ராஜராஜ சோழனை காட்டிலும் ராஜேந்திர சோழன் தான் கடாரம் வரை சென்று வெற்றி வாகை சூடினார், அதேபோல, கருணாநிதியை விட அவரது மகன் மு.க.ஸ்டாலின் 8 மடங்கு அதிகமாக வெற்றி பெற்று தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (நவ. 22) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வந்தது, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியது, அரசு விழாவில் கலந்து கொண்டது என எதிலும் எங்களுக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றி, எதிர்க்கட்சியினரை தன் இஷ்டத்துக்கு வசை பாடிவிட்டு அமித் ஷா சென்றிருப்பது கண்டனத்துக்குரியது.
இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயலுக்கு சமம். அரசியலுக்கும், அரசுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாமல் ஜனநாயகத்தை சாகடித்து, சர்வாதிகாரத்தை தலை தூக்கியுள்ளார்கள். நெறிமுறைகளை மீறி, மத்திய, மாநில அரசுகள் இவ்வாறு நடந்துகொண்டதை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக அரசு சிறந்து விளங்குவதாக மத்திய அமைச்சர் பாராட்டியுள்ளார். தமிழக அரசுக்கு அவர் நற்சான்றிதழை வழங்கியதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். தமிழகத்திலேயே இப்படி என்றால் மற்ற மாநிலங்கள் எப்படி இருக்கும்.
மத்தியில் காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட தயாரா என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பல இடங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டது, அதற்கான நிதியை தமிழக அரசு கேட்டது, இதுவரை புயல் பாதிப்புக்காக எவ்வளவு நிதியை தமிழகத்துக்கு வழங்கியுள்ளீர்கள் என மத்திய அரசு பட்டியலிட தயாரா ? முதலில் நீங்கள் பட்டியலிடுங்கள், பிறகு நாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிடுகிறோம்.
உத்தமர் போல் பேசுகிறார் அமித் ஷா. நேற்று வரை ஒருவரை ஒருவர் வசைபாடியவர்கள், இன்று ஒன்று சேர்ந்துள்ளார்கள். அதிமுகவினரும் அவர்களுக்கு அடிமை போல் நிற்கிறார்கள். 2ஜி குறித்து பேசுவதற்கு முன்பு அமித் ஷா முதலில் செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டும். 2ஜி விவகாரம் தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒன்று. அமித் ஷாவின் பேச்சு திமுகவை மிரட்டும் தொனியில் உள்ளது.
திமுக, தோன்றியது முதல் பல தலைவர்களை சந்தித்துவிட்டது. எங்களுக்கு லட்சியம், கொள்கை, கட்டுப்பாடு உள்ளது. திமுகவை கிள்ளுக்கீரையாக யார் கருதினாலும், அவர்கள் நிச்சயம் ஏமாந்துதான் போவார்கள். கருணாநிதி தற்போது இல்லையே, அவரது மகன் தானே இருக்கிறார் என அமித்ஷா நினைக்கிறார்.
ராஜாராஜ சோழனை காட்டிலும், ராஜேந்திர சோழன் தான் கடாரம் வரை சென்று வென்றான் என்பதை இங்கே நினைவுபடுத்துகிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை விட 8 மடங்கு வெற்றி பெற்று தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கும் வல்லமை ஸ்டாலினுக்கு உண்டு.
இந்தியாவில் எந்த மாநிலத்தில் வாரிசு அரசியல் இல்லை. இது போன்ற பேச்சுகளை பீகாருக்கு சென்று அமித் ஷா பேச வேண்டும். தமிழகத்தில் பேசக்கூடாது. ஊழல் குறித்து பேசும் அமித் ஷா, ஊழல் செய்து, சிறைக்கு சென்ற ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டாரே அதை என்னவென்று சொல்வது? வாரிசு அரசியலை தென் மாநிலத்தில் ஒழிப்போம் என அமித் ஷா பேசியிருக்கிறார். ஓபிஎஸ் மகன் தற்போது எம்.பி-யாக உள்ளாரே ? அது வாரிசு அரசியல் இல்லையா ?
அதேபோல், விஜயராஜ், பிரமோத் மகாஜன், வருண்காந்தி, பியூஷ் கோயல் மகன், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் என நிறைய பேர் தற்போது வாரிசு அரசியல் செய்கிறார்களே? இதெல்லாம் அமித் ஷாவுக்கு தெரியாதா என்ன ? இதையெல்லாம் அமித் ஷா ஒழித்துக் கட்டிவிடுவாரா? தமிழகம் ஒன்றும் பீகார் அல்ல, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரால் தமிழ் உணர்வு உள்ள தன்மானம் பெற்றது தமிழ் மண்.
இங்கேயுள்ள வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. எங்களுடன் நேரடி விவாதத்துக்கு அமித் ஷா தயார் என்றால், நாங்களும் தயாராக உள்ளோம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள தபால் ஒட்டு முறையை எதிர்த்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்".
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago