ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது. திமுகவைப் பற்றி அமித் ஷாவுக்கு என்ன தெரியும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திருநெல்வேலி - தென்காசி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது:

“கடந்த 22ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பதுபோல அவரது பேச்சு இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனைப் பட்டியல் போடத் தயாரா என்று அமித் ஷா கேட்கிறார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா? அல்லது பாஜக ஆட்சி வந்த பிறகு வேற்று கிரகத்தில் இருந்து குதித்தாரா என்று தெரியவில்லை.

இதை எந்த விழாவில் கேட்கிறார் என்றால் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் தொடக்கவிழாவில்தான் கேட்கிறார் அமித் ஷா. ஐயோ பாவம். அவருக்காகப் பரிதாபப்படுகிறேன். மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்து 80 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டதே திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான்.

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன நன்மைகள் எல்லாம் செய்துள்ளோம் என்பதை நான் பட்டியல் போட ஆரம்பித்தால், இன்று முழுவதும் பட்டியல் போடலாம். அந்த அளவுக்கு அபரிமிதமான திட்டங்களைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

* இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11 விழுக்காட்டை தமிழகத்துக்குக் கொண்டு வந்தோம்.

* மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

* இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பெருமை கொண்ட தமிழ் மொழியைச் செம்மொழியாக்கும் பெருங்கனவு 100 ஆண்டுகளாக நம் தமிழறிஞர்களுக்கு இருந்தது. செம்மொழித் தகுதியைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம்.

* கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டன.

* ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்தது.

* 1553 கோடி ரூபாய் செலவில் சேலம் உருக்காலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

* சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம்.

* 120 கோடி ரூபாய் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு.

* 1650 கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான தொடக்கம்.

* 2427 கோடி ரூபாய் செலவில் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடக்கம்.

* நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம்

* 908 கோடி ரூபாய் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் .

* அடக்குமுறை பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.

* தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

* 1828 கோடி ரூபாய் செலவில் 90 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

* சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம்.

* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் .

* திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

* சென்னைக்கு அருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக்கழகம்.

* திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம்.

* கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப்பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்தக் காலகட்டத்தில் உருவாகின.

* கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளிப்பூங்கா.

- இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்துக்கு என்ன நன்மை செய்தீர்கள் என்று பணிவோடு கேட்பதாக அமித் ஷா சொல்லி இருக்கிறார். அவருக்கு நானும் பணிவோடு பதில் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு முச்சந்தியில் நின்று நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்வதற்குத் தயார் என்று அமித் ஷா சொல்லி இருக்கிறார். அவர் மத்திய உள்துறை அமைச்சர். அதனால் முச்சந்திக்கு வாருங்கள் என்று அழைக்க விரும்பவில்லை. தமிழகத்துக்கு பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகள், புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை கொண்ட பட்டியலை வெளியிடுங்கள். அதன்பிறகு பேசலாம்.

அமித் ஷா என்றால் எல்லாம் தெரிந்தவர், சாணக்கியர், அவருக்கு எல்லா மாநிலங்களும் அத்துப்படி என்று ஊடகங்கள் அவரைப் பூதாகரமாக்கிக் காட்டுகின்றன. அவருக்கு முதலில் திமுக என்றால் என்ன மாதிரியான அரசியல் கட்சி என்பதே தெரியவில்லை.

எழுபது ஆண்டு இயக்கம் இது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த இயக்கம் இது. ஒரு முறையல்ல, ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம் இது. தமிழகச் சட்டப்பேரவையில் 100 உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் இது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி இது.

அது எதுவும் தெரியாமல், ஏதோ மந்திரவாதியைப் போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் பார் என்று ஷோ காண்பிக்க, இது வட மாநிலம் அல்ல. இது தமிழ்நாடு என்பதை, திமுக தொண்டனாக அமித் ஷாவுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் பாஜக அரசால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது? எதுவும் இல்லை. விவசாயிகளைச் சிதைக்கும் வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தீர்கள். சிறுபான்மையினர் குடியுரிமையைக் காவு வாங்கும் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.

ஈழத்தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க மறுத்தீர்கள்! இன்று வரையிலும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்கிறது.

புதிய கல்விக் கொள்கை மூலமாக கல்விக் கனவைச் சிதைக்கப் பார்க்கிறீர்கள். நீட் தேர்வு மூலமாக மருத்துவக் கனவுக்கு சவக்குழி தோண்டி விட்டீர்கள்.

எல்லா வகையிலும் மத்திய அரசின் பயன்பாட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. இந்தியைத் திணிப்பதன் மூலமாகத் தமிழைத் தள்ளி வைக்கிறீர்கள். மத்தியக் கல்வியில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. வங்கி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளில் இந்தி திணிக்கப்படுகிறது.

மத்திய அரசின் பணியிடங்களில் தபால் துறையாக இருந்தாலும் ரயில்வே ஆக இருந்தாலும் தமிழர்கள் உள்ளே நுழையத் தடை ஏற்படுத்துகிறீர்கள். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறீர்கள்.

மாணவர்களுக்கான கல்விக் கடன் கிடைப்பது இல்லை. சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கிறீர்கள். இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் ஓரவஞ்சனையோடு நடந்து கொள்கிறீர்கள்.

ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டு வந்து காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழ்ச் செம்மொழி நிறுவனத்தை முடக்கி வைத்தீர்கள். கீழடி மூலமாக தமிழ்நாடு பெருமை அடைந்துவிடக் கூடாது எனச் சதி செய்தீர்கள்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினீர்கள். புதிய மின்சாரத் திட்டங்கள் மூலமாக விவசாயிகளின் இலவச மின்சாரத்தைப் பறிக்க முயற்சி செய்தீர்கள்.

உங்களது பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டின் பெருந்தொழில் முதல் சிறு தொழில் வரை அனைத்தும் அழிந்ததன.

இயற்கைப் பேரிடர் கால நிதிகளைத் தர மறுத்தீர்கள். மாநில அரசுக்குத் தர வேண்டிய எந்த நிதியையும் முழுமையாகத் தரவில்லை. ஜிஎஸ்டி கட்டணத்தை வசூல் செய்து மாநிலத்துக்குத் தர வேண்டிய பாக்கியைத் தர மறுத்தீர்கள்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு என்று தமிழ்நாடு சட்டப்பேரவை போட்டு அனுப்பிய இரண்டு தீர்மானத்தையும் கிடப்பில் போட்டீர்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை முடிவெடுக்காமல் முடக்கி வைத்துள்ளீர்கள்.

இந்தக் கரோனா காலத்தில் கூட தமிழக அரசு கேட்ட நிதியை இரக்கமில்லாமல் மறுத்தீர்கள். தமிழக அரசைக் கொத்தடிமை போல வைத்துள்ளீர்கள். தமிழ்நாட்டை உங்களது அடிமை மாநிலம் போல நடத்துகிறீர்கள். தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களைப் போலப் பாவிக்கிறீர்கள்.

இப்படித்தான் பாஜக நடந்து கொள்கிறதே தவிர, தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை.

அதேபோல் அமித் ஷா இன்னொரு குற்றச்சாட்டையையும் வைத்துள்ளார். 'வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். தமிழக மக்கள் வாரிசு அரசியலுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்' என்று பேசி இருக்கிறார். அவர் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை?

மகனை எப்படியாவது மத்திய மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டு இருப்பவர் பன்னீர்செல்வம்தான். அவருக்குத்தான் அமித் ஷா பதில் சொல்கிறாரா? வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு அமைச்சர் அமித் ஷாவுக்கோ பாஜகவுக்கோ அருகதை இல்லை. வாரிசுகளால் நிரம்பி வழியும் கட்சிதான் பாஜக.

அமித் ஷாவின் மகன் - ஜெய்ஷா இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருக்கிறார். அது அவருக்குத் தகுதியின் அடிப்படையில் கிடைத்த பதவியா? அல்லது அப்பா உள்துறை அமைச்சர் என்பதால் கிடைத்த பதவியா?

மத்தியப் பாதுகாப்பு அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங். அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் எம்எல்ஏ ஆக இருக்கிறார்.

மேனகா காந்தி மகன் - வருண்காந்தி மூன்றாவது முறையாக எம்.பி.யாக இருக்கிறார். இமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலின் மகன்தான் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர். ஒடிசா மாநில முன்னாள் எம்.பி.யான தேபேந்திர பிரதானின் மகன்தான் இன்றைய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்துரா ராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங் நான்காம் முறையாக எம்.பி.யாகி இருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மகன் ராஜ்வீர் சிங் இரண்டாம் முறையாக எம்.பி.யாக இருக்கிறார். கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா எம்.பி.யாக இருக்கிறார். இரண்டாவது மகன் அரசியலுக்குத் தயாராகி வருகிறார். மத்திய முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் 2009 முதல் அரசியலில் இருக்கிறார். தற்போது இரண்டாம் முறை எம்.பி.யாக இருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். இவரது தாயார் 3 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தார். முன்னாள் டெல்லி சபாநாயகர் மகன் விஜய் கோயல் கடந்த முறை மத்திய அமைச்சர். மூன்று முறை மக்களவை எம்.பி,. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். டெல்லி பாஜக தலைவராக இருந்தார். சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங் மகன் அபிஷேக் சிங், கடந்த முறை எம்.பி.யாக இருந்தார்.

தேவேந்திர பட்னாவிஸின் தந்தை கங்காதர் பட்னாவிஸ் எம்.எல்.சி.யாக இருந்தார். கோபிநாத் முண்டே மகள் பங்கஜா முண்டே எம்எல்ஏவாக இருக்கிறார். 1999 முதல் பாஜக தலைவர்கள் 31 பேரின் வாரிசுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருப்பதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைவர்களின் வாரிசுகள் 28 பேருக்கு பாஜக டிக்கெட் வழங்கியது.

இப்படி என்னால் சொல்லிக்கொண்டே போக முடியும். இவை எல்லாம் அமைச்சர் அமித் ஷாவுக்குத் தெரியாதா? இவர்கள் எல்லாம் அவருக்குத் தெரியாமல் அரசியலுக்குள் வந்துவிட்டார்களா? அல்லது இவர்களை எல்லாம் அமித் ஷாவுக்குப் பிடிக்காதா?

திராவிட இயக்கம் என்பதே குடும்ப இயக்கம்தான். திமுகவின் மாநாடுகளுக்குக் குடும்பம் குடும்பமாக வந்து சோறு பொங்கி சாப்பிட்டு, தலைவர்களின் கருத்துரைகளைக் கேட்டுச் சென்ற காட்சியை தமிழகம் இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் அமித் ஷாவுக்குத் தெரியாது. அவர் ஊழலைப் பற்றிப் பேசுகிறார்.

வலது பக்கம் உட்கார்ந்து இருக்கும் பழனிசாமி, ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இடது பக்கம் உட்கார்ந்திருக்கும் பன்னீர்செல்வம், சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது?

ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் சிறைத் தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி பேசுவதற்கு அமித் ஷாவுக்கு உரிமை உண்டா?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, இன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்ற பழனிசாமியை அருகில் வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு உரிமை உண்டா?

வாரிசே இல்லாத ஜெயலலிதாதான் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தார். ‘எனக்கு குடும்பமா குட்டியா? நான் எதற்காக சம்பாதிக்கப் போகிறேன். ஒரு ரூபாய் சம்பளம் போதும்' என்று சொன்ன ஜெயலலிதாதான் பல்லாயிரம் கோடி சம்பாதித்தார். அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தவர்கள்தான் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும்.

சசிகலாவின் 2000 கோடி ரூபாய் முடக்கம் - 1600 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் என்றெல்லாம் செய்திகள் வருகிறதே, இதனை சசிகலாவுக்கு சம்பாதித்துக் கொடுத்தவர்கள் யார்? அமித் ஷாவுக்கு வலது பக்கம் உட்கார்ந்திருக்கிற பழனிசாமியும், இடது பக்கம் உட்கார்ந்திருக்கிற பன்னீர்செல்வமும்தான்.

இவர்களை அருகே வைத்துக் கொண்டுதான் உலக உத்தமர் வேடம் போடுகிறார் அமித் ஷா. இந்த ஊழல் நாடகங்கள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதது அல்ல. 2016ஆம் ஆண்டு தமிழகத்துக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த அமித் ஷா என்ன சொன்னார், 'இந்தியாவிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சி தான்' என்று சொன்னார். அத்தகைய ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கும் பழனிசாமியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பேச அமித் ஷாவுக்குத் தகுதி இருக்கிறதா?

* நெடுஞ்சாலை டெண்டர்களில் ஊழல் செய்தவர் இந்த மாநிலத்தின் முதல்வர் பழனிசாமி!

* வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்து வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கியுள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்!

* உள்ளாட்சியை ஊழலாட்சியாக மாற்றி ஸ்மார்ட் சிட்டி வரை அனைத்திலும் கொள்ளையடித்து முடித்துவிட்டார் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி!

* தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தில் இருந்து நிலக்கரி இறக்குமதி வரை ஊழல் செய்து வருகிறார் மின்துறை அமைச்சர் தங்கமணி!

* குட்கா முதல் கரோனா வரை கொள்ளை அடித்து வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

* பருப்பு கொள்முதலில் காமராஜும்,

* பால் கொள்முதலில் ராஜேந்திரபாலாஜியும்

* முட்டை கொள்முதலில் சரோஜாவும்

* பத்திரப்பதிவில் வீரமணியும்

* கனிம வளத்தில் சி.வி.சண்முகமும் செய்து வரும் செயல்கள் கோட்டையையே ஊழல் நாற்றம் அடிக்க வைத்து வருகின்றன!

* வாக்கி டாக்கி கொள்முதலில் ஊழல்!

* கொள்ளை அடிப்பதற்காகவே குடிமராமத்துப் பணிகள் செய்யப்படுவதாகக் கணக்குக் காட்டுகிறார்கள்.

* போடாத சாலைகளுக்கு டெண்டர்கள் விடுகிறார்கள்.

* டெண்டர் விட்ட சாலைகளைப் போடுவது இல்லை!

* புதிதாக யாரும் தொழில் தொடங்க வர முடியாத அளவுக்கு கமிஷன் கொள்ளை அதிகமாக நடக்கிறது!

* கிரானைட்டில் கொள்ளை!

* ஆற்றுமணல்கள் சூறையாடப்படுகின்றன!

* தாதுமணல் கொள்ளையடித்து முடிக்கப்பட்டுவிட்டது!

* மணல் குவாரிகளுக்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை!

இப்படி மொத்தம் ஊழல் மயம்! லஞ்ச மயம்! கொள்ளை மயம்! இவர்களை எல்லாம் கூட்டி வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கப் போவதாக அமித் ஷா பேசுகிறார்.

பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அடித்த கொள்ளையை வைத்து மிரட்டி பாஜக பணிய வைத்ததா, அல்லது அடித்த கொள்ளையில் இருந்து தப்பிக்க அவர்கள் பாஜகவிடம் சரணாகதி அடைந்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை, இவர்களது கொள்ளைக்கு மத்திய பாஜக அரசு துணை போகிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்ட விரும்புகிறேன்.

ஆனால், இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கும், அவர்களைக் காப்பாற்றும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.

ஸ்டாலினாகிய என்னை அரசியல் வாரிசு என்று அமித் ஷா சொல்வாரானால், ஆம்! நான் அரசியல் வாரிசுதான். நான் கருணாநிதியின் மகன். இதை விட எனக்கு வேறு பெருமை தேவையில்லை. நான் அவரது ரத்த வாரிசு மட்டுமல்ல, கொள்கை வாரிசு. திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது.

பெரியாரின் கொள்கைக்கு வாரிசு நாங்கள். அண்ணாவின் கொள்கைக்கு வாரிசு நாங்கள். திராவிட இயக்கத்தின் வாரிசு நாங்கள். 100 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக சமூக நீதியை உருவாக்கிய நீதிக்கட்சியின் வாரிசு நாங்கள். பேராசிரியருக்கு, நாவலருக்கு, சொல்லின் செல்வருக்கு, புரட்சிக் கவிஞருக்கு, கலைவாணருக்கு, சிந்தனைச் சிற்பிக்கு வாரிசு நாங்கள்.

ஸ்டாலின் என்பது என்னுடைய தனிப்பட்ட பெயரல்ல. ஒரு இயக்கத்தின் பெயர். நான் தனிமனிதனல்ல. நான் மட்டுமல்ல, திமுகவில் யாரும் தனிமனிதர்கள் அல்ல. நாங்கள் அனைவரும், ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது.

இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்