திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘நிவர்’ புயலுக்கு 2,272 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, மணிலா மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
புதுச்சேரி அருகே கரையைகடந்த ‘நிவர்’ புயல், திருவண்ணாமலை மாவட்டம் வழியாக பயணித்துள்ளது. இதனால், நேற்று முன் தினம் தொடங்கிய மழை, நேற்று காலை வரை நீடித்தது. வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், போளூர் மற்றும் ஜமுனாமரத்தூர் பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியது. அதே நேரத்தில் வெயிலும் அடிக்க தொடங்கியது. பலத்த காற்றுக்கு மாவட்டத்தில் 66 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
113 வீடுகள் சேதம்
ஆரணி அருகே மாமண்டூர் கிராமத்தில் மரம் முறிந்து விழுந்ததில், தொழிலாளியின் வீடு இடிந்து சேதமடைந்தது. இதேபோல், மாவட்டத்தில் குடிசை வீடுகள் உட்பட 113 வீடுகள் சேதமடைந்துள்ளன. 267 முகாம்களில் 7,846 பேர் தங்க வைக்கப்பட்டு, உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தாழ்வானப் பகுதிகளில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றுவதற்கான முயற்சியில் உள்ளாட்சித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். பலத்த காற்றுக்கு, பல இடங்களில் மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. 237 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. அதனை சரி செய்யும் பணியில் மின் வாரிய துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உயிர்ச் சேதம் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 7 மாடுகள் உட்பட 18 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
ஜவ்வாதுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், அங்கிருந்து உற்பத்தியாகும் மஞ்சலாறு, செய்யாறு மற்றும் கமண்டல நாக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சாத்தனூர் அணைக்கும், தென்பெண்ணையாறு மூலம் தண்ணீர் வரத்து உள்ளதால், அக்கரையோர மக்களை கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மழையின் தாக்கம் தீவிரமாகஇருந்ததால் 2,272 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் மற்றும் மணிலா பயிர்களை தண்ணீர் சூழ்ந்துவிட்டது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வடிந்தாலும், நெற்பயிர்கள் பிழைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
மேலும், பலத்த காற்று வீசியதால் வாழையும் சேதமடைந்துவிட்டது. செங்கம், புதுப்பாளையம், சந்தவாசல், கலசப்பாக்கம் மற்றும் போளூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்துள்ளன. கரும்பு மற்றும் தென்னை மரங்களும் சாய்ந்துள்ளன. இதேபோல், தானிய பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.
39 ஏரிகள் நிரம்பின
தி.மலை மாவட்டத்தில் ஏற்கெனவே, 1950 ஏரிகளில் 19 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருந்தது. இந்நிலையில், நிவர் புயலால் பெய்த கன மழைக்கு, மேலும் 39 ஏரிகள் முழு கொள்ள ளவை எட்டியது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 9 ஏரிகளும் (ஏற்கெனவே 4 ஏரிகள்) மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் 30 ஏரிகளும் (ஏற்கெனவே 15 ஏரிகள்) முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும், 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 225 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 74 சதவீதம் 499 ஏரிகளும் நிரம்பி உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago