மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (நவ. 20) வெளியிட்ட அறிக்கை:
"சேலம் மாவட்டத்தின் 100 ஏரிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரைக் கொண்டு சென்று நிரப்பும் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், கர்நாடகத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இத்திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.
காவிரி நீர்ப்பகிர்வு குறித்து விவாதிப்பதற்காக அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இணையவழிக் கூட்டத்தில், மேட்டூர் உபரி நீர் திட்டத்தை தமிழ்நாடு தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது என்றும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் கர்நாடக அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியுள்ளனர்.
» ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் கடமையை தமிழக அரசு செய்யத் தவறிவிட்டது: வைகோ கண்டனம்
எனினும், இது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. ஆனாலும், இந்த விவகாரத்தை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டு சென்று, பெரிய சிக்கலாக்க முயலக்கூடும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்ப்பதற்கு எந்த நியாயமும் இல்லை; அத்திட்டத்தை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டியத் தேவையும் இல்லை.
மேட்டூர் உபரிநீர் திட்டம் என்பது மேட்டூர் அணை நிரம்பும் போது, தேவைக்கும் அதிகமாக உள்ள உபரி நீரை நீரேற்றும் நிலையங்கள் மூலமாக கொண்டு சென்று மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய வட்டங்களில் உள்ள 100 ஏரிகளை நிரப்புவதற்கானது ஆகும். இதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒரு டிஎம்சி-க்கும் குறைவான தண்ணீரே எடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தால் பயனடையப் போகும் பகுதிகள் அனைத்தும் ஏற்கெனவே விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலங்கள் தான். காவிரி நீரைக் கொண்டு புதிய பாசனப் பகுதிகளை உருவாக்கினால் மட்டுமே அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஏற்கெனவே உள்ள பாசனப் பகுதிகளுக்காக, வெள்ளக் காலத்தில் கிடைக்கும் நீரை திருப்பும் திட்டத்தை செயல்படுத்த தமிழகத்திற்கு உரிமை உண்டு.
மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவதால் கர்நாடகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மேகேதாட்டு அணை கட்ட தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு நெருக்கடி தருவதற்காகத் தான் இத்திட்டத்தை கர்நாடகம் எதிர்க்கிறது.
மேட்டூர் உபரி நீர் திட்டத்திற்கான எதிர்ப்பு தேவையற்றது என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான தகுதி கர்நாடக அரசுக்குக் கிடையாது. காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் கட்டப்பட்டுள்ள அணைகள் அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதிலும், அவற்றில் உள்ள தண்ணீரில் தமிழகத்திற்கு பங்கு உள்ளது.
ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் கோடைக்கால சாகுபடிக்கு சட்டவிரோதமாக தண்ணீரைப் பயன்படுத்துவது, கர்நாடக காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் சுமார் 30 டிஎம்சி அளவு தண்ணீரை சட்டவிரோதமாக சேமித்து வைப்பது என அனைத்து அத்துமீறல்களையும் அரங்கேற்றும் கர்நாடக அரசு, தமிழக அரசு அதற்கு உரிமையுள்ள தண்ணீரில் ஒரு டிஎம்சி-க்கும் குறைவான தண்ணீரை திருப்பி விடுவதை எதிர்ப்பது நியாயமல்ல; நகைமுரணானது.
மேட்டூர் உபரிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாமக தான் தொடக்கம் முதல் ஏராளமான போராட்டங்களை நடத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு சேலத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 2017 ஆம் ஆண்டு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நான் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டேன். அதன்பிறகு தான் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்திற்கு முக்கியக் காரணம் பாமக தான்.
உண்மையில், சேலம் மாவட்டத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து, மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று நிலையங்கள் மூலம் அந்த ஆறுகளுக்கு கொண்டு சென்று, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை காவிரி நீரை கொண்டு செல்வது தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தால் நேரடியாக 30 ஆயிரத்து 154 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்வளம் மேம்படுவதன் மூலம் 18 ஆயிரத்து 228 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளும் பயனடைவர்.
ஆனால், அதற்கு மாறாக சிறிய அளவில் சேலம் மாவட்டத்தின் சிறிய பகுதி மட்டும் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதையும் கர்நாடகம் எதிர்க்கக் கூடாது.
வஞ்சக எண்ணம் கொண்ட கர்நாடகத்தின் எதிர்ப்பை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். அத்துடன் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவுபடுத்தி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் வரை உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் முழு அளவில் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago