கல்விக் கட்டண அறிவிப்பு தாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு உதவுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

கல்விக் கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவ - மாணவிகள் அனைவருக்கும் ஆக்கபூர்வமாக உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையைத் தாமதமின்றி எடுக்க வேண்டும் என ஸ்டாலின் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து திமுக சார்பில் இன்று வெளியான செய்தி வெளியீடு:

''7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டிய வாய்ப்புக் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், அந்த வாய்ப்பினை நிராகரிக்க நேர்ந்த, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் இலக்கியா மற்றும் தர்ஷினி ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தங்களது குறைகளைக் கூறினர். அப்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உடனிருந்தார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் இதேபோன்ற காரணத்தால் பாதிக்கப்பட்டதாக இன்றைய நாளிதழ்களில் வெளியான மாணவர்கள் குறித்தும் குறிப்பிட்டு, அவர்கள் உடனடியாக மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தி, ஸ்டாலின் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

ஸ்டாலின் கடிதத்தை, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு இருவரும் முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்''.

இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

''முதல்வருக்கு வணக்கம்,

7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அனுமதிக்கான இடம்பெற்ற மாணவ மாணவியர் பலருக்கு, கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது என்பதால், தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள நெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.சுபத்ரா, திருச்சுழி தாலுக்காவைச் சேர்ந்த மாணவர் அருண்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.தங்கபாண்டி, மற்றொரு மாணவி தங்கப்பேச்சி உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத பொருளாதார நிலைமைக்கு உள்ளாகியிருக்கும் காரணத்தால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்து, அரசு மருத்துவக் கல்லூரியின் இடஒதுக்கீட்டிற்காகக் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாக, இன்றைய “தி இந்து” ஆங்கிலப் பத்திரிகையில், 6ஆம் பக்கத்தில், விரிவான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், கடலூர் மாவட்டத்தில் சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி இலக்கியா, கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஆகியோரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

“நீட்” தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக, Post Matric கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தச் சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக” அரசு சார்பில் காலதாமதமாக அறிவித்ததும், இந்த மாணவ மாணவிகளுக்குக் கலந்தாய்வின்போதே முக்கியமான இந்தத் தகவலைத் தெரிவிக்காததும், நெருக்கடியான இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கலந்தாய்வின்போதோ அல்லது அதற்கு முன்னரோ, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இந்தத் தகவலைக் கூறாததால் - இன்றைக்குப் பல மாணவ மாணவியரின் மருத்துவக் கனவு, “கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை” என்றாகிவிட்டது. இதற்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

ஆகவே, கல்விக் கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவ - மாணவிகள் அனைவருக்கும் ஆக்கபூர்வமாக உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையைத் தாமதமின்றி எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்