கிராமத்திலிருந்து வந்ததால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று ஸ்டாலின் நினைத்துவிட்டார்: முதல்வர் பழனிசாமி பேச்சு

By செய்திப்பிரிவு

ஸ்டாலினுக்கு தினந்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கமே வரும். தினந்தோறும் அறிக்கை விட்டு அறிக்கை நாயகனாக வேண்டுமானால் ஸ்டாலின் திகழலாமேயொழிய, நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய எந்தக் காலத்திலும் உங்களுடைய கட்சியும் வராது, உங்களுடைய ஆட்சியையும் மக்கள் கண்டது கிடையாது என முதல்வர் பழனிசாமி பேசினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், மேட்டூர், வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

“நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டதன் விளைவாக 2019-2020இல் இந்திய அளவிலே தேசிய விருதைப் பெற்றிருக்கின்றோம். இந்தத் துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் தேசிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்த அரசு எங்களுடைய அரசு என்பதைப் பெருமிதத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக, ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டன, கால்வாய்கள் நவீனமாக்கப்பட்டன.

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்தோம். அதன் மூலமாக, என்றைக்கும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு டெல்டா மாவட்டப் பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையத்தில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சரித்திரச் சாதனையைத் தமிழக அரசு படைத்திருக்கின்றது.

கடந்த காலங்களில் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்தார்கள். 23 லட்சம் மெட்ரிக் டன் எங்கே? 32 லட்சம் மெட்ரிக் டன் எங்கே? ஆகவே, அரசு எந்த அளவிற்கு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதேபோல, இன்றைக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு, டெல்லியைப் பார், கேரளாவைப் பார் என்று குறை சொன்னார்கள். இப்பொழுது நீங்கள் டெல்லியையும், கேரளாவையும் பாருங்கள். ஆனால், இப்பொழுது பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். கரோனா வைரஸ் நோய்த் தொற்று தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறதென்றும், கேரளாவிலும், டெல்லியிலும் குறைந்திருக்கிறதென்றும் அன்றைய தினம் சொன்னார்கள்.

இன்றைக்கு அந்த இடங்களில் அதிகமாகியிருக்கிறது. தமிழக அரசு சரியான முறையில் நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாக குறைந்து கொண்டிருக்கின்றது. மற்ற மாநிலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் குறைந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு படிப்படியாக வேளாண் பணிகள் 100 சதவீதம் நடைபெற்று வருகின்றன.

தொழிற்சாலைகளும் 100 சதவீதப் பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. படிப்படியாக இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்குப் பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினந்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கமே வரும். முதலில், இந்த ஆட்சி ஒரு வாரம்கூட தாங்காது, ஒரு மாதம் தாங்காது, 6 மாதம் தாங்காது, ஒரு வருடம் தாங்காது என்று சொன்னார். இப்பொழுது, மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்காவது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதிமுக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் GDP 8 சதவீதம் இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. கரோனா வைரஸ் தொற்று இருக்கின்ற காலகட்டத்தில் கூட, புதிய, புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன. கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட மார்ச் மாதம் முதல் இப்பொழுது வரை அதிகமான தொழிற்சாலைகள் தொடங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

வேளாண்மையில் முதலிடம், தொழிற்சாலைகள் தொடங்குவதில் முதலிடம், சுகாதாரத் துறையில் முதலிடம், கல்வியில் முதலிடம் என எல்லாவற்றிலும் முதலிடத்தில் தமிழ்நாடு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்டாலினால் இதனைப் பொறுக்க முடியவில்லை. ஏதோ பழனிசாமி கிராமத்திலிருந்து வந்திருக்கிறார், இவரால் ஒன்று செய்ய முடியாது என்று நினைத்தார். அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறோம்.

தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு தினந்தோறும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறையில் இருந்துகொண்டே ஏதாவது ஒரு அறிக்கை விடுகிறார். ஒரு நாளாவது வெளியில் வந்திருக்கிறாரா? அறையில் இருக்கும்போதுகூட, கையில் உறை, கண்ணாடி அணிந்து கொண்டுதான் இருக்கிறார். அங்கு என்ன வைரஸா வரப் போகிறது? அவர் ஒருவர்தான் தனியாக இருக்கிறார். இங்கே கூட நாம் எல்லாம் இருக்கிறோம். ஆகவே, நாட்டு மக்களுக்கு உழைக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக, ஒரே அரசு அதிமுக அரசு.

தமிழ்நாடு முழுவதும் 4 மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, மாவட்டங்களில் என்னென்ன வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவிற்கு நடைபெற்றிருக்கின்றது போன்ற விவரங்களைக் கேட்டறிந்தேன்.

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகளில், மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய்த் துறை போன்ற துறைகள் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற விவரத்தை ஆய்வு செய்து, இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தி, ஆலோசனைகள் வழங்கியதன் விளைவாக இன்றைக்கு தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, குறைந்திருக்கிறது.

வேண்டுமென்றே தினந்தோறும் அறிக்கை விட்டு அறிக்கை நாயகனாக வேண்டுமானால் ஸ்டாலின் திகழலாமேயொழிய, நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய எந்தக் காலத்திலும் உங்களுடைய கட்சியும் வராது, உங்களுடைய ஆட்சியையும் மக்கள் கண்டது கிடையாது. திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? ஆனால், நாங்கள் எவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம், நாட்டு மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன போன்றவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேண்டுமென்றே அரசின் மீது பழி சுமத்துவது, அமைச்சர்கள் மீது பொய்யான, அவதூறான செய்திகளை பத்திரிகையில் வெளியிடுவது, இதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான கருத்துகளை மக்களுக்குச் சொல்லுங்கள். அதன் மூலமாக எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர்வதற்கு முயற்சி செய்யுங்கள்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்