ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை; பாமக கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (நவ. 21) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து வகையான இணையவழி விளையாட்டுகளையும் தடை செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்திருக்கிறது. இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் உயிர்க்கொல்லி விளையாட்டான ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டிருப்பது மிகச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள மிகச்சரியான நடவடிக்கை ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் சூதாட்டங்களில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பத்துக்கும் கூடுதலான வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கடந்த சில மாதங்களில் பதிவானவை ஆகும். இவை தவிர வெளியில் தெரியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும் 40 வயதுக்கும் குறைவானவர்கள்; பலர் 20 வயதுகளின் தொடக்கத்தில் இருந்தவர்கள்; பெரும்பான்மையினர் திருமணம் ஆகாதவர்கள்.

குடும்பச் சுமையை தங்களின் தோள்களில் ஏற்றி, தூக்கிச் சுமக்க தயாராகும் வயதில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டால், அந்த குடும்பங்கள் எந்த அளவுக்கு நிலைகுலைந்து போகும் என்பதை மக்களுடன் மக்களாக வாழ்ந்து வரும் நான் அறிவேன்.

அதனால் தான் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் பேசாத நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

அதன் பயனாக ஏற்பட்ட விழிப்புணர்வுகள் காரணமாகவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிபதிகளும் கூட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தனர். இவற்றின் விளைவாகவே ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்திருக்கிறது. அந்த வகையில் இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி; தமிழகத்தின் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி பாமக என்பதற்கு சான்று.

தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளுக்கு முன்பு வரை பரிசுச்சீட்டு என்ற மாயவலையில் சிக்கி தொழிலாளர்களும், மாத ஊதியதாரர்களும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தனர். அதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் உணவுக்குக் கூட வழியின்றி நடுத்தெருவுக்கு வந்தன.

பரிசுச்சீட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக ஏராளமான போராட்டங்களை நடத்தியது. அதன் பயனாகவே 2003-ம் ஆண்டில் பரிசுச்சீட்டுகளை ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அரசு தடை செய்தது. அப்போது, பரிசுச்சீட்டுகளை ஒழித்த பாமக, இப்போது ஆன்லைன் சூதாட்டங்களை ஒழித்து லட்சக்கணக்கான இளைஞர்களை காப்பாற்ற காரணமாக இருந்ததை எண்ணி பெருமிதப்படுகிறேன்.

ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பணத்தை இழந்து நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும்; இளைஞர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது இனி நடக்காது.

அந்த வகையில், தமிழக அரசின் நடவடிக்கை உண்மையாகவே பாராட்டத்தக்கது. ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதித்துள்ள தமிழக அரசு, அது சொல்லிலும், செயலிலும் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக சைபர்- கிரைம் பிரிவு, குற்றப்பிரிவு ஆகியவற்றின் காவலர்களைக் கொண்ட தனிப்பிரிவு ஒன்றை அரசு உருவாக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு மாணவர்களும், இளைஞர்களும் அடிமையாவதற்கு காரணம் அவற்றின் விளம்பரங்கள் தான். அதுமட்டுமின்றி, ஆன்லைன் சூதாட்டம் ஆட ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை போனஸ் வழங்குவதாக ஒவ்வொருவரின் செல்பேசிக்கும் ஒரு மணி நேரத்தில் 5 முதல் 10 குறுஞ்செய்திகள் வருகின்றன.

அவற்றில் மயங்கி தான் இளைஞர்கள் சூதாட்டத்திற்கு அடிமையாகின்றனர். இத்தகைய விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தால் தடுக்க முடியாது. எனவே, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்