என்னை அறிக்கை நாயகன் என்று சொல்லி இருக்கிறார், அதில் ஒன்றும் தவறு இல்லை, நான், இந்த ஆட்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை அறிக்கைகள் மூலமாகச் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது, நான் சொன்ன ஆக்கபூர்வமான பல யோசனைகளை ஏற்றுச் செயல்படுத்தும் முதல்வருக்கு நன்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
"தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று இன்று அறிவித்திருக்கிறேன். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் அதற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், தங்களுக்குக் கிடைத்த இடத்தை வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது.
எப்படி மருத்துவம் படிக்கப் போகிறோம் என்று கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் ஊடகங்களில் கண்ணீருடன் அளித்த பேட்டியை நேற்றைய தினம் நான் பார்த்தேன். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோதுதான், அந்தக் கல்விக் கட்டணத்தை திமுகவே செலுத்தும் என்று இன்று காலையில் அறிவித்தேன். இது மாணவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.
உடனே, எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசே செலுத்தும் என்று அறிவித்திருக்கிறார். முதல்வருக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசியல் செய்கிறது என்று அவர் சொல்லி இருக்கிறார். திமுக அரசியல் செய்ததால்தானே இன்று இந்த அறிவிப்பை பழனிசாமி செய்திருக்கிறார். இல்லாவிட்டால் செய்திருப்பாரா?
மாணவர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று தெரிந்ததும் அரசே செலுத்தும் என்று முதலிலேயே தெளிவாக சொல்லி இருக்கலாமே? நேற்று நீதிமன்றத்திலும் அதனைச் சொல்லவில்லையே.
இப்போது இந்த ஸ்டாலின் விட்ட அறிக்கைக்குப் பிறகு தானே பழனிசாமிக்கு ஞானோதயம் வந்தது? உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக தான் ஆளும்கட்சியாக செயல்படுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். மக்களுக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்ட ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.
என்னை அறிக்கை நாயகன் என்று சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறு இல்லை. தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான நான், இந்த ஆட்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை அறிக்கைகள் மூலமாகச் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறது.
அந்த அறிக்கைகளை முதல்வர் பழனிசாமியும் படிக்கிறார் என்பதற்கு உதாரணமாக நான் சொல்லிய பல்வேறு ஆலோசனைகளை அவர் செயல்படுத்தி வருகிறார். பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யுங்கள், என்று நான் சொன்ன பிறகு தான் எடப்பாடி அரசு ரத்து செய்தது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்குங்கள் என்று நான் சொன்ன பிறகுதான் அரசு நிதி வழங்கியது.
இ-பாஸை ரத்து செய்யுங்கள் என்று நான் சொன்ன பிறகு தான் எடப்பாடி ரத்து செய்தார். நோய் என்று வந்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் டெஸ்ட் எடுங்கள் என்று சொன்ன பிறகு தான் அனைவருக்கும் டெஸ்ட் எடுக்க ஆரம்பித்தார்கள். வெளிநாட்டுத் தமிழர்கள் அனைவரையும் மீட்டுக் கொண்டு வாருங்கள் என்று நான் சொன்ன பிறகுதான் அதற்குத் தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டார்.
தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி போடச் சொன்னேன். செய்தார்கள். பள்ளிகள் திறக்கக்கூடாது என்று நான் சொன்னதைத் தான் அனைத்துப் பெற்றோரும் சொன்னார்கள். இப்படி நான் சொன்ன ஆக்கபூர்வமான பல யோசனைகளை ஏற்றுச் செயல்படுத்தினார் முதல்வர். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதெல்லாம் எனக்கோ, இந்த நாட்டு மக்களுக்கோ தெரியாது என்பதைப் போல, 'ஸ்டாலின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொல்லவில்லை' என்று இப்போது குற்றம்சாட்டுகிறார்.எனது அறிக்கைகள் அனைத்தும் முழுமையாக 'முரசொலி'யில் இருக்கிறது. அதனை மீண்டும் எடுத்து, தன்னை விவசாயி எனக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி படிக்கட்டும். அவை அனைத்தும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தான்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago