மதுரையில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு யாசகம் பெற்ற திருநங்கை: போலீஸார் மீட்டு கிளினிக் வைக்க ஏற்பாடு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் சாலைகளில் கடை கடையாக ஏறி யாசகம் பெற்ற திருநங்கைகளை மீட்டு போலீஸார் விசாரித்ததில் அதில் ஒருவர் எம்பிபிஎஸ் படித்துவிட்டு வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை திலகர் திடல் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார் நகர் பகுதியில் கடந்த வாரம் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திருநங்கைகள் சிலர், கடைகளில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு போலீஸார் விசாரித்தனர். அவர்களிடம், ‘‘எதற்காக யாசகம் செய்கிறீர்கள்? உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம். யாசகம் செய்வதை விட்டு விடுங்கள்’’ என காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அப்போது அதில் ஒரு திருநங்கை, மதுரை மருத்துவக் கல்லூரியில் 2018-ம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்த தகவல் தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரது மருத்துவப் படிப்பு சான்றிதழ்களை வாங்கி பார்த்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் விசாரித்தனர். அதில் அந்த திருநங்கை எம்பிபிஎஸ் படித்ததை உறுதி செய்துள்ளனர்.

உடனே காவல் ஆய்வாளர் கவிதா, மாவட்டக் காவல்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்தை அணுகி, மருத்துவம் படித்த அந்த திருநங்கைக்கு தேவையான உதவிகளைச் செய்து தர ஏற்பாடு செய்து வருகிறார்.

இதுகுறித்து ஆய்வாளர் கவிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மதுரை மருத்துவக் கல்லூரியில் அவர் ஆணாக இருந்தே எம்பிபிஎஸ் படித்துள்ளார். நாங்கள் மருத்துவக் கல்லூரி டீனிடம் விசாரித்தபோது அவர் மிகச்சிறந்த படிப்பாளி என்று கூறினார். படித்து முடித்த பிறகு, அறுவைச் சிகிச்சை செய்து அவர் பெண்ணாக மாறியுள்ளார்.

கரோனா நேரத்தில் தனியார் கிளினிக்கில் பணிபுரிந்துள்ளார். இவர் திருநங்கை என்பது தெரிந்ததும் அவர்கள் இவரைப் பணியை விட்டு நீக்கி விட்டனர். வீட்டிலும் இவரைப் புறக்கணித்துள்ளனர். அதனால், விரக்தி அடைந்த அவர், அன்றாட வாழ்வாதாரத்துக்காக திருநங்கைகளுடன் சேர்ந்து கடை கடையாக யாசகம் பெற்று வந்துள்ளார்.

தற்போது அவருக்கு சில மருத்துவ நண்பர்களுடன் சேர்ந்து பெத்தானியாபுரத்தில் தனியாக கிளினிக் வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். நவ. 27-ம் தேதி அந்த கிளினிக்கை திறக்க உள்ளோம்.

அவர் ஆணாக இருந்தபோது எம்பிபிஎஸ் படித்ததால், அவரது மருத்துவச் சான்றிதழிலும் ஆண் என்றே பதிவாகி உள்ளது. அதனால், எதிர்காலத்தில் பிரச்சினை எழாமல் இருக்க மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மூலம் இந்திய மருத்துவக் கழகத்தையும், மதுரை மருத்துவக் கல்லூரியையும் அணுகி அவரது மருத்துவச் சான்றிதழில் திருநங்கையாக மாறியதற்கான திருத்தத்தை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி மதுரை மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘போலீஸார் அந்த திருநங்கையைப் பற்றி என்னிடம் கூறினர். அவரது பெயரில் ஒரு மாணவர் மருத்துவக் கல்லூரியில் படித்த ஞாபகம் எனக்கு உள்ளது. நான் இன்னும் அவரை நேரில் பார்க்கவில்லை. அவருக்கு தேவையான உதவிகளை செய்துதர தயாராக உள்ளோம்’’ என்றார்.

எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு யாசகம் செய்தது வெளியே தெரியவந்ததால் மிகுந்த மன நெருக்கடியில் இருக்கும் அவர் தனது பெயர், புகைப்படம் எதையும் வெளியிட வேண்டாம் என உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்