எழுவர் விடுதலை; ஆளுநரை நேரில் சந்தித்து ஸ்டாலின் வலியுறுத்தல்: முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர்

By செய்திப்பிரிவு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்துக் கடிதம் அளித்து வலியுறுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உட்பட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன்மீது எந்தவொரு முடிவையும் ஆளுநர் தற்போது வரை எடுக்கவில்லை. இந்நிலையில், தன் மீதான தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்தத் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுகுறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுத்து உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். உரிய முடிவை ஆளுநர் எடுப்பார் என நம்புவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆளுநர் 7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலரும் 7 பேர் விடுதலை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து பதில் இல்லை. நேற்று முதல்வர் பழனிசாமி ஆளுநரைச் சந்திப்பதாக இருந்தது. அதில் 7 பேர் விடுதலை முக்கிய அஜண்டாவாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

எழுவர் விடுதலையில் ஆளுநரின் கால தாமதம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றிக் காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலான செயலாகும்.

29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசும் இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் 7 பேர் விடுதலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் நேரில் வலியுறுத்த, இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்துக் கடிதம் அளித்தார்.

அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இருந்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த கடிதம்:

“வணக்கம். தாங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சிறையில் நீண்டகாலம் வேதனையை அனுபவித்து வரும், நளினி, ஸ்ரீகரன் என்கிற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிக்குமாறு திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதை, தங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.

நாங்கள் வலியுறுத்திய போதும், அதிமுக அரசு அவர்களை விடுதலை செய்யப் பரிந்துரைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கடந்த 06.09.2018 அன்று பிறப்பித்த உத்தரவில், “அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ், பேரறிவாளன் தமிழ்நாடு ஆளுநரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இயல்பாகவே, சம்பந்தப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் பொருத்தமான முடிவை எடுக்கச் சுதந்திரம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலின் படியும் மற்றும் திமுக கொடுத்த அழுத்தத்தாலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவை இந்த விவகாரத்தைப் பரிசீலித்து, 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்படும் வகையில், மீதமுள்ள தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என்று, 09.09.2018 அன்று தங்களுக்குப் பரிந்துரைத்தது. அமைச்சரவையின் இந்தப் பரிந்துரை தங்களுடைய ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்திற்காகவும், தண்டிக்கப்பட்ட ஒரு நபருடைய தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 தெளிவாக எடுத்துரைக்கிறது. அமைச்சரவை பரிந்துரைத்தபோதும், ஆளுநர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான, சரிசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்துவதுடன், அநீதி இழைப்பதும் ஆகும்.

அரசியல் சட்டப் பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்றவர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் - அப்படித் தவிர்க்கவில்லையென்றால் அந்தப் பதவியில் இருப்போருக்கு உச்ச நீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தண்டனை பெற்றவர்களில் ஒருவரான பேரறிவாளன் 21.01.2020 அன்று தாக்கல் செய்த எஸ்.எல்.பி. மீதான உத்தரவில், "இரு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம். 2014ஆம் ஆண்டு ரிட் மனு (குற்றவியல் வரம்பு) 48-ன் மீது, 6.9.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் - மனுதாரரின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஏதாவது முடிவெடுத்துள்ளதா என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில், 3.11.2020 அன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது - உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பொதுவெளியில் செய்திகளாக வெளிவந்துள்ளன. தற்போது, 20.11.2020 அன்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள உறுதிமொழி ஆவணத்தில், "பன்னோக்கு விசாரணை முகமை மேற்கொண்டு வரும் விசாரணையில் மனுதாரர் (திரு. பேரறிவாளன்) குறித்து விசாரிக்கவில்லை". (பத்தி 4.5.1), "மனுதாரரால் கோரப்பட்டுள்ள விடுதலையானது மனுதாரருக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கும் இடைப்பட்ட விவகாரம்". (பத்தி 4.8). "இந்த விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்தப் பங்கும் இல்லை". (பத்தி 4.10) என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சிபிஐ தாக்கல் செய்துள்ள மேற்காணும் பதில் மனுவின்படி, மாநில அமைச்சரவை சட்டப்பிரிவு 163-இன் படி தங்களுக்குச் செய்துள்ள பரிந்துரையை ஏற்க ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை. மேலும், இது இரண்டு ஆண்டுகளாக தங்களது அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதென்பது மாநில நிர்வாகத்தைக் குறைத்துக் காண்பிப்பதோடு, மாநில அரசு சட்டத்தின் பாற்பட்டு நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவே, நீங்கள் 9.9.2018 தேதியிட்ட மாநில அமைச்சரவையின் பரிந்துரையினை இப்போதாவது ஏற்று, தண்டனை பெற்றுள்ள ஏழு பேரின் ஆயுள் தண்டனையையும் குறைத்து, அவர்களை உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்