தூத்துக்குடி அருகே ரூ.500 கோடி ஹெராயின் சிக்கிய சம்பவம்: பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா?- இலங்கையைச் சேர்ந்த 6 பேரிடம் உளவுத்துறை தீவிர விசாரணை

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் ரூ.500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 6 பேரிடம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடிக்கு தெற்கே சர்வதேச கடல் எல்லையையொட்டிய இந்திய கடல் பகுதியில் ஏராளமான போதைப் பொருட்களுடன் இலங்கையை சேர்ந்த படகை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று மடக்கிப் பிடித்தனர்.

அந்த படகில் ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் மற்றும் 20 சிறிய பெட்டிகளில் சிந்தட்டிக் போதைப் பொருட்கள் இருந்தன. மேலும் 5 நவீன துப்பாக்கிகள், சேட்டிலைட் போன் உள்ளிட்டவைகளும் அந்த படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடத்தியதில் அவர்கள் 6 பேரும், படகின் கேப்டனான இலங்கை நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல் (40) மற்றும் வான குலசூரிய ஜீவன் (30), சமீரா (32), வர்ண குலசூர்யா மனுவேல் ஜீவன் பிரசன்னா (29), நிசாந் கமகே (46), லட்சுமணகுமார் (37) என்பது தெரியவந்தது.

மேலும், இந்த போதைப் பொருட்களை பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து பாய்மரப் படகு மூலம் கடத்தி வந்து, நடுக்கடலில் வைத்து இலங்கைப் படகுக்கு மாற்றியதும் தெரியவந்தது.

இந்த போதைப் பொருட்களை மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 6 பேரையும், போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் படகையும் கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் வைபவ் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் துறைமுகத்தை வந்தடைந்தனர்.

தொடர்ந்து இலங்கையை சேர்ந்த 6 பேரையும் வைபவ் கப்பலில் வைத்து கடலோர காவல் படை ஐஜி புருஷோத்தமன், டிஐஜி ஆனந்த் சர்மா, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு டிஐஜி புருணே, ஆய்வாளர் பரிமளா, கியூ பிரிவு டிஎஸ்பி சந்திரகுமார், ஆய்வாளர் அனிதா, தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்ட மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

தீவிரவாதிகளுடன் தொடர்பா?

படகில் 5 நவீன துப்பாக்கிகள் இருந்ததாலும், இவை பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டதாலும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக போதைப் பொருள் கடத்தப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார் பகல் 12.30 மணி வரை சுமார் 5 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட 6 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களையும் கடலோர காவல் படையினர் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து 6 பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் மத்திய, மாநில உளவுத் துறையினரும், உள்ளூர் போலீஸாரும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இந்த விசாரணைக்கு பின் 6 பேரும் தூத்துக்குடியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.

தொடர்ந்து மதுரையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள் என்றும், 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. நடுக்கடலில் ரூ.500 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பிடிபட்டுள்ளது தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்