7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கவுன்சிலிங்; தமிழக வரலாற்றில் ஒரு பொன்னான நாள்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

By செய்திப்பிரிவு

ஏழைகளும் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்கியது அதிமுக அரசு என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, இளநிலை மருத்துவப் பிரிவுகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கான சேர்க்கை ஆணைகளை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சி சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"இந்த நாள் எனது வாழ்வில் ஒரு மகிழ்ச்சிகரமான நாள். தமிழக வரலாற்றில் ஒரு பொன்னான நாள். அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள். அரசுப் பள்ளியில் படித்தவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ள திருநாள். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதில் எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் நாள்.

தமிழக அரசு கொள்கை அளவில் நீட் தேர்வினைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. பிரதமருக்கு நான் பலமுறை கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதுமட்டுமல்லாமல், சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து எனது அரசு நடத்தி வருகின்றது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி நீட் தேர்வு நடைபெற்று வருகின்றது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது.

அரசுப் பள்ளி மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தபோதிலும், நீட் தேர்வினை எதிர்கொள்ளத் தேவையான வசதியும், வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதனால், வசதி வாய்ப்புள்ள பிற மாணவர்களுடன் போட்டியிட்டு இத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண்கள் பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 ஆகும். இதில் 41 சதவீதம், அதாவது 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 மாணவர்கள் 3,054 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களே ஆகும். கடந்த ஆண்டு மருத்துவம் பயில வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வாயினர். இந்த நிலையை மாற்றிட வேண்டும் என நான் உறுதிகொண்டேன். ஏனென்றால், 41 சதவீதம் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, வெறும் 6 இடங்கள்தான் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தச் சட்டத்தை நாங்கள் கொண்டுவந்து நிறைவேற்றினோம்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் உங்களைப் போன்ற ஏழை, எளிய மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளித்து, உங்களுடைய மருத்துவக் கனவு லட்சியத்தை நிறைவேற்றிட, கடந்த மார்ச் மாதமே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் நான் அறிவித்தேன்.

இதைச் செயல்படுத்த, முதற்கட்டமாக நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி என்னுடைய 110 அறிவிப்பின்படி, இன்று பல தடைகளைத் தாண்டி, சட்டமாகி, ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கி உள்ளது.

இதுவரை உங்களது குடும்பங்கள் எவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும், இனிமேல் உங்களுடைய குடும்பங்கள் மருத்துவர் குடும்பங்கள் என்றே அழைக்கப்படும்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத இடங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் சட்டம், ஆளுநரின் ஒப்புதலுடன் 30.10.2020 அன்று இயற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 15 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் மற்றும் 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

2011 ஆம் ஆண்டில் மொத்தம் 1,945 ஆக இருந்த மருத்துவப்படிப்பு இடங்கள், ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால், 2017 வரை 3,060 ஆக உயர்ந்தது. தமிழக அரசின் நடவடிக்கைகளினால் தற்போது இது 3,650 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் வரலாற்றுச் சாதனையாக 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 1,650 புதிய இடங்கள் 2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் உருவாக்கப்படும். ஆக மொத்தம் தமிழக அரசால், நான் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேருகின்ற வரை 1,990 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை வரலாற்றுச் சாதனையாக நான் கருதுகிறேன்.

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 2011-ம் ஆண்டு பொறுப்பேற்றபொழுது தமிழகத்தில் 1,945 மாணவர்கள்தான் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கும் நிலை இருந்தது. இன்றைக்கு நான் முதல்வராகப் பதவி வகித்த பிறகு, அடுத்த ஆண்டு, அதாவது 2021-22ஆம் ஆண்டு நடைபெறுகின்ற மருத்துவக் கலந்தாய்வுக் கூட்டங்களைப் பார்க்கின்றபொழுது மருத்துவப் படிப்பில் 1,990 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றால், தமிழக அரசு எந்த அளவுக்குச் செயல்பட்டுள்ளது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 227 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் 86 இடங்களும் என மொத்தம், 7.5 சதவீதத்தால் 313 இடங்கள் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடங்கள் கிடைக்கும். சென்ற ஆண்டு வெறும் 6 இடங்கள் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்தது. தற்போது 313 இடங்கள் கிடைத்துள்ளன.

இதேபோன்று, அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 80 இடங்களும், என மொத்தம் 92 இடங்கள் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பல் மருத்துவப் படிப்பில் இடங்கள் கிடைக்கும்.

இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையின் கீழ், எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவச் சேர்க்கையில் மொத்தம் 405 இடங்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குக் கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக 'போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளேன்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், இந்த 7.5% இட ஒதுக்கீடு அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்குக் கிடைப்பதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கைகள் வைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அரசுப் பள்ளிகளில் 41% மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 மாணவர்கள் படிக்கின்றார்கள், அதில் 6 மாணவர்களுக்குத்தான் கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்திருக்கிறது என்று சொன்னால், 41% மாணவர்களைப் புறக்கணிக்கின்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது என்ற எண்ணம் தோன்றிய காரணத்தினால்தான், அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற, சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில், அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் குறிப்பாக, ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றபோது அவர்கள், ஏழைகளுக்கு மருத்துவச் சேவை செய்ய முன்வருவார்கள்.

ஏழைகளுக்கு என்ன சிரமம் இருக்கின்றதென்பதை அவர்கள் வாழ்வில் அனுபவித்த காரணத்தினால், அவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று மருத்துவர்களாக வருகின்றபோது, ஏழை மக்களுக்கு உரிய மருத்துவச் சேவையை செய்வார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில், ஏழைகளும் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்கியது இந்த அரசு.

ஏழை மக்கள் நிறைந்த பகுதிகளையெல்லாம் தேர்ந்தெடுத்து, தமிழ்நாடு முழுவதும் சுமார் 2,000 மினி கிளினிக் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். ஏழை மக்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென்பதற்காக இந்தத் திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும், சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக உள்ள ஏழைகளுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான், தமிழக அரசு மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, விரைவில் ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற அந்தப் பகுதியிலேயே மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகை செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இங்கே அமர்ந்திருக்கின்ற அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் அழுதுகொண்டே சொன்னார்கள், ஒரு தொழிலாளி அவருடைய நிலையை இங்கு சொன்னார். அவருடைய மகளுக்கு மருத்துவம் பயில இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று எண்ணித் தவித்துக் கொண்டிருந்த வேளையில், இன்றைக்கு அரசு உள் ஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவம் பயில இடம் கிடைத்திருக்கின்றது என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

இப்படி ஏழைகளுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கக்கூடிய வசதியை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் அளிக்கும். தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை ஏழைகள் நிறைந்த பகுதிகளில் நல்ல தரமான மருத்துவச் சேவை அளிக்க இப்படிப்பட்ட மாணவர்களை, இந்த அரசு ஊக்குவிக்கும். அவர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவச் சேவையைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியதைப் போல, நானும் ஆரம்பக் கல்வியையும், உயர்நிலைக் கல்வியையும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஏழை, எளிய மாணவ, மாணவியர் அரசுப் பள்ளிகளில் அதிகமாகக் கல்வி கற்கின்ற வசதியை அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. அப்படிப்பட்ட மாணவர்களின் கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காகத்தான், இந்த உள் ஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்