சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவை நவம்பர் 23-ம் தேதி கூட்டி இருக்கிறது திமுக. பிஹார் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடவைச் சந்தித்திருக்கும் நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணித் தோழன் காங்கிரஸுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளிப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 41 இடங்களை ஒதுக்கியதால் அதில் அதிக இடங்களில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்க வழிவகுத்தது போல் இந்தமுறையும் நடந்துவிடக் கூடாது என்பதில் திமுகவினர் அதிகப் பதற்றத்துடன் இருக்கிறார்கள். இதையடுத்து, இம்முறை காங்கிரஸுக்கு 20 இடங்களுக்கு மேல் ஒதுக்கக்கூடாது என்ற குரல்களும் திமுக வட்டாரத்தில் ஆங்காங்கே வெளிப்படையாகவே ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அதுவும், பிஹார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தச் சத்தம் சற்று அதிகமாகவே கேட்கத் தொடங்கி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து வழக்கமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளருக்கே உழைத்துக் களைத்துப் போயிருக்கும் திமுகவினர் இந்த முறை தங்கள் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். அதன்படி காரைக்குடி தொகுதி திமுக நிர்வாகிகள் 8 பேர் அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இம்முறை காரைக்குடியில் திமுகதான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து இந்து தமிழ் இணையத்திடம் பேசிய அந்த நிர்வாகிகளில் ஒருவர், “திமுகவுக்குச் சாதகமான தொகுதிகளில் முக்கியமான தொகுதி காரைக்குடி. ஆனால், 1996-ல் இருந்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமாகா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கே தொடர்ந்து இந்தத் தொகுதியைக் கேட்டுப் பெற்று வருகிறார். இடையில் 2001-ல் மட்டும் பாஜக கூட்டணியில் திமுக இருந்தது. அப்போதும் இந்தத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கி எச்.ராஜாவை ஜெயிக்க வைத்தோம். அந்த ஒரு தேர்தலைத் தவிர மற்ற நான்கு தேர்தல்களிலும் தனது விசுவாசிகளுக்காக காரைக்குடி தொகுதியைக் கலைஞரிடம் பேசி காங்கிரஸ் மற்றும் தமாகாவுக்கே ஒதுக்க வைத்தார் சிதம்பரம்.
திமுக இங்கு வலுவாக இருப்பதால் கதர்ச் சட்டைக்காரர்களுக்கு வெற்றியும் எளிதாக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து 5 தேர்தல்களில் கூட்டணிக் கட்சிக்கே உழைத்து உழைத்து நாங்கள் ஓடாகிக் கிடக்கிறோம். தொடர்ந்து காங்கிரஸ் தொகுதியாகவே இருப்பதால் திமுக ஆளும் கட்சியாக வந்தாலும் தொகுதிக்குப் பெரிய அளவில் நன்மைகள் கிடைப்பதில்லை. அதனால் இந்த முறை காரைக்குடி தொகுதியில் திமுகதான் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறோம். அதற்கான காரணங்களையும் அவரிடம் பட்டியலிட்டிருக்கிறோம்.
எங்களது கோரிக்கையைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அவர், ‘கூட்டணி தர்மத்தை மதித்து இத்தனை நாளும் கூட்டணிக் கட்சிக்காகத் தேர்தல் பணியாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி. இம்முறை தொகுதிப் பங்கீட்டின்போது உங்களின் கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்’ என்று சொல்லி எங்களை வழியனுப்பி வைத்தார். எனவே, இந்த முறை காரைக்குடி தொகுதியில் நிச்சயம் உதய சூரியன் உதிக்கும்” என்று சொன்னார்.
கடந்த இரண்டு தேர்தல்களாக காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி. இம்முறை அவர் தனது பழைய தொகுதியான திருவாடானைக்கே திரும்பிச் செல்லலாம் என்ற செய்தி காங்கிரஸ் வட்டாரத்திலேயே கிசுகிசுக்கப்படுகிறது. காரைக்குடி தொகுதியை திமுகவினர் கேட்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ராமசாமி மீண்டும் காரைக்குடியிலேயே போட்டியிட விரும்பினால் திமுகவினரின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் இருக்கிறது. இருப்பினும் காரைக்குடி தொகுதியில் களமிறங்க சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ பலமாகக் காய் நகர்த்துவதாகச் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப பொது நிகழ்ச்சிகளில் முன்னைவிட அதிகமாகத் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கிறார் ஜோன்ஸ்.
22 வருடங்களுக்கு முன்பு (1998 நவம்பர் 8-ல்) வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வே.ரூசோவின் மனைவிதான் ஜோன்ஸ். 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் கே.ஆர்.ராமசாமியை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டுச் சொற்ப வாக்குகளில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டவர் ஜோன்ஸ். இப்போது கே.ஆர்.ராமசாமி காரைக்குடி தொகுதியில் போட்டியில்லை என முடிவானால் ஜோன்ஸ்தான் உதய சூரியன் வேட்பாளர் என திமுகவினர் மத்தியில் பேச்சாகி வருகிறது.
கே.ஆர்.ராமசாமி ராமநாதபுரம் மாவட்ட எல்லைக்குள் வரும் திருவாடானைக்கு நகர்ந்தால் சிதம்பரத்தின் சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். அந்தத் தொகுதி சிவகங்கையாக இருக்கலாம் என காங்கிரஸுக்குள் ஒரு கணிப்பு ஓடுகிறது. ஒருவேளை, சிவகங்கை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் அங்கே தனது விசுவாசியான முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினத்தை நிறுத்த கார்த்தி சிதம்பரம் மெனக்கிடுவார் என்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அதை நழுவவிடக் கூடாது என்பதற்காக தனது மகன் ஜெயசிம்மா நாச்சியப்பனை சென்னையிலிருந்து சிவகங்கைக்கு நகர்த்தி இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்.
சென்னையில் வழக்கறிஞராக இருக்கும் ஜெயசிம்மா, அண்மையில் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே வீடு பிடித்து அங்கே தனது ஜாகையை மாற்றி இருக்கிறார். சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவிலுள்ள நாச்சியப்பனின் பழைய வீட்டை அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். சிவகங்கை காங்கிரஸுக்கு முடிவானால் மகனுக்காகத் தொகுதியைக் கேட்டுப் பெறுவதற்கு சுதர்சன நாச்சியப்பன் டெல்லி வரை மோதுவார் என்கிறார்கள்.
இன்னொரு தரப்போ, சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நாச்சியப்பன் தனது மகனைச் சிவகங்கையில் குடியமர்த்தவில்லை. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறையால் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் வழக்கின் தீர்ப்பு கார்த்திக்குப் பாதகமாக வரக்கூடும் என சிலர் கணிக்கிறார்கள். அப்படி வந்தால் கார்த்தியின் எம்.பி. பதவிக்கேகூட ஆபத்து வரலாம். அப்படியொரு சூழல் வந்தால் இடைத் தேர்தலில் மகனை வேட்பாளராக நிறுத்துவதற்கே மகனை முன்கூட்டியே சிவகங்கைக்கு அனுப்பி இருக்கிறார் நாச்சியப்பன்” என்கிறார்கள்.
காரைக்குடியில் திமுகவினர் பற்ற வைத்திருக்கும் நெருப்பு நவம்பர் குளிரையும் தாண்டி தமிழகம் முழுமைக்கும் தகிக்கும் போலிருக்கிறது!
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago