சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒரே நாளில் 25 செ.மீ வர மழை பெய்வதற்காக வாய்ப்புகள் இருப்பதால் எந்த நேரமும் நிலைமை மோசமடையக் கூடும், அதனால் போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருவதால், சென்னையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ? என்ற அச்சமும், பதற்றமும் சென்னை மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
சென்னைக்கு உடனடியாக வெள்ள ஆபத்து இல்லை என அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும், இயற்கை எந்த நேரத்திலும் எத்தகைய விளைவை வேண்டுமானாலும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதை எதிர்கொள்ள அரசு எந்திரம் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும்.
சென்னையின் புறநகர் பகுதியில் பூந்தமல்லி அருகில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடி. அதன் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி ஆகும். ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21 அடியையும், கொள்ளளவு 3000 மில்லியன் கன அடியையும் கடந்து விட்டன.
ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டும் போது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதும், அதிலிருந்து அடையாற்றில் தண்ணீர் திறந்து விடுவதும் வழக்கமான ஒன்று தான் என்றாலும் கூட, கடந்த 2015-ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதும், அதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதும் சென்னை மாநகர மக்களின் மனக்கண்களில் தோன்றி அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வதால் சென்னையில் வெள்ளம் ஏற்படுமோ? என்று அச்சம் கொள்ள வேண்டாம்; அது தேவையற்றது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்க இந்த அறிவிப்பு போதுமானது தான். ஆனால், சென்னைக்கு எந்த நேரமும் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அரசும், மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதால் மட்டுமே சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது. 2015-ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பெருமளவில் நீர் திறந்து விடப்பட்டது மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக பல ஏரிகள் நிரம்பி அடையாற்றில் அதன் முழு கொள்ளளவையும் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது தான் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாகும். இப்போதும் அத்தகைய ஆபத்து ஏற்படுவற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.
செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் நிரம்பவில்லை என்றாலும் கூட காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 67 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. 127 ஏரிகள் 75 விழுக்காடும், 206 ஏரிகள் 50 விழுக்காடும் நிரம்பியுள்ளன. அடுத்த சில நாட்களுக்கு தொடர்மழை பெய்தால் இந்த ஏரிகளும் முழுமையாக நிரம்பிவிடக் கூடும். அதுமட்டுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றி திருப்பெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ள 96 ஏரிகளில் 30 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. தேவனேரி நிரம்பி வழிவதால் எறையூர்- திருப்பெரும்புதூர் இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது.
நிரம்பிய ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் தொடர்மழை காரணமாக அடையாற்றில் வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி, கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு, புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் சூழலில் சென்னைக்கு வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒரே நாளில் 25 செ.மீ வர மழை பெய்வதற்காக வாய்ப்புகள் இருப்பதால் எந்த நேரமும் நிலைமை மோசமடையக் கூடும். இத்தகைய வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகும் மழை நீடிக்கும்பட்சத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளின் கரைகளை ஒட்டிய பகுதிகளில் காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
சென்னை மற்றும் புறநகருக்கான மழை வாய்ப்புகள், ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு ஒருமுறை முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை வெளியிட வேண்டும். அதன்மூலம் மக்களை பதற்றமின்றி, அதேநேரத்தில் எந்த நிகழ்வுக்கும் தயார் நிலையில் அரசு வைத்திருக்க வேண்டும்.
பல இடங்களில் விஷமிகள் தங்களின் சுயநலனுக்காக ஏரிகளின் கரைகளை உடைக்கக்கூடும்; அதனால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அதைத் தடுக்கவும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்”.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago