தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11 மருத்துவக் கல்லூரிகள் என்று கூறி, தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (நவ.17) வெளியிட்ட அறிக்கை:
"மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 24 மணி நேரமும் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் நல்வாழ்வு, பொருளாதார வளர்ச்சி பற்றியல்ல.
மதச்சார்பின்மை - சமூக நீதிக்கு நாளும் குழிபறிப்பு!
» புதுச்சேரியில் புதிதாக 72 பேருக்குக் கரோனா; உயிரிழப்பு இல்லை: 96.01 சதவீதம் பேர் குணமடைந்தனர்
» அடுத்த இரு தினங்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
மதச்சார்பின்மையை எந்தெந்த வகைகளில் எல்லாம் ஒழிக்கலாம், சமூக நீதியில், இட ஒதுக்கீட்டில் எப்படி எப்படியெல்லாம் எந்தெந்த வகைகளில் எல்லாம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி, உயர் சாதியினருக்கு ஒட்டுமொத்தமாகக் கொண்டு சேர்க்கலாம் என்பதில் ஒரு தனிக் குழுவே முழு வீச்சில் செயல்படுவதாகவே தெரிகிறது.
நீதிமன்றம் சொல்லியும் கேட்கவில்லை!
மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நீதிமன்றம் சொல்லியும், 50 விழுக்காடு இடங்களைக் கொடுக்க முடியாது என்று சொல்லுகிறது மத்திய பாஜக அரசு. இன்னொரு பக்கத்தில் உயர் சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு பந்தயக் குதிரைப் பாய்ச்சல் வேகத்தில் அவசரமாகச் சட்டம் இயற்றிச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்ததைப் புரிந்துகொண்டால், இன்றைய மத்திய பாஜக அரசு உயர் சாதியினருக்கான அரசு என்பது பட்டவர்த்தனமாகவே பளிச்சென்று தெரியவரும்.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் நீட் மூலம் தேர்வு என்ற ஒன்றினைத் திணித்தது. அதே நேரத்தில், மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், ஜிப்மர் (புதுச்சேரி), நிம்ஹான்ஸ் (பெங்களூரு), பிஜிஐ (சண்டிகார்) ஆகிய கல்லூரிகளுக்குத் தனி நுழைவுத்தேர்வை நடத்தி வந்தது.
ஓர் அறிவிப்பு
மிகவும் நெருக்கடியான கரோனா காலமான 2020இல் மட்டும் இந்தக் கல்லூரிகளையும் நீட் தேர்வின் கீழே கொண்டு வந்தது. 15.11.2020 அன்று ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. எட்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் உள்பட 11 கல்லூரிகளுக்கு, நீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, முக்கியத்துவம் வாய்ந்த 11 கல்லூரிகளுக்கு இவற்றுக்கென்று INI - CET என்பதன் மூலம் மாணவர்கள் 2021 ஆம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்படுவார்களாம்.
இதற்கான தகவல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம்தான் கவனிக்கத்தக்கதாகும். இந்தக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் அந்தந்தக் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறை சீராகப் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
மாநிலங்கள் அளிக்கும் இடங்களுக்கு இட ஒதுக்கீடு மறுப்பு
மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்களுக்கு, பிற்படுத்தப்பட்டோருக்குரிய மாநில அரசுகளால் பின்பற்றக்கூடிய இட ஒதுக்கீட்டைக் கொடுக்க மறுக்கும் மத்திய பாஜக அரசு இந்த 11 கல்லூரிகளில் மட்டும் இட ஒதுக்கீடு உண்டு என்பது முரண்பாடுதானே!
தேசிய முக்கியத்துவம் என்பது எந்த அடிப்படையில்?
இதில் இன்னொன்று முக்கிய கவனத்துக்கு உரியதாகும். 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது எந்த அடிப்படையில்? சென்னையில் உள்ள நூற்றாண்டு கண்ட எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி அந்தப் பட்டியலில் வராதா?
எம்.டி., எம்.எஸ்., டி.எம்., எம்.சி.ஹெச். போன்ற உயர்தரப் படிப்புகளில் இந்த நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு என்று இடங்களை ஒதுக்கும் அநியாயமும் இன்னொரு பக்கத்தில்.
கரோனா காலத்தில் இந்த 11 கல்லூரிகளின் பங்களிப்பு என்ன?
கரோனாவால் நாடே நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இவர்கள் சொல்லும் தேசிய முக்கியத்துவம் அல்லாத மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளின் மருத்துவர்கள் பங்களிப்பு, அர்ப்பணிப்பு மகத்தானது, அசாதாரணமானது.
அதேநேரத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தம்பட்டம் அடிக்கும் இந்த 11 மருத்துவக் கல்லூரிகளின் பங்களிப்பும், நோய்த் தடுப்பும் என்ன? அறிவு நாணயத்துடன் சொல்லட்டுமே பார்க்கலாம். மருத்துவத் துறையில்கூட மேல்தட்டுப் பிரிவு என்ற ஒன்று இருக்கிறது போலும்!
ஒவ்வொரு நாளும் சமூக நீதி மீது தாக்குதல்!
ஒவ்வொரு நாளும் சமூக நீதி மீதான தாக்குதல் கரோனாவை விட மிகக் கொடூரமாக இருக்கிறது. எளிதாகப் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் இந்த நாட்டின் பெரும்பாலான வெகுமக்கள்.
இவர்களின் உரிமைகளை வேரோடு பிடுங்கி, குறைந்த சதவீதத்தில் உள்ள உயர்சாதியின் வயிற்றில் அறுத்துக் கட்டப்படுகிறது என்பதுதான் உண்மை. வெகுமக்கள் எழுச்சி பெறுவார்களா? சிறு கூட்டத்தின் ஆதிக்கம் மேலும் மேலும் இறுகுவதா? என்ற கேள்வி நியாயமானதாகும்.
தேசியக் கட்சிகளின் கடமை!
இந்தக் கேள்வி இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட வேண்டும், மாநில அளவில் ஒரு பக்கம் எழுச்சியை நாம் உண்டாக்கினாலும், தேசியக் கட்சிகள் இந்த உயிர் நாடிப் பிரச்சினையில் போதிய அக்கறையும், கவனமும் செலுத்தி, ஒரு பேரலையை எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அந்தக் கடமையைச் செய்யும்போது, மாநிலக் கட்சிகளும் ஆங்காங்கே தம் பங்களிப்பையும் பெரிதாக அளிக்கச் சித்தமாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றம் என்று எடுத்துக் கொண்டாலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உண்டு.
தமிழக எம்.பி.க்கள் முன்னெடுக்கட்டும்!
கட்சிகளைக் கடந்த இவர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டால் சமூக நீதியை நிலைநாட்ட கண்டிப்பாக முடியும். மற்ற மாநிலங்களைவிட தமிழக உறுப்பினர்கள் காலத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த அரும்பணியை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று, சமூக நீதிக்காகவே பிறந்த இயக்கத்தின் தொண்டன் - பொறுப்பாளன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago