உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் கைது: தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் நாளிலேயே நடவடிக்கை

By கரு.முத்து

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து மூத்த தலைவர்களையும் விட முன்னதாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்போடு களமிறங்கிவிட்டன. அதிமுகவில் உயர்மட்டக் குழுக் கூட்டம், பாஜகவில் வேல் யாத்திரை, மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாவது அணிக்கான முனைப்பு என அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கின்றன.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற வியூகத்தில் திமுகவின் பிரச்சாரப் பயணம் அமையவுள்ளதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இன்று அறிவித்தார். இதன்படி திமுக சார்பில் அடுத்த 75 நாட்களுக்கு 15 மூத்த தலைவர்கள் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், 15,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,500 பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வரும் 29-ம் தேதி சேலத்திலிருந்து திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியும், ஜனவரி 5-ம் தேதி காஞ்சிபுரத்திலிருந்து ஸ்டாலினும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். அவர் பிரச்சாரத்தைத் தொடங்கிய வேகத்திலேயே விதிமுறைகளை மீறியதாக நாகப்பட்டினம் போலீஸார் இன்று மாலை திருக்குவளையில் அவரைக் கைது செய்தனர்.

திருக்குவளையிலிருந்து உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் தனது தாத்தாவைப் போலவே திமுகவுக்குத் திருப்புமுனை ஏற்படுத்தும் ஊராகக் கருதப்படும் திருச்சியில் இருந்தே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார் உதயநிதி. இன்று காலை திருச்சி சிந்தாமணி பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு கட்சிக் கொடியை ஏற்றி வைத்துவிட்டுத்தான் திருக்குவளைக்குக் கிளம்பினார்.

மாலை 4 மணியளவில், கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள கருணாநிதி, முரசொலி மாறன் உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார் உதயநிதி. அவருடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் திரண்டு வந்தனர். இதனால் விதிமுறைகளை மீறி அதிகக் கூட்டம் சேர்த்திருப்பதால் உதயநிதியைக் கைது செய்ய போலீஸார் ஆயத்தமானார்கள். அதிக அளவில் திமுக தொண்டர்கள் அங்கு திரண்டு வந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

இதற்கிடையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறித் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார் உதயநிதி. பேசி முடித்துவிட்டு இறங்கிய அவரை வழிமறித்த போலீஸார், அந்த இடத்திலேயே அவரைக் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய உதயநிதி, "இந்த ஆட்சியில் நடைபெறும் ஊழல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைப் பிரச்சாரத்தின் மூலம் நாங்கள் தொடங்கியுள்ளோம். அதைப் பொறுக்காமல் தமிழக அரசு, காவல்துறை மூலம் எங்களைக் கைது செய்துள்ளது. கரோனா காலத்தில் முதல்வர் மட்டும் மாவட்டம், மாவட்டமாகச் சென்று பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப்படுகிறது?

திமுக கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பணிகளைச் செய்யக்கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு போட்டு, என்னைக் கைது செய்துள்ளனர். அனைத்துத் தடைகளையும் தகர்த்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும்" என்றார்.

உதயநிதியின் பிரச்சாரம் 100 நாட்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்