புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களை சட்டரீதியில் பெற உரிய நடவடிக்கை எடுக்க, துணைநிலை ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமருக்கு புதுச்சேரி அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ இன்று (நவ. 18) குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இதில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
மீதியுள்ள 3 மருத்துவக் கல்லூரிகள் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதுச்சேரியில் இயங்கும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்குவதற்கு அனுமதி கேட்டபோது உறுதியளித்தபடி 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்கவில்லை. மாறாக, நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்வது உள்ளிட்ட சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி அரசு இடங்களை வழங்க மறுத்து வருகின்றன.
» விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்
நீட் தேர்வுக்கு முன் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அரசின் இட ஒதுக்கீடாக 25 சதவீதம், 30 சதவீதம் என வழங்கி வந்த நிலையில், நீட் தேர்வுக்குப் பின் இந்த 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் அரசுக்கு அளித்துவந்த மருத்துவ இடங்களை வழங்குவதில்லை.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று மத்திய மருத்துவத் துறையின் மூலம் உத்தரவிட்ட நிலையிலும் புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு 50 சதவீத இடங்களை சட்ட ரீதியில் பெற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் தமிழக அரசு பெற்று வருகிறது. புதுச்சேரியில் இதற்கு மாறாக தனியார் மருத்துவக் கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை காங்கிரஸ் அரசு எடுத்து மனம்போன போக்கில் மத்திய அரசின் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் 33 சதவீத இடங்களை மட்டுமே பெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டப்பட்ட அமைச்சரவையில் தனியார் பல்கலைக்கழகம் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் மாநிலம் முழுவதும் இருக்கும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் ஒரு இடம் கூட அரசின் இட ஒதுக்கீடாக பெற முடியாத நிலை ஏற்படும். திட்டமிட்டு புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு மிகப்பெரிய அளவில் கையூட்டு பெற்றுக்கொண்டு முடிவு எடுத்துள்ளது.
இதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசத்தில் தனியார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் மாணவர்களுக்கு எதிரான சதி செயலை தடுத்து நிறுத்தி, மாநில மாணவர்களின் நலனை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி காங்கிரஸ் அரசால் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் அனுமதியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக சட்ட ரீதியில் பெற துணைநிலை ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க, தாங்கள் துணைநிலை ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago