திருச்சி மாவட்டத்தில் அமையும் 10-வது அடர்வனம்; பூனாம்பாளையத்தில் 4.26 ஏக்கரில் அமைகிறது

By ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் 'மியாவாக்கி' முறையிலான அடர்வனம் அமைக்கும் திட்டம் 10-வது இடமாக பூனாம்பாளையத்தில் இன்று தொடங்கப்பட்டது.

குறைந்த பரப்பில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டுவைத்து அடர்ந்த குறுங்காடு உருவாக்கும் முறையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி கண்டுபிடித்தார். இதனால், இந்த முறையிலான காடு வளர்ப்பு 'மியாவாக்கி' என்று அழைக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட அருள்மிகு ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான தெற்கு தேவி தெரு நந்தவனத்தில் 5,027 சதுர மீட்டர் இடத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வைத்து அடர்வனம் அமைக்கும் பணி 2019, டிச.20-ம் தேதி தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் மரக்கன்று நட்டுவைத்துப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

புங்கை, பாதாம், ஈட்டி, வாகை, வேங்கை, மலைவேம்பு, நீர்மருது, தேக்கு, சரக்கொன்றை, எலுமிச்சை, தூங்குவாகை, கொய்யா, மருதாணி, பூவரசு, வன்னி, பலா, நாவல், மகிழம், பெருநெல்லி, மல்லிகை, செவ்வரளி, மாதுளை, கருவேப்பில்லை, அகத்தி, கல்யாண முருங்கை, பாக்கு, இயல்வாகை, இலுப்பை, நாகலிங்கம், மூங்கில், வில்வம் என நாட்டு மரங்கள், அதிவேகமாக வளரக்கூடிய மரங்கள், அடர்த்தியாக வளரக்கூடிய மரங்கள் என 53 வகையான 10 ஆயிரம் மரக்கன்றுகளும், இவை தவிர 50 துளசிச் செடிகளும் இங்கு நட்டுவைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட பெருமாள்புரம், சஞ்சீவி நகரில் 2 இடங்கள், பாலாஜி நகர், திருவானைக்காவல் வடக்கு சீனிவாசநகர் ஆகிய இடங்களில் குறைந்த பரப்பளவில் பல்வேறு வகை மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டன. இதன்படி, மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் மட்டும் 6 இடங்களில் மொத்தம் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டு, அவை தற்போது 15 அடி உயரம் வரை வளர்ந்து செழிப்பாகக் காட்சியளிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, லால்குடி ரயில் நிலையம் அருகே 1.75 ஏக்கரில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அக்.10-ம் தேதியும், சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயில் வளாகத்தில் 0.85 ஏக்கரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை நவ.6-ம் தேதியும், லால்குடி வட்டம், கல்லக்குடி பேரூராட்சி லட்சுமி நகரில் 1.30 ஏக்கரில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை நவ.7-ம் தேதியும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தொடங்கிவைத்தார்.

இந்தநிலையில், மண்ணச்சநல்லூர் வட்டம் பூனாம்பாளையம் கிராமத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுவைத்து அடர்வனம் உருவாக்கும் திட்டம் இன்று (நவ. 17) தொடங்கியது. 4.26 ஏக்கரில் அமையவுள்ள இந்த அடர்வனம் உருவாக்கும் திட்டத்தை மரக்கன்றுகளை நட்டுவைத்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று தொடங்கிவைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் த.மலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.ராஜேந்திரன், எம்.மாதவன், பூனாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் 'மியாவாக்கி' முறையிலான அடர்வன குறுங்காடு தொடங்கக் காரணமாக இருந்து, பல்வேறு இடங்களிலும் அதைச் செயல்படுத்தி வரும் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறுகையில், "மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையராக இருந்தபோது மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் ஆலோசனையின்பேரில் ஸ்ரீரங்கத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன்.

அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவுரையின்படி அரசுத் துறைகளின் உறுதுணையுடன் பல்வேறு பகுதிகளிலும் அடர்வனம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஓரிடத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது பூனாம்பாளையத்தில்தான். 5 நாட்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டு விடும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அடர்வனம் பகுதியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படுதுடன், பறவைகள், பூச்சிகள், தேனீக்கள் வனத்தில் அதிக அளவு வரும். அவற்றின் மூலம் உயிர்ச்சூழல் மேம்படும். மரக்கன்றுகள் நன்கு வளர்ந்தவுடன் வனத்தில் செல்லும் உணர்வு மக்களுக்குக் கிடைக்கும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்