ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறை என்று மாற்ற திருமாவும் குரல் கொடுக்க வேண்டும்: கிறிஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் பேட்டி

By கே.கே.மகேஷ்

ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை அல்லது சமத்துவத்துறை என்று மாற்றுவதற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் குரல் கொடுக்க வேண்டும் என்று கிறிஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் 'இந்து தமிழ் திசை' இணைய தளத்திற்கு அளித்த பேட்டி...

''ஒரு பக்கம் தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை எதிர்க்கிறீர்கள், இன்னொரு புறம் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயர் மாற்றத்தைக் கோருகிறீர்கள் ஏன்?

மத்திய அரசிலோ, இந்தியாவில் எந்த மாநிலத்திலோ, பட்டியலினத்தவர்களுக்கு என்று இருக்கிற துறை அல்லது ஆணையத்திற்கு அந்தப் பட்டியலில் இருக்கிற ஏதாவது ஒரு இனக்குழுவின் பெயர் சூட்டப்படவில்லை. மகாராஷ்டிராவில் பெரும்பான்மையாக வாழ்வதும், அம்பேத்கர் பிறந்த இனக்குழுவுமான மகர் பெயரை அங்குள்ள பட்டியலினத்தவருக்கான துறையின் பெயராகச் சூட்டவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதிதிராவிடர் என்று பெயரிட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரிஜன நலத்துறை என்றுதான் இருந்தது. யார் யோசனை கொடுத்தார்களோ தெரியவில்லை, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், அதன் பெயர் ஆதிதிராவிடர் நலத்துறை என்று மாற்றப்பட்டுவிட்டது.

திமுக, அதிமுகவில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த பறையர் இனத்தவர்களுக்கு இந்த மாற்றத்தில் பங்குண்டு. அப்போதே அதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. முதலில் பள்ளர் சமூகத்தினரும், இப்போது அருந்ததியர்களும் துறையின் பெயரைப் பொதுவானதாக மாற்ற வலியுறுத்தி வருகிறார்கள். ஆக, இந்தப் பிரச்சினை ரொம்ப காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாரும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க மறுக்கிறார்கள். அதை நாமாவது செய்வோம் என்றுதான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறோம். துறையின் பெயரை மாற்றுவதைவிட்டுவிட்டு, பட்டியலைவிட்டே வெளியேறக் கோருவது பள்ளர் சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பை வெகுவாகப் பாதிக்கும் என்பதால், பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை எதிர்க்கிறோம்.

'ஆதிதிராவிடர் நலத்துறை' என்பதை எப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்குரிய பெயர் என்கிறீர்கள்?

உங்கள் கேள்வியில் ஒரு திருத்தம். 'சாதி' என்ற சொல்லை நான் எங்கும் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக பட்டியல் வகுப்பில் இடம்பெற்றுள்ள எந்த சமூகத்தையும் நான் சாதி என்று சொல்லுவதில்லை. அவர்கள் எல்லாம் சாதியற்றவர்கள் என்றுதான் அம்பேத்கரும் சொன்னார். தமிழகத்தில் பட்டியல் வகுப்பில் 76 இனங்கள் இருக்கின்றன. அதில் கோட் எண்: 2-ல், 'ஆதி திராவிடர்' என்ற தனி இனக்குழுவும் வருகிறது. ஒரு இனத்தின் பெயரில் மற்ற இனங்களும் அழைக்கப்படுவதை இங்கே பலரும் விரும்பவில்லை. இதை வெறும் கருத்தாக நான் சொல்லவில்லை. கடந்த 1996 முதல் 1998 வரை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்தவன் நான். அப்போதே இதுபோன்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்படுவதையும் பரிசீலனையின் போதே சில அரசியல் நெருக்கடிகளால் அந்தக் கோரிக்கை கிடப்பில் போடப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.

இந்தத் துறையின் கீழ் இருந்த மாநில ஆதிதிராவிடர் மன்றத்தின் பெயரை நான் 'சான்றோர் அவை' என்று மாற்றி, அடிக்கடி கூட்டம் நடத்தினேன். நான் செயலாளராகவும், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சமயநல்லூர் செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தபோது, மத்திய அரசானது பட்டியல் இனத்தினருக்கென சமூக நீதித்துறையை (Social Justice Department) உருவாக்கியது. அதுநாள் வரையில் மத்திய அரசில் பட்டியல் இனத்தோர், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் எல்லோருக்கும் சேர்ந்து நலவாழ்வு ( Welfare Department) என்று ஒரே துறையைத்தான் வைத்திருந்தார்கள்.

மத்திய அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் துறையின் பெயரை மாற்றலாமா என்று சான்றோர் அவையில் ஒரு கருத்துப் பகிர்வு கூட்டத்துக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். உடனே, சிலர் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜூக்குக் கடும் நெருக்கடி கொடுத்தார்கள். அந்தக் கூட்டமே சரியாக நடக்கவில்லை. இரண்டு மூன்று மாதங்களில் ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நான் மாற்றப்பட்டேன். பறையர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் 'ஆதிதிராவிடர்' என்ற பெயரின் மீது பொசசிவ்னஸுடன் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். "தமிழகப் பட்டியல் இனத்தில் நாங்கள்தான் பெரும்பான்மை, எனவே எங்கள் பெயரில்தான் அந்தத்துறை இருக்கும். பிடிக்காதவர்கள் பட்டியலைவிட்டு வெளியே போங்கள்" என்றுகூடச் சிலர் பேசினார்கள். வருந்தத்தக்க நிகழ்வு அது.

ஆதி திராவிடர் நலத்துறை என்ற பெயர் தொடர்ந்து நீடித்தால் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது?

தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 8 பிரிவுகளுடன் கூடிய பறையர் சமூகத்தினர் 60 சதமும், 7 பிரிவுகளுடன் கூடிய பள்ளர் சமூகத்தினர் 20 சதமும், அருந்ததியர் 16 சதமும் இருக்கிறார்கள். அதாவது, மொத்தப் பட்டியலின மக்கள் தொகையில் சுமார் 95 சதவீதம் இந்த மூன்று பிரிவினர்தான். ஒரு காலத்தில், "பட்டியல் இனத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் சாதியின் பெயரை ஆதிதிராவிடர் என்றும் பதிவு செய்யலாம்" என்று அரசாணை வெளியிட்டார்கள். அதனால் பள்ளர் உள்ளிட்ட வேறு இனத்தினரும் தங்களை ஆதிதிராவிடர் என்றே பதிவு செய்துவிட்டார்கள். அது மொத்தமே வெறும் ஒன்று அல்லது 2 சதவீதம்தான் இருக்கும். ஆனால், அந்தக் குழப்பத்தால்தான் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பில் தங்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாக இன்று பள்ளர் சமூகத்தினர் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பட்டியலின மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும். எனவேதான் இந்தப் பெயரை மாற்றச் சொல்கிறோம்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்காகக் கட்சி நடத்தும் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோர் அதிமுக, பாஜக கூட்டணியில் இருக்கிறார்கள். நீங்கள் அதிமுக, பாஜகவிடம் கோரிக்கை விடுக்காமல் திமுக தலைவரைச் சந்தித்திருப்பது ஏன்?

உங்கள் கேள்வியில் மறுபடியும் ஒரு திருத்தம். 'தேவேந்திர குல வேளாளர்' என்ற வார்த்தையில் எனக்கு உடன்பாடில்லை. நாங்கள் பள்ளர் சமூகப் பிரதிநிதிதான். நாங்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தோம். முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரம் கொடுத்தார். அவரைச் சந்தித்து 17 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தோம். பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின் அப்பாயின்மென்ட் கிடைத்ததும் அவரைச் சந்தித்து மனு கொடுத்தோம். அடுத்தடுத்துத் தமிழக முதல்வர் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திப்போம்.

ஸ்டாலினை நாங்கள் சந்தித்ததை மட்டும் எல்லோரும் பெரிதுபடுத்துகிறீர்கள். அதேபோல அந்த மனுவில், "கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஊராட்சிகளுக்குக் கூடுதல் உரிமையும், அதிகாரமும் தர வேண்டும். குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளையும், ரேஷன் கடைகளையும் அந்தந்த ஊராட்சிகளின் பொறுப்பிலேயே விட்டுவிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும்.

அப்போதுதான் அந்தந்த ஊர் மக்களே பள்ளிகளை நிர்வகிக்க முடியும். ஆசிரியர்களைக் கண்காணிக்க முடியும். ஜி.எஸ்.டி. வரியைக் கொடுத்துவிட்டு மத்திய அரசிடம் மாநிலங்கள் கையேந்தும் நிலையை மாற்ற, வரி வசூலை மாநில அரசே செய்து மத்திய அரசுக்குரிய பங்கைக் கொடுக்க வேண்டும்." என்பன உள்பட 17 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

துறைப் பெயர் மாற்றம் தொடர்பான உங்கள் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று விசிக துணைப் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. திமுகவிடம் வலியுறுத்தி இருக்கிறாரே?

நான் தொல்.திருமாவளவனுடன் தொடர்பில் இருப்பவன். அவரிடம் பேசும்போது இந்தப் பிரச்சினைகள் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறேன். கூடவே, "துறையின் பெயரை மாற்றக் கோரி நாங்கள் முன் மொழியும்போது, எங்களைப் பறையர் இனத்திற்கு எதிராக வேலை பார்ப்பவர்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் பட்டியலின ஒற்றுமைக்காகத்தான் இதைச் செய்கிறோம்.

எனவே, இந்தக் கோரிக்கையை நீங்களே முன்னெடுத்தால், சரியாக இருக்கும்" என்று அவரிடமே சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதையே சொல்கிறேன். ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை அல்லது சமத்துவத்துறை என்று மாற்ற வேண்டும் என்று அவரும் குரல் கொடுக்க வேண்டும்''.

இவ்வாறு கிருஸ்துதாஸ் காந்தி தனது பேட்டியில் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்