முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகளுக்கு உரிய காலத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் கிடைப்பதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் வசிக்கும் ஏழை பெண்கள் கர்ப்பமுற்று 12 வாரத்துக்குள் கிராம மற்றும் நகர செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து பெயரை பதிவு செய்து ‘பிக்மி’ எண் பெற்றவுடன் ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. பதிவு செய்து நான்காவது மாதத்துக்குப்பிறகு 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், உடல் திறனை மேம்படுத்தும் விதமாக இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, புரதச்சத்து பிஸ்கட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.
அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் 3-வது தவணையாக ரூ.4 ஆயிரம், பேறு காலம் முடிந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு 9 மாதம் முடிந்தவுடன் 5-வது தவணையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.14 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், உரிய காலத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்களும், உதவித்தொகையும் கிடைப்பதில்லை என கர்ப்பிணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நிதியுதவியில் தாமதம் ஏன்?
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முதல் குழந்தையை பெற்றுக்கொள்பவர்களுக்கு முதல் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் நிதியுதவியை மத்திய அரசு அளிக்கிறது.
எனவே, இங்கிருந்து விண்ணப்பம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து வங்கிக் கணக்கில் நிதியுதவியை நேரடியாக செலுத்துகின்றனர். இந்த நடைமுறைக்கு சிறிது காலம் ஆகும். ஆனால், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போது யார் யாரெல்லாம் விண்ணப்பித்துள்ளார்களோ அவர்கள் அனைவருக்கும் 15 நாட்களில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கோவைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடியில், 60 சதவீத தொகை அளிக்கப்பட்டுவிட்டது. கோவையில் ஆண்டுக்கு 50 ஆயிரம் கர்ப்பிணிகள் பதிவு செய்கின்றனர்.
இதில், ஒருவருக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்க வேண்டுமெனில், 1 லட்சம் பெட்டகங்கள் தேவை. ஆனால், சுமார் 20 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள்தான் வருகின்றன. கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்து பெட்டகங்களையும் உடனடியாக விநியோகிக்கிறோம். பற்றாக்குறையால், ஒருவருக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்க முடிவதில்லை.
மேலும், அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்டால் மட்டுமே 3, 4, 5-வது தவணை நிதியுதவி கிடைக்கும். கோவையில் 45 சதவீத பிரசவங்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. ஆனால் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் 80 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன.
புகார் தெரிவிக்கலாம்
நிதியுதவி கிடைக்காதவர்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்து, சரியான வங்கிக் கணக்கு விவரத்தை அளித்தால் நிதியுதவி கிடைத்துவிடும். ஊரக பகுதியில் யாருக்கேனும் நிதியுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநரை 98943 38846 என்ற எண்ணிலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர் நகர் நல அலுவலரை 99408 51336 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago