பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம்; 9 ஆண்டுகளில் 17 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் 

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை உள்ளாட்சித் துறையின் சார்பில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 17.08 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன, இதில் ஊரகப் பகுதிகளில் மட்டும் பணி ஆணை வழங்கப்பட்ட 18.30 லட்சம் வீடுகளில் 15.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“ஆவாஸ் திவாஸ் (Awaas Diwas) வார விழா கொண்டாடப்படுவதை மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன், உணவு பதனிடுதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார்.

ஊரகப் பகுதிகளில் வாழும் வீடில்லாத, குடிசை வீடுகள் மற்றும் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிலையான வீடுகளை ஏற்படுத்திட மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) கடந்த நவம்பர் 20, 2016-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011-ல் உள்ளவர்கள் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மத்திய மற்றும் மாநில அரசின் நிதி பங்கீடு 60:40 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ரூ.72,000 மற்றும் மாநில அரசு ரூ.48,000 என ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை தேசிய அளவில் ரூ.1,20,000 ஆக இருப்பினும், தமிழக அரசால் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக மாநில நிதியிலிருந்து கூடுதலாக ரூ.50,000 வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் ஒரு வீட்டிற்கான மொத்த அலகுத்தொகை ரூ.1.70 லட்சத்துடன் கட்டுமானப் பணிக்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23,040 தொகையும், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்காக ரூ.12,000 தொகை என மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.2,05,040 வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம் தொடங்கப்பட்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருவதைக் குறிக்கும் விதமாக மத்திய அரசின் சார்பில் 16.11.2020 முதல் 22.11.2020 வரை குடியிருப்பு தின வாரம் (Awaas Diwas Week) கொண்டாடப்படுகிறது.

மத்திய அரசின் சார்பில் ஆவாஸ் திவாஸ் (Awaas Diwas) வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன், உணவு பதனிடுதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் இன்று (20.11.2020) புதுடெல்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள PMAY (G) பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டத்தில் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதல்வர் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் பிரதமர், மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன், உணவு பதனிடுதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் குடியிருப்பு தின வாரம் (Awaas Diwas Week) கொண்டாடப்படுவதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு ஏற்படுத்திட முன்னுரிமை வழங்கி செயல்பட்டு வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான அளவுத்தொகை தேசிய அளவில் ரூ.1,20,000 ஆக இருப்பினும், தமிழ்நாடு அரசு கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக மாநில நிதியிலிருந்து ரூ.50,000 கூடுதலாக வழங்குகிறது.

2016 முதல் 2020 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட 5,27,552 வீடுகளில் இதுவரை 4,01,106 பயனாளிகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு 2,65,029 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,36,077 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,26,446 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

2016 முதல் 2020 வரை மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.3,798.38 கோடி, மாநில அரசின் பங்குத் தொகை ரூ.2,532.25 கோடி மற்றும் கான்கிரீட் மேற்கூரை அமைக்க மாநில அரசின் கூடுதல் நிதி ரூ.2,637.76 கோடி என மொத்தம் ரூ.8,968.39 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2011 சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலின்படி இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற குடும்பங்கள் என நீக்கம் செய்யப்பட்ட பயனாளிகளைத் தவிர்த்து சுமார் 2,90,000 பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 2011 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை உள்ளாட்சித் துறையின் சார்பில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 17.08 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதில் ஊரகப் பகுதிகளில் மட்டும் பணி ஆணை வழங்கப்பட்ட 18.30 லட்சம் வீடுகளில் 15.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயன்பெற பல தகுதிவாய்ந்த குடும்பங்கள் அல்லது பயனாளிகளின் பெயர்கள் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011இல் இடம்பெறவில்லை. தகுதியுள்ள விடுபட்ட பயனாளிகளை சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலில் சேர்த்திட மத்திய அரசின் அனுமதி பெற்று மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9.11 லட்சம் தகுதியுள்ள பயனாளிகளின் பெயர் மற்றும் விவரங்கள் ஆவாஸ் பிளஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட இலக்கினை அடைய ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து பயனாளிகளைத் தேர்வு செய்ய ஒப்புதல் வழங்கக் கோரி மத்திய ஊரக வளர்ச்சித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைந்து வழங்கிட இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கரோனா பெருந்தொற்றின் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கான 14-வது மத்திய நிதிக் குழுவின் தமிழகத்திற்கான அடிப்படை மானியம் ரூ.548.76 கோடி மற்றும் செயலாக்க மானியம் ரூ.705.62 கோடி என மொத்தம் ரூ.1254.38 கோடியை உடனடியாக விடுவிக்கும்படி மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரை இக்கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன். பாரத பிரதமர் அனைவருக்கும் வீடு என்கின்ற எண்ணத்தை வருகின்ற 2022-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் முழுமையாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி, உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்