பழனிசாமிக்குத் தெரிந்த ஒரே தொழில் துரோகம், பழனிசாமியின் துரோகப் படலத்துக்குச் சாட்சி வேண்டுமானால் - செங்கோட்டையனிடம் கேளுங்கள், சசிகலாவைக் கேளுங்கள், தினகரனைக் கேளுங்கள், துரோகப் படலங்களைப் பக்கம் பக்கமாக எழுதலாம் என ஸ்டாலின் பேசினார்.
சேலம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
“சேலம், சேலம் என்று வருகிறாரே, ஏதோ சேலத்தை மாதிரி மாநகரம் போல மாற்றிவிட்டாரோ என்று கூட நான் நினைத்தேன். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை வரிசையாக எடுத்துப் பார்க்கும் போதுதான் எதையும் நிறைவேற்றாமல், சேலம் மக்களையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்தது. இவரால் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவும் முடியவில்லை.
சேலம் எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த நினைக்கிறது. இதனை விவசாயிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள். ஒரு முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? போராடும் மக்களை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். தங்களது நிலங்கள் பறிபோகும் என்று போராடும் மக்களை அவர் அழைத்துப் பேசினாரா? இல்லை. போலீஸை அனுப்பிக் கைது செய்கிறார், அடிக்கிறார், விரட்டுகிறார். போராட்டம் பெரிய அளவில் உருவாகிவிட்டது.
போராட்டம் நடத்தும் மக்களுக்கு மாற்றுப் பாதைத் திட்டத்தை முன்மொழிந்ததா அரசு? அதைச் செய்யவில்லை. அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தால் மக்கள் அதனைக் கண்ணை மூடிக்கொண்டு ஏற்கவேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறது. சாலைகள் முக்கியம். அதைவிட மக்களும் விவசாய நிலங்களும் முக்கியம்.
இன்றைய வளர்ச்சிக்கு - தேவைக்கு, சாலைகள் தேவை என்றால் அவை மக்களைப் பாதிக்காத வகையில், வேளாண்மையை பாதிக்காத வகையில் எப்படி அமைப்பது என்பதில் எடப்பாடி அரசாங்கம் கவனம் செலுத்தியதா? அந்த வழியில் தனது சிந்தனையைச் செலுத்தியதா என்றால் இல்லை. உடனே, போலீஸைக் கூப்பிடு. இது மட்டும்தான் பழனிசாமிக்குத் தெரியும்.
நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் இவர், எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை போலீஸ் மூலமாக அடித்து நொறுக்கவில்லையா? இதுதான் விவசாயிக்கு அழகா? அதேபோல் காவிரி - சரபங்கா திட்டத்தால் தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என்று போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசியதா இந்த அரசு. இல்லை! இதுதான் விவசாயி ஆட்சிக்கு அழகா?
பெட்ரோல் குழாய்களை விவசாய நிலங்களில் பதிப்பதாகக் கூறி விவசாயிகள் எதிர்க்கிறார்களா? போலீஸைக் கூப்பிடு. அடித்து விரட்டு என, உயிருக்குப் பயந்து ஓட ஓட விவசாயிகளை விரட்டியது தான் விவசாயி ஆட்சிக்கு அழகா? முதல்வரின் சொந்த தொகுதியான எடப்பாடியிலேயே மணல் கொள்ளை நடக்கிறதே? இந்த விவசாயி தடுத்தாரா?
எடப்பாடி பெரிய ஏரியில் மண் எடுப்பதில் அதிமுகவினருக்குள் சண்டை ஏற்பட்டதே! அது அந்த விவசாயிக்குத் தெரியுமா? அதிமுகவின் முன்னாள் நகரச் செயலாளர் மீதே வழக்குப் பதியும் அளவுக்கு நிலைமை போனதே? கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் வகையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றுவதுதான் எடப்பாடி ஆட்சியில் குடிமராமத்துப் பணியா?
மத்திய அரசின் கிசான் திட்டத்தில் நானும் விவசாயிதான் என்று சேர்ந்தவர்களால் சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆறு கோடி வரை மோசடி நடந்துள்ளது. வேளாண் அதிகாரிகள் உள்பட ஒன்பது பேர் கைதானதும் இந்த விவசாயியின் மாவட்டத்தில்தான், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் ஊழல்களைப் பலரும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்களே.
சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு மாற்றும் மத்திய பாஜக அரசின் முயற்சியைத் தடுத்து, பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டமான இதனைக் காப்பாற்றத் தீர்க்கமான எந்த நடவடிக்கைகளை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி? மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை எதற்காக நிறுத்தி வைத்துள்ளீர்கள்? நிலக்கரி எடுத்துவருவதில் கூடுதல் செலவு என்று அதிகாரிகள் சொல்வதாகச் சொல்கிறார்கள்.
உண்மையான காரணம், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்காக மின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளீர்களோ என நான் சந்தேகப்படுகிறேன். அல்லது அந்த மின் நிலையத்தை முடக்க நினைக்கிறீர்களா? சேலம் மாவட்டத்துக்குக் கொண்டு வரப்பட்ட புதிய திட்டம் என்ன? புதிதாக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்ன?
கைத்தறி, விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? அந்தத் தொழிலாளர் உயர்வுக்கு என்ன திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தார்? இந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி தொழில் நலிவடைந்து வருவது முதல்வருக்குத் தெரியுமா? வெள்ளிக் கொலுசு தொழிலும் தேங்கி வருவது தெரியுமா? ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சிறப்பான சில தொழில்கள் சில இருக்கும். அப்படி சேலம் மாவட்டத்துக்கு இருக்கும் தொழில்களை முன்னேற்ற என்ன செய்தார் எடப்பாடி பழனிசாமி?
ஆனால் நாள்தோறும் நிருபர்களைப் பார்த்து படம் காண்பித்துக் கொண்டு இருக்கிறார். நான் விவசாயி, நான் உழைப்பால் உயர்ந்தவன், ஒரு சாதாரண விவசாயி முதல்வர் ஆனது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று பழனிசாமி பேசி வருகிறார். ஒரு உண்மையான விவசாயி முதல்வராகியிருந்தால் என்னை விட மகிழ்ச்சிக்குரியவர் யாரும் இருக்க முடியாது.
ஆனால் தன்னுடைய கொள்ளையை, கொடூரத்தை மறைக்க விவசாயி என்று வேடம் போட்டு பழனிசாமி மறைக்க முயன்றால் அதனை மக்கள் மன்றத்தில் கிழித்துத் தொங்கவிடும் பெறும் பொறுப்பு எனக்குத் தான் இருக்கிறது.
அவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் விவசாயம் பார்த்தாரா? அந்த வட்டாரத்து மக்களில் பழைய ஆட்களுக்குத் தெரியும். அவர் வெல்ல வியாபாரியாக இருந்தார் என்று. ஊர் ஊராகப் போய் வெல்லம் வாங்கி, அதனை மொத்தமாக விற்கும் வெல்ல வியாபாரியாக இருந்தவர்தான் பழனிசாமி. அவர் அன்றும் விவசாயம் பார்க்கவில்லை. இன்றும் விவசாயம் பார்க்கவில்லை.
உண்மையில் அவர் விவசாயியாக வாழ்ந்திருந்தால், விவசாயத்தை நம்பி பிழைப்பை நடத்தி இருந்தால் மூன்று விவசாய சட்டங்களுக்கு ஆதரவாகத் தனது கருத்தைச் சொல்லி இருக்க மாட்டார். மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்திருக்க மாட்டார். டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக அந்த மாவட்டத்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இன்னமும் போராடி வருகிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக, டெல்டாவை வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அறிவிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் புதிதாக இனி திட்டம் வராது என்று எடப்பாடி சொன்னார்.
புதிய ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு இப்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நிலத்தோடு சேர்ந்து கடலிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கொடுத்துள்ளார்கள். இது விவசாயிகளுக்கு, டெல்டா மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் அல்லவா? ஆனால். காவிரி காப்பான் என்று தனக்குத் தானே பாராட்டு விழா எடுத்துக் கொண்டார் பழனிசாமி. அவர் காவிரி காப்பான் அல்ல, காவிரி ஏய்ப்பான்.
அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் குடிமராமத்துப் பணிகளையாவது ஒழுங்காக, முறையாக நடத்திக் காட்டி இருப்பார். தன்னுடைய ஆட்சியின் மாபெரும் சாதனையாகக் குடிமராமத்துப் பணிகளை பழனிசாமி சொல்கிறார். 'வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆனதால் தான் இது சாத்தியம்' என்று பழனிசாமி தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொள்கிறார்.
குடிமராமத்து என்ற பெயரால் கொள்ளையடிக்கும் திட்டம் தான் அந்தத் திட்டம். பில் போட்டு பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மண்ணை அள்ளுவதாகச் சொல்லி பணத்தை அள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். குடிமராமத்து என்றால் ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள், பாசனக் கால்வாய்களை முழுக்க தூர்வாரி நீர் வருகைக்குத் தயார் படுத்தி வைக்க வேண்டும்.
இதுவரைக்கும் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் குடிமராமத்து பணிகளுக்காகச் செலவு செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கிறது. அப்படிச் சொல்லி கணக்கு எழுதி இருக்கிறார்கள். அதுதான் உண்மை. குடிமராமத்துப் பணி என்பதற்குப் பதிலாகச் சவுடு மண் கொள்ளைதான் நடந்துள்ளது.
இப்படித் தூர்வாரும் மண்ணை விவசாயிகளுக்குத் தர வேண்டும். ஆனால் விவசாயிகளுக்குத் தருவது போல, போலி பில் போட்டு தனியாருக்கு லாப நோக்கத்தோடு விற்பனை செய்கிறார்கள். குறிப்பிட்ட அளவுக்குத்தான் மண் எடுக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி, மண் எடுக்கிறார்கள்.
முன்பெல்லாம் மண் எடுத்தால், மணல் கொள்ளை நடக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இப்போது யார் மண் எடுத்தாலும், 'குடிமராமத்துப் பணி நடக்கிறது' என்று சொல்லி திருட்டை மறைத்துவிடுகிறார்கள். தூர் வாருவதற்காக மணல் எடுக்கவில்லை, மணல் கொள்ளைக்காக மணல் எடுக்கப்படுகிறது. இதுதான் உண்மை.
அரசாங்கத்தின் குடிமராமத்துப் பணியைப் பார்த்து, சில சேவை உள்ளம் கொண்ட மக்கள் தாங்களாகவே பணம் போட்டு தூர்வாருகிறார்கள். இப்படி மக்கள் அவர்களாகப் பணம் போட்டுச் செய்யும் குடிமராமத்தையும் அரசு தாங்கள் செய்ததாகக் கணக்குக் காட்டி பணம் எடுக்கும் கொடுமையும் நடக்கிறது.
கரூர் ராஜவாய்க்காலில் தூர்வாரச் சொன்ன சமூக சேவகர் சண்முகம் கைது செய்யப்பட்டார். வேலூரில் அமைச்சர் வீரமணியின் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார் பிரேமா நந்தகுமார் என்பவர். தேனி கண்டமனூர் பரமசிவன் கால்வாயைத் தூர்வாரச் சொல்லி மக்கள் மனுக் கொடுத்தும் தூர்வாராததால் மக்களே பணம் போட்டுத் தூர்வாரினார்கள். மக்களே பணம் போட்டுத் தூர்வார எப்படி அனுமதிக்கலாம் என்று நெல்லை மாவட்டத்தில் அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார்கள் அதிமுகவினர்.
இப்படி ஒவ்வொரு ஊரிலும் நடந்த குடிமராமத்து கொள்ளைகள் அனைத்தும் திமுக ஆட்சி வந்ததும் அளவீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதை ஒரு சாதனையாக எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறார்.
சிறுவயது முதலே கடினமாக உழைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சொல்கிறார். இதை ஸ்டாலினிடம் நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.
முதல்வரே, என்னிடம் நீங்கள் நிரூபிக்க வேண்டியது இல்லை. நெடுங்குளம் சோமசுந்தரம், கருப்பண்ணக் கவுண்டர், துரை ஆகிய மூவரது சமாதியில் போய் நின்று கொண்டு, 'நான் சிறுவயது முதலே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தேன்' என்று சொல்ல முடியுமா? இதனை நான் சவாலாகக் கேட்கிறேன். இதற்கு மேல் அந்த விவகாரத்துக்குள் போக விரும்பவில்லை.
படிப்படியாக முன்னேறினேன் என்கிறார் பழனிசாமி. அவர் படிப்படியாக முன்னேறினாரா, உருண்டு உருண்டு போய் முன்னேறினாரா என்பதைத் தமிழ்நாடே பார்த்துச் சிரித்தது. சிரித்துக் கொண்டு இருக்கிறது. வாழ்நாளெல்லாம் சிரிக்கத்தான் போகிறது.
'எனக்குத் தொழில் விவசாயம்' என்கிறார் பழனிசாமி. இல்லை, பழனிசாமிக்குத் தெரிந்த ஒரே தொழில் துரோகம். பழனிசாமியின் துரோகப் படலத்துக்குச் சாட்சி வேண்டுமானால் - செங்கோட்டையனிடம் கேளுங்கள். அவரை வளர்த்துவிட்ட கோபால், சண்முகம், எடப்பாடி மணி, எடப்பாடி பெருமாள் ஆகியோரைக் கேளுங்கள்.
சசிகலாவைக் கேளுங்கள். தினகரனைக் கேளுங்கள். துரோகப் படலங்களைப் பக்கம் பக்கமாக எழுதலாம். படிப்படியாக முன்னேறியவர் அல்ல பழனிசாமி, எல்லாப் படியிலும் தவறி விழுந்தவர் இந்த பழனிசாமி. 1990-ஆம் ஆண்டு சேலம் மாவட்டச் செயலாளரான பழனிசாமியின் பதவியை சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதா பறித்தார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி பழனிசாமிக்குத் தரப்பட்டது. சில ஆண்டுகளில் அதுவும் பறிக்கப்பட்டது.
2003-ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆனார் பழனிசாமி. சில ஆண்டுகளில் அந்தப் பதவியும் ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டது. 2008-இல் மீண்டும் பதவி தரப்பட்டது. அது மீண்டும் பறிக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தோடு மொத்தமாக நெருக்கமானதால் தான் அதிமுகவின் ஐவர் அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதனால் தான் பன்னீர்செல்வத்தை விட இவர் நம்பிக்கையானவராக இருப்பார் என்று சசிகலா குடும்பம் நம்பி முதல்வர் பதவியைக் கொடுத்தது.
துரோகத்தையே வாழ்க்கையாகக் கொண்ட பழனிசாமி, இறுதியாக சசிகலா குடும்பத்துக்கும் துரோகம் செய்தார். பங்காளிகளுக்குச் செய்த துரோகத்தில் வாழ்க்கையைத் தொடங்கி - அரசியல் துரோகத்தால் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கும் பழனிசாமிக்கு என்னைப் பற்றிப் பேச எந்த யோக்கியதையும் இல்லை.
நல்ல எண்ணம் - தீய எண்ணம் என்பதைப் பற்றி எல்லாம் பழனிசாமி எனக்குப் பாடம் எடுக்க வேண்டியது இல்லை. அதற்கான அருகதையும் அவருக்கு இல்லை. 'பதவி வரும் போது பணிவு வர வேண்டும்' என்பார்கள். ஆனால் பழனிசாமியிடம் பணிவும் இல்லை. பயமும் இல்லை. பொறுப்பும் இல்லை.
தனது தகுதிக்கு மீறிய ஒன்று கஷ்டப்படாமல் கிடைத்துவிட்டது என்ற மமதையில் தலைகால் தெரியாமல் ஆடிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. கை சுத்தமும் இல்லை, வாய் சுத்தமும் இல்லை. பணத்துக்காகவும், பணம் வரும் திட்டங்களை மட்டுமே செய்யக் கூடியவராக இருக்கிறார் பழனிசாமி.
தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது, கேள்வி கேட்கக் கூடாது என்ற ஆணவத்திலும் இருக்கிறார். இந்த இரண்டுமே மக்களுக்கு விரோதமானது. ஜனநாயக விரோதமானது. பணத்துக்காக மட்டும் எதையும் செய்பவர்கள் கூலிப்படைக்காரர்களாக இருக்கலாமே தவிர, அரசியல்வாதிகள் அல்ல. தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைப்பவர்கள் சர்வாதிகாரிகள். இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது.
ஊழல்வாதியாகவும் சர்வாதிகாரியாகவும் செயல்படும் எடப்பாடி பழனிசாமியால் தமிழ்நாட்டுக்கோ, தமிழ்நாட்டு மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. இதுவரையும் இல்லை. இனியும் இருக்காது. சேலத்துக்கோ, சேலம் மாவட்டத்துக்கோ பழனிசாமியால் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்த பிறகு மற்ற மாவட்டத்து மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? எதுவும் கிடைக்காது.
நான் மக்களைச் சந்திக்கவில்லை என்றும் காணொலிக் காட்சி மூலமாக மட்டும் பேசுகிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். நான் தமிழ்நாட்டு மக்களை 1980 முதல் ஊர் ஊராகப் போய் சந்தித்து வருகிறேன். பழனிசாமி தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்கிறேன் என்று அரசு அதிகாரிகளை இப்போதுதான் முதல் முதலாகப் பார்க்கிறார்.
காணொலிக் காட்சி மூலமாகச் சந்திக்கிறேன் என்றால், அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இதனை நடத்தி வருகிறேன். ஒவ்வொரு மாவட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஒரு லட்சம் பேர் கூடுகிறார்கள். அவர்களை ஒரே இடத்தில் கூட்ட முடியாது என்பதால் நூறு, இருநூறு பேராக அவர்கள் குடியிருக்கும் ஊரிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூட்டி இந்தக் காணொலிக் கூட்டத்தை நடத்தி வருகிறோம்.
நான் ஊர் ஊராகச் செல்லவேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் நேற்றைய தினம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் பிரச்சாரப் பயணத்துக்கு இந்த எடப்பாடி அரசு தடை விதித்து அவரைக் கைது செய்தது. ஏன் இந்த பயம்? உதயநிதி போகும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடுகிறார்களே என்ற ஆத்திரத்தில் தடை செய்கிறார்கள். கைது செய்கிறார்கள்.
ஒரு உதயநிதி கிளம்பியதையே பழனிசாமியால் சகிக்க முடியவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் திமுகவின் முன்னணியினர் அனைவரும் தமிழகத்தின் நான்கு திசைகளிலும் எட்டு கோணத்திலும் வலம் வரும் போது எடப்பாடி என்ன செய்வார்? எத்தனை ஆயிரம் பேரைக் கைது செய்வார்?
பழனிசாமிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் என்ன செய்தாலும் திமுக வெற்றியைத் தடுக்க முடியாது. இதுவரை எப்படி சும்மா இருந்தீர்களோ அதுபோலவே இந்த கடைசி ஐந்து மாதமும் சும்மா இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். திமுக என்ற தேன்கூட்டில் கை வைத்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்.
சேலத்துக்கு அருகில் இருக்கும் பொய்மான்கரடு என்ற ஊரைப் பற்றி தலைவர் கருணாநிதி எழுதி இருக்கிறார். மலைகளில் இடுக்கில் நின்று பார்த்தால் மான் போலத் தெரியும். ஆனால் அது மான் அல்ல. அதனால் தான் அதற்கு பொய்மான்கரடு என்று பெயர் வந்ததாகச் சொல்லி விட்டு தலைவர் எழுதுகிறார், ''எதையும் நம்பி எத்தர்களின் சித்து வேலைக்கு ஏமாறுகிறவர்கள் இருப்பதால் தான் சேலத்துக்கு அருகில் மாத்திரமல்ல. 'பொய்மான்கரடு' சிம்மாசனத்தில் கூட செருக்குடன் உட்கார்ந்து கொள்கிறது' என்று எழுதினார்.
பணத்துக்காக எதையும் செய்யும் இந்த பொய்மான் வேட்டை தான், வரப்போகிற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல். அரசியலுக்கு வருவதற்கு முன்னால் சில காலம் காட்டில் தலைமறைவாக இருந்தார் பழனிசாமி என்று அந்த வட்டாரத்து மக்கள் சொல்வார்கள். மீண்டும் அவர் தலைமறைவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
தமிழக மக்களுக்கு இந்த சேலம் கூட்டத்தின் வாயிலாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 1996 தேர்தல் முடிவை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா முதல் அமைச்சர்கள் அனைவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்ட தேர்தல் அது.
அத்தகைய மகத்தான முடிவைத் தந்து, இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு நாட்டு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் நலனில் அக்கறையில்லாத கொத்தடிமைக் கூட்டத்துக்கு கோட்டையில் இடமில்லை என்பதைக் காட்டத் தமிழகம் தயாராகட்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago