காவல் துறையின் ரோந்து வாகனங்களில் புகார் மனுக்கள் அளிக்கும் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 10 நாளில்மட்டும் 500 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் குற்ற செயல்களைத் தடுக்கவும், பொதுமக்கள் அச்சம் இன்றி வாழவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக காவல் நிலையம் வர இயலாதவர்கள் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் காவல் ரோந்து வாகனத்தில் புகார் மனுஅளிக்கும் திட்டத்தை காவல் ஆணையர் கடந்த 4-ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதன்பேரில், சென்னை பெருநகரிலுள்ள 124 காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்படி, கடந்த 10 நாட்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறும்போது, “அவசர உதவி,சிறு பிரச்சினைகள், அடிதடி, மோதல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக காவல் நிலையம் செல்ல இயலாத பொதுமக்கள் என முதல் நாளில் 76 நபர்கள் ரோந்து வாகனங்களில் புகார் மனுக்கள் அளித்தனர். அத்தனை மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் கடந்த, 10 நாட்களில் மட்டும் 500 புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்த பட்டியலையும் சேகரித்து வருகிறோம். பொதுமக்கள் குற்றங்களுக்கு எதிராக உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இதற்காகவே, புகார் அளிக்க இதுபோல் எளிமையான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம்” என்றார்.
மூதாட்டியின் வீடு தேடி..
புளியந்தோப்பு காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு அதிகாரி (உதவி ஆய்வாளர்) மார்ட்டின் மைக்கேல் என்பவர் ரோந்து வாகனபணியிலிருந்தபோது, அதே பகுதிகன்னிகாபுரத்தில் வசிக்கும் சுகுணாம்மாள் (65) என்ற மூதாட்டி தன்னையும், தனது வயதான கணவரையும், தங்களது மகன் சரியாக பராமரிப்பதில்லை எனவும், அடிக்கடி வீட்டை விட்டு செல்லுமாறு திட்டுவதாகவும் ரோந்து வாகன போலீஸாரிடம் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர், இம்மனுவை பெற்று புகார்மனு ஏற்பு ரசீது வழங்கி தானே வீடுதேடி வருவதாகக் கூறி, அன்றுமாலையே புகார்தாரர் சுகுணாம்மாள் வீட்டுக்குச் சென்றார்.
திருந்திய மகன்
உதவி ஆய்வாளர், புகார்தாரரின் மகனை அழைத்து,வயதான தாய், தந்தையைப் பாதுகாப்பது பிள்ளைகளின் கடமை என்றும், அவர்களுக்கு உணவளித்து நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் கூறியதுடன், வயதான பெற்றோரை பராமரிக்காமலும், உணவளிக்காமலும் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். உடனே, அவரது மகன் இனி தனது பெற்றோரை நன்கு பராமரிப்பதாக கூறியதுடன், இனி இவ்வாறு தவறு செய்யமாட்டேன் என எழுத்து மூலம் உறுதியளித்தார்.
பின்னர் உதவி ஆய்வாளர் மார்ட்டின் மைக்கேல், தனது செல்போன் எண்ணை சுகுணாம்மாள் மற்றும் அவரது கணவரிடம் எழுதிக் கொடுத்து, இனி எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இந்த எண்ணுக்கு அழைக்கும்படி கூறிவிட்டுச் சென்றார். உடனே, மூதாட்டி சுகுணாம்மாள் தனது மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago