவுகட்டப் போராட்டம் அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ளது. அப்போராட்டத்தின் வடிவமும், போராட்டத் தேதியும் விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும். இந்தப் போராட்டங்கள் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை; அது இங்கு ஒரு பொருட்டுமல்ல.
ஆனால், இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்; நமது கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை நேற்று மாலை 6 மணிக்கு எனக்கு ஏற்பட்டுவிட்டது. ஆம்.... பாட்டாளி சொந்தங்களால் வளர்க்கப்படும், வழிகாட்டப்படும் தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோருடன் நேற்று நடத்திய உரையாடலும், அவர்களிடத்தில் நான் கண்ட உறுதியும், உணர்வும் தான் எனக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அந்த நம்பிக்கை பொய்க்காது.
தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள், இளம்பெண்களுடனான இணையவழி உரையாடல் மிகக்குறுகிய காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. அதிகபட்சமாக இரு நாட்கள் கூட அவகாசம் இல்லை. அதிகபட்சமாக 20 ஆயிரம் பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.
ஆனால், எனது கணக்கை தப்பாக்கி, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பிகளும், தங்கைகளும் இணைய வழியில் குவிந்துவிட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் உளமாறத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக பொதுக்கூட்டங்களோ, மாநாடுகளோ நடத்தும்போது பார்வையாளர்களுடன் தலைவர்கள் நேரடியாகப் பேசுவார்கள். அப்போது பார்வையாளர்களின் கண்களில் பிரகாசத்தையும், மனம் முழுவதும் பரவசத்தையும் பார்க்க முடியும். அது இயல்பானதுதான்.
ஆனால், நேற்று நடைபெற்றது இணையவழிக் கூட்டம்தான். இத்தகைய கூட்டங்களில் உரையாற்றுபவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே உணர்வு வழி உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
ஆனால், கூட்டத்தில் உரையாற்றும்போது பார்வையாளர்களின் கண்களைப் பார்த்து நான் பிரம்மித்துப் போனேன். அவர்களின் கண்களில் சூரியனை விஞ்சும் அளவுக்குப் பிரகாசம் தென்பட்டது; அவர்களின் மனதில் காவிரி வெள்ளத்தை விஞ்சும் அளவுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது.
இவை அனைத்துக்கும் மேலாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்காக நாம் சமரசமின்றிப் போராட வேண்டியதன் தேவை குறித்தும் வாக்களிக்கும் வயதை எட்டாதவர்கள் கூட புரிந்து கொண்டுள்ளனர். இப்புரிதலும், உணர்வும் மட்டுமே நமது போராட்டம் வெல்ல போதுமானவை.
இப்போது என்ன கோரிக்கையை முன்வைத்துப் போராடுகிறோமோ, அதே கோரிக்கையை முன்வைத்து 1987-ம் ஆண்டு நாம் நடத்திய ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. அதற்காக நாம் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் ஏராளமானவை. தமிழ்நாட்டில் எனது கால்படாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, வரப்புகளிலும், முள் பாதைகளிலும் நடந்து சென்று போராட்டத்திற்கு மக்களைத் தயார் செய்தேன்.
ஆனால், இப்போது ஒரு சில வாரங்களிலேயே அதைவிடக் கூடுதலான எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதற்குக் காரணம் நாம் முன் வைத்துள்ள கோரிக்கையில் உள்ள நியாயம் தான். அதனால் தான் சொல்கிறேன்... வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி.
சமூக நீதி அளவில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்று ஒன்று இருந்தால் அது வன்னியர் சமுதாயம் தான். விவசாயியாக, கட்டுமானத் தொழிலாளர்களாக, நாட்டைக் காக்கும் பணியில் பாதுகாவலர்களாக, ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பவர்களாக வன்னியர் சமுதாயம் இருந்தாலும் கல்வியும், வேலைவாய்ப்பும் மட்டும் இன்னும் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அந்த நிலையை மாற்றி சமூக நீதி என்ற கனியை வன்னியர்களும் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே இப்போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த உண்மையை நாமும் உணர்ந்து கொண்டு, மற்ற சமுதாயங்களுக்கும் புரிய வைத்திருக்கிறோம்.
சென்னையில் நாளை முதல் 4-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் போராட்டத்தில் லட்சக்கணக்கில் பாட்டாளிகள் பங்கேற்க வேண்டும். நாம் நமது உரிமைக்காகவே போராடுகிறோம்; எனவே, எதற்காகவும் அஞ்சாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். அதேநேரத்தில் நமது கோரிக்கைகளுக்கும், உன்னத நோக்கங்களுக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய எந்த செயல்களுக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.
அதற்கெல்லாம் மேலாக எனக்கு மிகவும் முக்கியம் உங்களின் பாதுகாப்புதான். எனவே, அனைத்து பாட்டாளிகளும் மிகவும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும்; இரவுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் வாய்ப்புள்ள நேரங்களில் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்; அவ்வப்போது கைகளை கிருமிநாசினியால் தூய்மை செய்ய வேண்டும். உண்மையாகவும், உரிமைக்காகவும் போராடும் நமக்கு எப்போதும் வெற்றி தான். எனவே, சமூக நீதிக்காக உறுதியாக போராடுவோம்; இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம். சென்று வா... வென்று வா!".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago