போக்குவரத்துத் துறையில் 25 கோடி ரூபாய் டெண்டரை, பத்து முறை தள்ளிவைத்து, 900 கோடி ரூபாயாக உயர்த்தியது ஏன்? அரசுப் போக்குவரத்துத் துறையில் 4 ஆண்டுகளில் 6 செயலாளர்களை நியமித்து முறைகேட்டில் ஈடுபடுவதா? என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
''தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், “அதிவிரைவாகச் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்காணிக்கும் கேமரா” அமைப்பதற்கு, தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்ட டெண்டர் அறிவிப்பு, பத்து முறைக்கு மேல் திறக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், இந்தக் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க, 2019-ம் ஆண்டு ஆக.28 அன்று டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரைத் திறப்பதற்கு முந்தைய கூட்டத்தில் (Pre Bid Meeting), 11 கம்பெனிகள் கலந்துகொண்டன. அவர்கள் வைத்த வேண்டுகோள் என்று கூறி, ஏற்கெனவே விடப்பட்ட டெண்டரில் - முறைகேடுகளுக்கு ஏதுவான பல்வேறு திருத்தங்களைச் செய்து - டெண்டர் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாகத் திருத்தப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும், இந்த கேமரா வைக்கும் டெண்டரில் ஒரு சில கம்பெனிகளுக்கு மட்டும் சாதகமான சூழலை உருவாக்கும் வகையிலும் - டெண்டர் முறைகேடுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.
முதலில் விடப்பட்ட டெண்டர் நிபந்தனைகளை அடியோடு மாற்றி அமைக்கும் புதிய திருத்தங்கள் ஏன் வெளியிடப்பட்டது, யார் தூண்டுதல், துறை அமைச்சரா அல்லது முதல்வரா? என அடுக்கடுக்காகப் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் அணிவகுத்து நிற்கின்றன.
முதலில், இந்த டெண்டரில் பங்கேற்கும் கம்பெனி, “200 சிஸ்டம்களை அமைத்துக் கொடுத்தால் போதும்” என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இக்கூட்டத்திற்குப் பிறகு இது, “1000 சிஸ்டம்கள்” என எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
25 கோடி ரூபாயாக இருந்த டெண்டர் மதிப்பு, இந்தத் திருத்தங்கள் மூலம் 900 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பங்கேற்கும் நிறுவனம் “150 சிஸ்டம்கள் செய்த நிறுவனமாகவும் - குறைந்தபட்சம் இதுபோன்ற இரு திட்டப் பணிகளை எடுத்துச் செய்த நிறுவனமாகவும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அந்த “ப்ரீ பிட்” கூட்டத்திற்குப் பிறகு, “30 சிஸ்டம்கள் உள்ள ஒரேயொரு திட்டத்தை டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் செய்திருந்தாலே போதும்” என்று அனுபவம் குறைக்கப்பட்டு, ஒரு திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சருக்கோ அல்லது ஊழலுக்கோ துணைபோகும் ஒரு புதிய கம்பெனியை இந்த டெண்டரில் புகுத்தவே இந்தச் சட்டவிரோதத் திருத்தங்கள், எவ்வித ஆலோசனையும் இன்றி, ஒருதலைப்பட்சமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு திட்டப் பணிக்கான டெண்டரில் கோரப்பட்டிருந்த அனுபவத்தைத் திடீரென்று குறைப்பதும், அப்படிக் குறைந்த அனுபவத்துடன் வரும் கம்பெனிக்கு அதிக மதிப்புள்ள பணியை ஏற்படுத்துவதும், “வேண்டப்பட்ட நிறுவனத்திற்கு” தாரைவார்க்கவே என்ற சந்தேகம் தாராளமாக ஏற்பட்டிருக்கிறது.
வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பது மக்களின் உயிர்ப் பாதுகாப்புடன் தொடர்புடையது. மனித உயிரைப் பாதுகாக்கும் இதுபோன்ற டெண்டரிலும், தரமில்லாத தனியார் கம்பெனிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், டெண்டர் நிபந்தனைகளைத் திருத்துவது, மன்னிக்க முடியாத மிகப்பெரிய மோசடி.
மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, டெண்டரில் பணம் கொள்ளையடிக்கும் தீய செயலில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.
அதிமுக ஆட்சியில் அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் வேண்டிய கம்பெனிகளுக்காக, டெண்டர் நிபந்தனைகளை திடீர் திடீரென மாற்றுவது, ஆன்லைன் டெண்டர் என்று மோசடி செய்வது; நியாயமாகப் போட்டியிட வரும் கம்பெனிகளை விரட்டி அடித்து, ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் கம்பெனிகளுக்கு வணக்கம் போட்டு வரவேற்பு அளிப்பது, எல்லாம் சர்வ சாதாரணமாகி, டெண்டர் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தையே கேலிக்குரிய பொருளாக ஆக்கியுள்ளது.
இதுபோன்ற காரியங்களிலும் ஊழல் செய்கிறோமே என்ற மனசாட்சி உறுத்தலே இல்லாமல், இப்படி டெண்டர் நிபந்தனைகளில் மிக மோசமான திருத்தங்களைச் செய்வதில் ஈடுபட்டு, அரசு கஜானாவைக் காலி செய்யும் வெட்கக் கேடான செயல்களில் எடப்பாடி அதிமுக அரசு ஈடுபடுவது மகா கேவலமான, அருவருக்கத்தக்க போக்காகும்.
ஏற்கெனவே மழை பெய்தால் ஒழுகும் பேருந்துகள், புதிதாக வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் பயணிகள் இறங்கித் தள்ளி விட வேண்டிய நிலையில் உள்ள பேருந்துகள், மழை பெய்யும்போது ஓட்டுநர்கள் சாலையைத் தெளிவாகப் பார்க்க முடியாத அளவிற்குக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ள அவலமான நிலையில் புதிய பேருந்துகள் எனப் போக்குவரத்துத் துறை, சீரழிவின் உச்சத்தில் நிற்கிறது. இதனால் மழைக் காலங்களில் அதிக விபத்துகள் நடைபெற்று, அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளுக்கு வித்திடுகிறது.
ஏழை - எளிய நடுத்தர மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகக்தின் பேருந்துகள், அடித்தட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வரும் நிகழ்வு, அதிமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெண்டர் ஊழல்கள் போக்குவரத்துத் துறையை ஆட்டிப் படைக்கிறது.
தமிழக வரலாற்றில் 2016 முதல் 2020 வரை, சில தினங்களுக்கு முன்பு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்ஸையும் சேர்த்து, போக்குவரத்துத் துறையில் 4 ஆண்டுகளில் 6 அரசு செயலாளர்களைக் கண்ட துறை என்றால், அது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் போக்குவரத்துத் துறையாகத்தான் இருக்கும்.
ஊழல் முறைகேடுகளுக்காக, இப்படி அரசுத் துறைச் செயலாளர்களை அடிக்கடி மாற்றி, அமைச்சர், மக்களின் உயிரைப் பகடைக்காயாக்கிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆகவே, பத்து முறை தள்ளி வைக்கப்பட்ட “அதிவிரைவு வாகனங்களின் எண்களைக் கண்காணிக்கும் கேமரா அமைக்கும் டெண்டரை” மக்களின் பாதுகாப்புக் கருதி, உடனடியாக ரத்து செய்து விட்டு, புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், முதல்வர் பழனிசாமி இந்த டெண்டர் விஷயத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago