விவசாய சங்கங்களுடன் மத்திய பாஜக அரசு நடத்தும் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் அமைய வேண்டும். இதற்கு மாறாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்து ஏமாற்றும் வஞ்சகம் எண்ணம் இருந்தால் அது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமையும் என முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
"கடந்த ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் விரோத, வேளாண் பெருவணிகச் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். விவசாயத்தைப் பெருவணிக நிறுவனங்களுக்கு “தாரைவார்க்கும்“ அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இதன் மீது கவனம் செலுத்தி, விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து, ஜனநாயகப்பூர்வ தீர்வுகாணத் தவறிய பாஜக மத்திய அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிராகரித்து, அத்துமீறி அவசரச் சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றதாக அறிவித்துவிட்டது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 20 கோடி விவசாயிகளும் வாழ்வுரிமை பறிபோகும் பேராபத்தை உணர்ந்து, விவசாய விரோதச் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்திருத்த மசோதா 2020ஐயும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை அறிவித்தனர்.
பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகளும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் விவசாயிகள் கோரிக்கைகளை ஆதரித்துக் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் ‘டெல்லி சலோ’ அழைப்பை ஏற்று நவம்பர் 26, 27, 28 தேதிகளில் விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி அணிவகுத்து வந்தனர்.
பாஜக மத்திய அரசு விவசாயிகளை டெல்லி நகருக்குள் அனுமதிக்காமல், தடுத்து நிறுத்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. சாலைகளில் தடுப்பு அரண் அமைத்தது, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. பீரங்கி வண்டிகளை வைத்து, கடுங்குளிரில் நின்ற விவசாயிகள் மீது தண்ணீர் பீச்சியடித்தது, தடியடி நடத்தியது.
நெடுஞ்சாலை நீள, அகலப் பள்ளங்களைத் தோண்டித் துண்டித்தது. உணவளிக்கும் உழவர்கள் மீது மத்திய பாஜக அரசு யுத்தத் தாக்குதல் நடத்தியது. இவை அனைத்தையும் தாண்டி, தலைநகர் டெல்லியில் திரண்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
விவசாயிகளின் மாபெரும் எழுச்சியின் நிர்பந்தத்தால் டிசம்பர் 3-ம் தேதி மத்திய பாஜக அரசு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதற்கிடையில் உள்துறை அமைச்சர் டிசம்பர் 3-ம் தேதிக்கு முன்பாகவே பேசத் தயார் என அறிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு நடத்தும் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் அமைய வேண்டும். விவசாயிகள் உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும். இதற்கு மாறாகப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்து ஏமாற்றும் வஞ்சகம் எண்ணம் இருந்தால் அது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசின் கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறது.
உழவர்கள் ஒன்றுபட்டு நடத்திவரும் போராட்டத்திற்கு ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதியினரும் பேராதரவு வழங்க வேண்டும்".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago