புதுவையை நெருங்கும் நிவர் புயல்; இன்றிரவு 8 மணியிலிருந்து கரையைக் கடக்கிறது; திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நிவர் தீவிரப் புயலாக மாறி இன்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும். அப்போது அதிகபட்சமாக 155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்வதாகவும், புயல் கடந்த பின்னரும் அதன் பாதிப்பு 6 மணி நேரத்திற்கு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நிவர் புயல் தற்போது தீவிரப் புயலாக (severe cyclonic storm) வலுப்பெற்றுள்ளது. இது தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 120 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று (நவ.25) இரவு அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடந்த பிறகு கடலோர மாவட்டங்களில் அதன் வலுவானது 6 மணி நேரத்திற்கு தொடரக்கூடும். அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.

இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

சூறாவளிக் காற்றானது மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் சமயங்களில் 85 கி.மீ. வேகத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை காலை முதல் பிற்பகல் வரை வீசக்கூடும்.

பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் சமயங்களில் 75 கி.மீ. வேகத்தில் திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை முற்பகல் முதல் பிற்பகல் வரை வீசக்கூடும். இந்த பலத்த காற்று, மழை காரணமாக குடிசை வீடுகள் பாதிக்கப்படலாம். விளம்பரப் பலகைகள் பாதிக்கப்படலாம்.

மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்புகள் பாதிக்கப்படலாம். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழலாம். வாழை, பப்பாளி தோட்டப் பயிர்கள் பாதிக்கப்படலாம். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூறும் அறிவுரைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல்கள் புயல் கரையைக் கடந்து செல்ல உள்ள மாவட்டங்களுக்கான எச்சரிக்கை ஆகும். புயல் கரையைக் கடந்த பின்னர் வலுவிழந்துவிடும். இந்தப் புயலைப் பொறுத்தவரை அதன் போக்கில் என்னென்ன மாற்றங்கள் என்ற 14 மணி நேர நிகழ்வுகள் குறித்துக் கூறியுள்ளோம்.

தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் இதைக் கணக்கிடுகிறோம். இன்று இரவு 8 மணியிலிருந்து புயல் கரையைக் கடக்கத் தொடங்கும். மையப்பகுதி 120 கிலோ மீட்டர் கொண்டது. தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் கண்காணித்துத் தகவல் அளிக்கும்.

கரையைக் கடக்கும் சமயத்தில் புதுவை, காரைக்கால், நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்திலும், சமயத்தில் 155 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் வீசும். சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.

கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை மற்றும் சென்னையில் புறநகர்ப் பகுதியில் மழை தொடரும். மழை தொடர ஆரம்பிக்கும். இரவு மழை அதிகரிக்கும்''.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்