கைகான் வலவுத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு எதிர்ப்பு: கல்வராயன்மலைக் கிராம மக்கள் கைது

கல்வராயன்மலையில் கோமுகி அணைக்கு வரும் நீர்வழிப் பாதையில் கைகான் வலவு என்னும் பகுதியில் தடுப்பணைக் கட்ட நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மலைக் கிராம மக்களை சேலம் மாவட்ட கருமந்துறை போலீஸார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உருவாகி கோமுகிஅணைக்கு வரும் ஆற்றின் குறுக்கேகைகான் வலவு என்னுமிடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அங்கு அணைக் கட்டுவதால் கோமுகி அணைக்கு நீர் வரத்து பாதிக்கப்படும். அதனால் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாய நீர் வரத்து பாதிக்கக் கூடும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இத்திட்டத்தால் சின்னகல்வராயன் மலை வாழ் மக்களின் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.

‘கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும்’ என்று தடுப்பணைக் கட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில் நேற்று கைகான் வலவில் தமிழக அரசு சார்பில் தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் ஆத்தூர் மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்று இந்நிகழ்வை நடத்தினர்.

சின்னகல்வராயன்மலை பகுதி மக்கள் நேற்று அப்பகுதியில் திரண்டு கருப்புக் கொடி ஏந்தி,தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ‘இத்திட்டம் வந்தால் அணைக்கட்டும் பகுதியில் குடியிருந்தவர்களின் நிலங்களை கையகப்படுத்துவார்கள்’ என்றும் பேராட்டத்தில் ஈடுபட்ட மலைக் கிராம மக்கள் கூறினர். அடிக்கல் நாட்டு விழாவில், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால் மலைக் கிராம மக்கள் 23 பேரை அங்கிருந்த போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE