பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு எதையுமே செய்யவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி கிழக்கு, மத்திய மாவட்ட திமுக மற்றும் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், காணாலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் திமுக முன்னோடிகள் 153 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் 120 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப், தென்காசி தெற்கு மாவட்டத்தில் 150 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன், தென்காசி வடக்கு மாவட்டத்தில் 245 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை ஆகியோர் பொற்கிழி வழங்கினர்.
நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகம் ஒரு காலத்தில் எல்லா வகையிலும் முன்னேறிய மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது எல்லா வகையிலும் பின்னோக்கிய மாநிலமாக உள்ளது. தமிழகம் இழந்த பெருமையை மீட்டாக வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, வேளாண்மை, பள்ளிக் கல்வி, உயர்கல்வி, பெண்கள் முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோருக்கு உயர்வளிப்பதில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது திமுக. கருணாநிதி முதல்வராக இருந்த ஒவ்வொரு முறையும் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசென்றார். அதனால்தான் 5 முறை ஆட்சியை கைப்பற்றினார்.
திமுகவை நேரடியாக வீழ்த்த முடியாதவர்கள் பல்வேறு மறைமுக அஸ்திரங்களை ஏவி, சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர். மக்களிடம் மத உணர்வுகளை தூண்டி விட்டு, திமுகவை வீழ்த்திவிடலாம் என நினைக்கிறார்கள். ஆன்மிகத்தைக் காக்க யார் யாரோ அவதாரம் எடுத்ததாக நடித்துக்கொண்டு உள்ளனர். உண்மையிலேயே கோயில்களை, அறநிலையத் துறையை காத்தது திமுக ஆட்சிதான்.
ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியதும், நெல்லையப்பர் கோயில் திருப்பணிகள் செய்ததும் திமுக ஆட்சியல் தான். கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க அண்ணா உத்தரவிட்டார். அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி கும்பகோணத்தில் தங்கியிருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
1967 முதல் 1975 வரை திமுக ஆட்சியில் சுமார் 5 ஆயிரம் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு செய்யப்பட்டது. 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் 2459 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் 4539 கோயில்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டது.
அறநிலைய பாதுகாப்புக் குழுவை அமைத்தவர் கருணாநிதி. கிராமப்பற பூசாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம், வடமொழியில் உள்ள திருக்கோயில் ஆகம விதிகளை தமிழில் வெளியிட முயற்சித்தவர் கருணாநிதி. தமிழ் அர்ச்சனை நூல்களை வெளியிட்டவர் கருணாநிதி. 20 சைவத் திருமுறை ஆகம பயிற்சி மையங்கள், 7 வைணவ திவ்ய பிரபந்த பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. சிதிலமடைந்து கிடந்த 48 கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி. அறங்காவலர் குழுவில் மகளிர், ஆதிதிராவிடரை இடம்பெறச் செய்தவர். 114 கோயில்களில் நூலகம் அமைத்துக் கொடுத்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகலாகலாம் என சட்டம் கொண்டுவந்தார்.
திமுக ஆட்சி கால கோயில் திருப்பணிகளை குன்றக்குடி அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார், திருவாடுதுறை ஆதீனம் போன்ற பல்வேறு ஆன்மிக பெரியோர்களும் பாராட்டினர். இந்த வரலாறுகள் எதுவும் தெரியாமல் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப் போல் சிலர் கிளம்பியுள்ளனர். அவர்கள் இந்து மதத்தைக் காப்பாற்ற அவதாரம் எடுத்ததுபோல் நடித்துக்கொண்டு உள்ளனர். தங்களையும், தங்கள் கட்சியையும் காப்பாற்றிக்கொள்ள இந்து மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இந்து மதக் காப்பாளர்கள் அல்ல. வளராத தங்கள் கட்சியை வளர்க்க இந்து மதத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஒன்றாக வாழும் மக்களை பிரிக்கப் பார்க்கிறார்கள். மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்து பிளக்கப் பார்க்கிறார்கள்.
மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக, காங்கிரஸ் கூட்டணி என்ன சாதனைகளை செய்தது என சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில் கேட்கிறார்.
மெட்ரோ ரயில் முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டதே திமுக ஆட்சியில் தான். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தமிழகத்துக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டால் இன்று முழுவதும் சொல்லலாம்.
தமிழ் செம்மொழி அந்தஸ்து, 56 ஆயிரம் கோடிக்கு மேல் கப்பல், நெடுஞ்சாலைத் துறை மூலம் திட்டப் பணிகள், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. சேலம் உருக்காலை சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்து. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே பறக்கும் சாலை பணிகள் தொடக்கம், சேது சமுத்திர திட்டப்பணி தொட்க்கம், நெசவுத்தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் என பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்துக்கு பாஜக ஆட்சியில் செய்த திட்டங்களை முதலில் அமித்ஷா வெளியிட வேண்டும். பாஜக அரசு விவசாயிகளைச் சிதைக்கும் வேளாண் சட்டங்கள், சிறுபான்மையினர் குடியுரிமையை காவு வாங்கும் சட்டம், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க மறுப்பு, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்கள் கல்விக் கனவை சிதைக்க முயற்சி, நீட் தேர்வு மூலம் மருத்துவ கனவுக்கு சவக்குழி தோண்டியது என எல்லா வகையிலும் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது.
இந்தி திணிப்பு, மத்திய கல்வியில் சமஸ்கிருத திணிப்பு, வங்கி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளில் இந்தித் திணிப்பு, விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் முயற்சி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க மறுப்பு, காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், கீழடி மூலம் தமிழகம் பெருமையடைந்துவிடாமல் தடுக்க சதி, ஸ்டெர்லைட் ஆலை இயங்கச் செய்ய துப்பாக்கிச்சூடு, புதிய மின்சார திட்டம் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழில்களை அழைத்தது, மாநில அரசுக்கு தர வேண்டிய நிதியை முழுமையாக தராமல் இருந்தது. தமிழக அரசை கொத்தடிமை போல் நடத்துவது, தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களைப் போல் பாவிக்கிறது. பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு எதையுமே செய்யவில்லை.
வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்றும் அமித்ஷா கூறுகிறார். வாரிசு அரசியல் பற்றி பேச அமித்ஷாவுக்கோ, பாஜகவுக்கோ துளியளவும் தகுதி இல்லை. வாரிசுகளால் நிரம்பி வழியும் கட்சிதான் பாஜக. அமித்ஷா மகன் இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருப்பது தகுதி அடிப்படையில் கிடைத்த பதவியா. 1999 முதல் 31 பாஜக தலைவர்களின் வாரிசுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருப்பதாக ஹாத்வே பல்கலைக்கழக ஆய்வு கூறியுள்ளது. கடந்த மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் வாரிசுகள் 28 பேருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கியது. இதெல்லாம் அமித்ஷாவுக்கு தெரியாதா.
திராவிட இயக்கம் என்பதே குடும்ப இயக்கம்தான். திமுக மாநாடுகளுக்கு குடும்பம் குடும்பமாக வந்து தலைவர்கள் கருத்துகளை கேட்டுச் சென்ற காட்சி தமிழகத்தில் இப்போதும் நடக்கிறது.
மேலும், ஊழல் குறித்து அமித்ஷா பேசுகிறார். அவரது வலதுபுறம் இருந்த முதல்வர் பழனிசாமி ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இடதுபுறம் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழலைப் பற்றி பேச அமித்ஷாவுக்கு உரிமை உண்டா. சொத்துக்குவிப்பு வழக்கில் இப்போதும் சிறையில் இருப்பவர் சசிகலா. அவரது காலை நோக்கி ஊர்ந்து சென்று முதல்வர் பதவி பெற்ற பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி பேச அமித்ஷாவுக்கு உரிமை உள்ளதா. வாரிசே இல்லாத ஜெயலலிதா தான் பல்லாயிரம் கோடி கொள்ளையடித்தார். அவருக்கு சம்பாதித்து கொடுத்தவர்கள்தான் பழனிசாமியும், பன்னீர்செல்வமும்.
2016ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா இந்தியாவிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சிதான் என்று சொன்னார். ஜெயலலிதா ஆட்சியை நடத்துவதாகக் கூறும் பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி பேச அமித்ஷாவுக்கு தகுதி உள்ளதா. தமிழக அமைச்சர்களின் ஊழல்களால் கோட்டையே ஊழல் நாற்றம் அடிக்கிறது.
பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அடித்த கொள்ளையை வைத்து மிரட்டி பாஜக பணிய வைத்ததா என்ற சந்தேகம் எழுகிறது. அடித்த கொள்ளையில் இருந்து தப்பிக்க பாஜகவிடம் அதிமுக சரணாகதி அடைந்துவிட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது. இவர்களது கொள்ளைக்கு மத்திய பாஜக அரசு துணை போகிறது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்ட விரும்புகிறேன். இவர்களுக்கு பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளனர். நான் அரசியல் வாரிசுதான். நான் கருணாநிதியின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் அவரது ரத்த வாரிசு மட்டுமல்ல, கொள்கை வாரிசு. பெரியார், அண்ணாவின் கொள்கைக்கு வாரிசு நாங்கள். திராவிட இயக்கத்தின் வாரிசு நாங்கள். சமூக நீதியை உருவாக்கிய நீதிக்கட்சியின் வாரிசு நாங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், மைதீன்கான், எம்பிக்கள் எம்பி தனுஷ் எம்.குமார் (தென்காசி), ஞானதிரவியம் (திருநெல்வேலி) ஆகியோர் பேசினர். பூங்கோதை எம்எல்ஏ மருத்துவ சிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago