தலைநகர் சென்னைக்குப் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியைப் பராமரிப்பதிலேயே அலட்சியம் என்றால், மாநிலத்தின் பிற ஏரிகளை அதிமுக அரசு எந்த மாதிரி பராமரித்திருக்கும்? என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கை.
'' 'நிவர்' புயலை முன்னிட்டு - செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரை வெளியேற்றத் திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3ஆவது மதகுகள், மூட முடியாமல் இப்போது 400 கன அடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் புயலின் சேதம் குறைந்துவிட்டது” என்று போட்டி போட்டுக் கொண்டு அமைச்சர்களும், தாமும் பேட்டி கொடுத்து - பத்திரிகைகளையும் மிரட்டி எழுத வைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏன் மதகுப் பராமரிப்பில் இப்படிக் கோட்டை விட்டார்? பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் செய்த பணிதான் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்று பார்த்த அவர், ஏன் இதுகுறித்தெல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தவில்லை? ஊடகங்கள் புடைசூழ அங்கு சென்றாரே எதற்கு? எல்லாமே வெற்று விளம்பரத்திற்காகத்தானா? ஏரி மதகுகளைக் கூட பராமரிக்கும் நிர்வாகத் திறமை இன்றி - முதல்வராக இருந்து இந்தத் தமிழ்நாட்டை இப்படிப் பாழ்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் இந்த அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது.
எங்கள் கட்சித் தலைவர் கூறியதுபோல, மக்களுக்கு எது தேவையோ அதனைச் செய்யாமல், தங்களுக்கு எது லாபமோ அதை மட்டும் செய்துகொள்ளும் அரசாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அரசு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
தமிழகத்தில் உள்ள ஏரி மதகுகளைப் பராமரிப்பதற்கென்றே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதன்படி அந்தப் பணிகள் நடப்பதில்லை என்பதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளின் நிலையே சாட்சி. தலைநகர் சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரியைப் பராமரிப்பதிலேயே இவ்வளவு அலட்சியம் என்றால், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருக்கும் ஏரிகளை இவர்கள் எந்த மாதிரி பராமரித்திருப்பார்கள்?
“கமிஷன்" மட்டுமே கண்கண்ட தெய்வம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்கிறாரா? 2015 பெருவெள்ளத்தின்போதும் திடீரென்று 30 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட்டு சென்னையை வெள்ளக்காடாக்கி - மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டது அதிமுக அரசு. அப்போதும் செம்பரம்பாக்கம் மதகுப் பிரச்சினை இதுமாதிரி வெடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
அப்படியொரு அவல நிலைமை இப்போதும் செம்பரம்பாக்கம் ஏரியில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்குத் திண்டாடிய மக்கள் இந்த மழையால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ள நிலையில் - சென்னை மக்களை மீண்டும் குடிநீருக்குத் திண்டாட வைக்கும் வகையில் 400 கன அடி நீர் வீணாகும் அவலநிலையை அதிமுக அரசு உருவாக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே, துறை அமைச்சர் என்ற முறையிலும், முதல்வர் என்ற முறையிலும் உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீர் வீணாக வெளியேறிக் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில், மதகுகளைச் சீரமைத்து மூட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago