நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு பரிந்துரைப்படி பொதுப்பணித்துறை ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. நான் அமைச்சரானதும் உங்கள் குறைகளைத் தீர்ப்பேன் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“அரசு ஊழியர்கள் என்போர் அரசிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணியாற்றுவார்கள். சில நேரங்களில் அவர்கள், ஊதிய உயர்வு கேட்டு அரசுக்கு விண்ணப்பம் தருவார்கள். அரசு அலட்சியமாக இருந்தால், போராட்டம் நடத்துவார்கள். பிறகு, அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும். அதிலும், தீர்வு ஏற்படாவிட்டால், துறை அமைச்சர் முன்னிலையிலோ அல்லது முதல்வர் முன்னிலையிலோ பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதுண்டு.
சில நேரங்களில் தீர்வு காணாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவதும் உண்டு. இதுதான் நடைமுறையில் நான் பார்த்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் ஒரு விசித்திரம், எந்த ஆட்சியிலும் நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது.
அதிலும், முதல்வர் பொறுப்பேற்றிருக்கின்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில்; ஊதிய உயர்வு கேட்ட பொறியாளர்களுக்கு, அவர்கள் ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையே குறைத்து வழங்கிய ஆட்சி, நான் அறிந்தவரையில், இந்தியாவிலேயே அதிமுக ஆட்சியாகத்தான் இருக்கும்.
ஊதிய உயர்வு தர முடியாவிட்டால், முடியவில்லை என்றுதான் சமாதானம் சொல்வார்களே தவிர, வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையா குறைப்பார்கள்? கருணாநிதி முதல்வராக இருந்த 2010-ம் ஆண்டு, இந்தத் துறையைச் சார்ந்த பொறியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு, கோரிக்கை வைத்தார்கள்.
பொறியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து ஒரு முடிவு காண, ஒரு நபர் கமிஷனை முதல்வர் அமைத்தார். அந்த கமிஷனின் முடிவுப்படி அடிப்படை ஊதியம் ரூ.15,600 மற்றும் கூடுதலாகத் தர, ஊதியம் ரூ.5,400 உதவிப் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதைப் பார்த்த வேறு சில அரசு ஊழியர்களும், தங்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டுமெனக் கேட்டபோது, ‘ஊதியக் குறை தீர்வுக் குழு’ ஒன்றினை அமைத்தார். அந்தக் குழு உதவிப் பொறியாளர்களின் அடிப்படை ஊதியம் ரூ.15,600-லிருந்து ரூ.9,300 ஆகவும் தர ஊதியத்தை ரூ.5,100 ஆகவும் குறைத்து வழங்கியது.
இந்தக் குழுவின் முடிவினை எதிர்த்து, பொறியாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். உச்ச நீதிமன்றமோ, நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைத்துத் தீர்வு காண அறிவுரை வழங்கியது. அந்தக் குழுவும் குறை தீர்வுக் குழுவின் முடிவையே அறிவித்தது.
குழுக்களின் முடிவு எப்படியோ இருக்கட்டும். பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளைத் தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் தன் துறையினருக்குச் சற்று இரக்கம் காட்டியிருக்கலாம். “ஊழியர் ஊதியம் குறைத்த முதல்வர்” என்ற பட்டம் பெறாமல் இருந்திருக்கலாம்.
எப்படியோ, அன்றைய முதல்வர் கருணாநிதி அளித்த ஊதிய உயர்வை அதிமுக அரசு தட்டிப் பறித்துவிட்டது. ‘தங்கப் பதுமை’ திரைப்படத்தில் ‘கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி’ என்று ஒரு பாட்டு. இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அழகாகப் பாடியிருப்பார்.
ஆனால், இன்றோ. ‘கொடுக்காதவனே பறித்துக் கொண்டான்டி’ என்றுதான் பாட வேண்டியிருக்கிறது. முன்னாள் பொதுப்பணித் துறை - நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்நாளில் இன்னலில் இருக்கும் பொறியாளர் நண்பர்களுக்கு ஓர் உறுதி.
“கவலையை விடுங்கள். எங்கள் மறைந்த தலைவரின் திருமகன் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி உதயமான பின்னர், உங்கள் கோரிக்கையை என் தோளில் சுமந்து சென்று தீர்வு காண்பேன்”.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago