கடந்த காலங்களில் அனைத்து சமுதாய நலன்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் எவ்வாறு போராடினவோ, உழைத்தனவோ, அதேபோல் இப்போது வன்னியர் 20% தனி இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு அனைத்து சமுதாயங்களும் மனமுவந்து ஆதரவளிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
என் அன்புக்கும், அக்கறைக்கும் உரிய தமிழ்ச் சொந்தங்களே,
தமிழ்நாட்டில் எந்த சமுதாயத்திற்கு என்ன பிரச்சினை வந்தாலும் முதன்முதலில் ஓடோடி வந்து குரல் கொடுக்கும், போராட்டம் நடத்தும் பாமக, இப்போது தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள நியாயங்களை அனைத்து சமூகத்தினரும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சமுதாயம் வன்னியர்கள் தான். உலகில் எந்த நாடாக இருந்தாலும் அங்குள்ள பெரும்பான்மை சமுதாயம் தான் அனைத்து அதிகாரங்களையும், உரிமைகளையும் எடுத்துக் கொள்ளும். ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமூகம் சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
» உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிச.1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்
» கொடைக்கானல் மலைச்சாலையில் சரிந்து விழுந்த பாறையால் போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்தில் 1989-ஆம் ஆண்டுக்கு முன் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் அங்கமாக இருந்த வன்னியர் சமுதாயத்திற்கு, அந்த வகுப்பிற்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ஒரு விழுக்காடு பிரதிநிதித்துவம் மட்டுமே கிடைத்தது. அந்த அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தைத் தொடங்கி 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
சமூகநீதிக்கான போராட்டங்களில் 21 சொந்தங்களை பலி கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அப்போதைய அரசு எங்களை அழைத்து பேச்சு நடத்தினாலும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்காமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி, வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கியது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகையில் 75% வன்னியர்கள் தான் என்றாலும் கூட, அவர்களுக்கு 7 - 8 % இட ஒதுக்கீடு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பது அனைவரும் அறிந்ததே.
சமமானவர்களுக்கு இடையில் தான் சமத்துவம் இருக்கிறது. சமமற்றவர்களை சமமாக நடத்துவது சமமின்மையை நீடித்திருக்கச் செய்வதற்கேயாகும்’என தேசிய அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த மண்டல் ஆணையத்தின் தலைவர் பி.பி.மண்டல் கூறியிருந்தார். அவர் கூறியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் தான் சமமற்றவர்களை சமமாக நடத்தும் வகையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருகிறது. அதனால் தான் தமிழகத்தில் இன்னும் சமமின்மை நீடிக்கிறது.
நீதிக்கட்சி ஆட்சியில் 1921-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டு 1927-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடங்கி இன்றைய ஆட்சியாளர்கள் கடைபிடித்து வரும் இடஒதுக்கீட்டு முறை வரை வன்னியர் சமூகத்திற்கு அநீதி தான் இழைக்கப்பட்டு வருகிறது. சமூகநீதியைப் பொறுத்தவரை வன்னியர் சமுதாயம் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, மற்றவர் நலனுக்காக உழைக்கக்கூடிய, உழைப்பின் பயனை அனுபவிக்க முடியாத சமுதாயமாகவே நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றும் நோக்கத்துடன் தான் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி போராடுகிறோம்.
சமூக, கல்வி, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் வன்னியர் சமுதாயத்தை கைதூக்கி விடுவதற்காக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு மனமுவந்து ஆதரவு அளிக்க வேண்டியது அனைத்து சமூகங்களின் கடமை ஆகும். சகோதர சமுதாயங்களின் சமூகநீதிக்காக இந்தக் கடமையை வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் அவை தொடங்கப்பட்ட நாளில் உளமாற நிறைவேற்றி வருகின்றன.
1980-ஆம் ஆண்டில் வன்னியர் சமுதாயம் தொடங்கப்பட்ட போது நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது தான். தமிழ்நாட்டின் மிகப் பெரிய சமுதாயமான வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூன்றாவது தீர்மானம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்பதாகும். இந்த நிலைப்பாட்டில் வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் அப்போதும், இப்போதும், எப்போதும் மிகவும் உறுதியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அதுவும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக வழங்க வேண்டும் என்று இதுவரை வேறு எந்த தலைவரும் போராட வில்லை. நான் மட்டும் தான் கடந்த 40 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறேன். வன்னியர் சங்கத்தின் தியாகம் நிறைந்த போராட்டங்களின் பயனாகத்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இடஒதுக்கீட்டுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, 107 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது.
அதற்குப் பிறகும் கூட இஸ்லாமியர்களுக்கு 3.5%, அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீட்டை போராடி பெற்றுத் தந்ததும் பாமக தான். அதை அந்த சமுதாயத்தின் தலைவர்களே ஒப்புக் கொள்வார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட பாடநூலில் கருத்துகள் இடம் பெற்ற போது, அதற்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது நான் தான்.
அதுமட்டுமின்றி, அரசியல் அழுத்தங்களைக் கொடுத்தும், வழக்குத் தொடர்ந்தும் பாடநூலில் இருந்து நீக்க வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். இதற்காக நாடார் சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னையில் எனக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவும் நடத்தப்பட்டதை அனைவரும் அறிவர்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாவிதர், வண்ணார், பர்வதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர் ஆகிய சட்டநாதன் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட 7 சாதிகளின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்; முத்தரையர், குரும்பர், குயவர் உள்ளிட்ட சமுதாயங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்றும் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயங்களின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான். அதே நோக்கத்துடன் தான் இப்போது வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறது.
கடந்த காலங்களில் அனைத்து சமுதாய நலன்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் எவ்வாறு போராடினவோ, உழைத்தனவோ, அதேபோல் இப்போது வன்னியர் 20% தனி இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு அனைத்து சமுதாயங்களும் மனமுவந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வன்னியர் சமூகத்திற்கு மட்டுமின்றி அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தான் பாமகவின் கொள்கை.
அதை பாமக நிச்சயம் சாதிக்கும். கடந்த காலங்களில் எந்த சமுதாயத்திற்கு, என்ன பாதிப்பு வந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி எப்படி ஓடோடி வந்து குரல் கொடுத்ததோ, போராடியதோ அதேபோல், இனி வரும் காலங்களிலும் அனைத்து சமுதாயங்களின் நலன்கள், சமூகநீதிக்காக போராடும், குரல் கொடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் தனது கடிதத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago