சரியும் மஞ்சள் விலை; இறக்குமதி தடையை நீக்க இலங்கையை வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

இலங்கை அரசின் மஞ்சள் இறக்குமதி தடையால் இலங்கை மக்களும், தமிழக உழவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் மற்றும் தங்கக் கடத்தல்காரர்கள் மட்டும்தான் இந்தத் தடையால் பயனடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி வாய்ப்புகள் குறைந்ததையடுத்து, ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் ஏற்றுமதிக்கு புத்துயிரூட்டி, உழவர்களின் கவலையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

இந்திய மஞ்சளுக்கு மருத்துவத் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதால், அதற்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற மஞ்சள் சந்தையாக ஈரோடு திகழ்வதால், தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மஞ்சள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

தேவை அதிகரித்ததன் காரணமாக ஈரோடு மஞ்சள் சில ஆண்டுகளுக்கு முன் குவிண்டால் ரூ.18,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இப்போது ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்து குவிண்டால் ரூ.6,000-க்கும் குறைவாகவே ஏலத்தில் எடுக்கப்படுகிறது. அதனால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு, சேலம் மாவட்ட மஞ்சள் உழவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்காக முதன்முதலில் குரல் கொடுப்பது பாட்டாளி மக்கள் கட்சிதான். கடந்த 2012ஆம் ஆண்டில் மஞ்சள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களைத் திரட்டி ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு ரூ.15,000 விலை நிர்ணயிக்க வேண்டும் என்று ஜூலை 19 அன்று ஈரோட்டில் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தியது. மஞ்சள் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற அதே அக்கறையுடன் தான் இந்த பிரச்சினையை பாட்டாளி மக்கள் கட்சி இப்போதும் எழுப்புகிறது.

கரோனா பாதிப்பு காரணமாக ஏற்றுமதி குறைந்திருப்பது மஞ்சள் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றாலும் கூட, இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தான் விற்பனை குறைவுக்கும் விலை வீழ்ச்சிக்கும் முதன்மைக் காரணம். ஈரோடு பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சளின் பெரும்பகுதி இலங்கைக்குதான் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

ஆனால், மஞ்சள் உற்பத்தியில் தற்சார்பு அடைய வேண்டும் என்பதற்காக இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டிலிருந்தும் மஞ்சள் இறக்குமதி செய்ய இலங்கை தடை விதித்திருக்கிறது. அதனால், இலங்கைக்கான மஞ்சள் ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியதுதான் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இலங்கையின் இந்த முடிவு யாருக்கும் நன்மை பயக்கவில்லை; மாறாக, இரு தரப்புக்கும் பாதிப்புகளே ஏற்பட்டிருக்கின்றன. ஒருபுறம் ஈரோட்டுச் சந்தையில் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மறுபுறம் இலங்கையில் மஞ்சளின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

ஈரோடு சந்தையில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படும் மஞ்சள், இலங்கையில் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.4,000க்கு (இந்திய மதிப்பில் ரூ.1,600) விற்கப்படுகிறது. இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் முன் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.500 (இந்திய ரூபாய் 200) என்ற விலையில்தான் விற்கப்பட்டது. இலங்கையில் மஞ்சள் தேவை அதிகரித்ததன் விளைவாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுவது கடந்த சில மாதங்களில் பெருமளவில் அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்படும் மஞ்சளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படுவதாகவும், மஞ்சளுக்கு மாற்றாக தங்கம் வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இலங்கை அரசின் மஞ்சள் இறக்குமதி தடையால் இலங்கை மக்களும், தமிழக உழவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மஞ்சள் மற்றும் தங்கக் கடத்தல்காரர்கள் மட்டும் தான் இந்தத் தடையால் பயனடைந்துள்ளனர். இந்த தடை நீக்கப்பட்டால், இலங்கையில் மஞ்சளின் விலை எட்டில் ஒரு பங்காக குறையும்; ஈரோடு சந்தையில் மஞ்சள் விலையில் ஒரு குவிண்டால் மஞ்சளின் விலை இப்போதுள்ள ரூ.6,000-லிருந்து ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை உயர வாய்ப்பிருக்கிறது. இது இருதரப்புக்கும் பயனளிக்கக் கூடும்.

எனவே, இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டுத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி, ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் மஞ்சள் உழவர்கள் வாழ்வில் மங்கலம் பொங்க வகை செய்ய வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்