பாமக அறிவித்துள்ள தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் பாமகவில் உள்ள வன்னியர்களுக்கு மட்டுமல்ல; அனைத்துக் கட்சிகளில் உள்ள வன்னியர்களின் நலனுக்காகவும்தான் என்பதைப் புரியவைக்க வேண்டும். நான் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும் போராடவில்லை; அனைத்து சமுதாய மக்களின் சமூக நீதிக்காகவும் தான் போராடுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வருமாறு:
“பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து கடந்த 22ஆம் தேதி நடத்திய கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தில், தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மற்றும் பிற சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் முதற்கட்ட போராட்டம் நடத்தப்படும், தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பின்னர் இறுதிக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி அடுத்த இரு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளன. அவற்றின் நிறைவாக பிப்ரவரி மாதத்தில் இட ஒதுக்கீடு கோரி மாபெரும் இறுதிக்கட்ட போராட்டம் நடத்தப்படும். முதற்கட்ட போராட்டத்திற்கான ஏற்பாடுகளை பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 7 பேர் கொண்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன் பெருந்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அடுத்தகட்டமாக டிசம்பர் 10-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள்திரள் போராட்டம் நடத்தப்பட விருக்கிறது. அதுகுறித்த விவரங்களைப் போராட்டக் குழு சார்பில் தலைவர் ஜி.கே.மணி தனியாக அறிவிப்பார்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், முந்தைய போராட்டங்களை முன் நின்று நடத்திய அனுபவம் கொண்டவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதல்களில் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள்தான் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். தங்களின் பகுதிகளில் உள்ள பிற சமுதாய மக்கள், பிற அரசியல் கட்சிகளில் உள்ள வன்னிய சொந்தங்கள் ஆகியோரைச் சந்தித்து வன்னியர்களின் சமூக நிலை, அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதற்கான தேவைகள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கிக் கூறி தெளிவுபடுத்த வேண்டும்.
பாமக அறிவித்துள்ள தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள வன்னியர்களுக்கு மட்டுமல்ல; அனைத்துக் கட்சிகளில் உள்ள வன்னியர்களின் நலனுக்காகவும்தான் என்பதைப் புரியவைக்க வேண்டும். நான் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும் போராடவில்லை; அனைத்து சமுதாய மக்களின் சமூக நீதிக்காகவும்தான் போராடுகிறேன் என்ற உண்மையை பிற சமுதாய மக்களிடம் எடுத்துக் கூறி அனைத்துத் தரப்பு மக்களையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வர வேண்டும்.
வன்னியர்களுக்கான 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விளக்கும் துண்டறிக்கைகளை வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மக்கள் கூடும் பகுதிகளில் வன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு போராட்டம் குறித்த பதாகைகளை அமைக்க வேண்டும்.
வன்னியர்களின் சமூக நீதியை உறுதி செய்வதற்காக இந்தப் போராட்டம் மற்ற கிராமங்களை விட எங்கள் கிராமத்தில் தான் மிகச்சிறப்பாக நடைபெற்றது; ஒட்டுமொத்த கிராமமும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் திரண்டு பாட்டாளிகளின் வலிமையையும், எழுச்சியையும் காட்டியது என்று ஒவ்வொரு பாட்டாளியும் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு அனைவரும் போட்டி போட்டுப் பணியாற்ற வேண்டும்.
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும் என்று என்னைத் தூண்டியவர்களே இளைஞர்களும், இளம் பெண்களும்தான். 1987ஆம் ஆண்டு தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டபோது எங்களில் பெரும்பான்மையினர் பிறக்கவில்லை; வேறு பலர் குழந்தைகளாகவோ, சிறுவர்களாகவோ இருந்திருப்போம். அதனால் அன்றைய போராட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியவில்லை. எனவே, வன்னியர்களின் 20% இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் ஒரு போராட்டம் நடத்தி, அதில் நாங்கள் பங்கேற்க வாய்ப்பும், அனுமதியும் தாருங்கள் என்று நீண்டகாலமாகவே இளைஞர்களும், இளம்பெண்களும் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இளைஞர்களாகிய உங்களின் கைகளில்தான் சமுதாயத்தின் எதிர்காலம் இருக்கிறது. அதனால்தான் கிராம அளவில் இந்த மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் வாய்ப்பை, கடமையை இளைஞர்களாகிய உங்களை நம்பி ஒப்படைத்திருக்கிறேன். கிராம அளவிலான முதல் களப் போராட்டத்தை இளைஞர்களாகிய நீங்கள்தான் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறேன். இந்த வாய்ப்பை எண்ணி இளைஞர்களும், இளம்பெண்களும் பெருமை கொள்கின்றனர்.
எனவே, சிறார்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த சமூக நீதிப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும், தேவையையும் நீங்கள் விளக்கிக் கூற வேண்டும்; அனைவரையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வர வேண்டும்; நமது கோரிக்கையின் நியாயத்தையும், போராட்டத்தின் வலிமையையும் ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்.
2021-ம் ஆண்டு வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் சமூக நீதி ஆண்டாக மலர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மூத்தவர்களின் வழிகாட்டுதலுடன் இதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன். நமது போராட்டம் வெல்லட்டும், சமூக நீதி மலரட்டும்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago