விடாமல் துரத்தும் பாஜக.. வீம்பு பிடிக்கும் விஜயகாந்த்!- கூட்டணிக்காக அலைபாயும் தேசியக் கட்சிகள்

ரம்மி விளையாட்டில் ஜோக்கரை கைவசம் வைத்திருப்பவர்களுக்கே வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம். அதுபோலத்தான் தேமுதிக-வை மற்ற அரசியல் கட்சிகள் துரத்திக் கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த தேர்தல்களில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டபோது அதன் பாதிப்புகளை திமுக-வும் அதிமுக-வும் அறுவடை செய்தன. அதனால்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக-வுடன் கூட்டணி வைத்தது அதிமுக.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு இரண்டு கட்சிகளுக்கும் ஒத்துவராமல் போனதால் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்சிகளுமே தனித்தனியாகவே சந்தித்தன. அந்தத் தேர்தலில் தேமுதிக-வால் கணிசமான வாக்குகளைப் பெறமுடியவில்லை என்றாலும் இப்போது காங்கிரஸும் பாஜக-வும் தேமுதிக கூட்டணிக்காக தவம் இருக்கின்றன.

ஆனால், தனக்குள்ள கிராக்கியை சரியாகப் பயன்படுத்த நினைக்கும் விஜயகாந்த், ’தந்திரமான’ பல நிபந்தனைகளைப் போட்டு இரண்டு கட்சிகளையும் இழுத்தடிக்கிறார். இவர் எதற்காக இப்படி பிகு பண்ணுகிறார் என்ற விஷயம் டீ கடை வரைக்கும் விவாதப் பொருளாகி விட்டது வேறு விஷயம்.

அதேசமயம், தேமுதிக-வின் சில நிபந்தனைகளை ஏற்கத் தயாராய் இருக்கும் தேசியக் கட்சிகள், ‘யாருக்கு எத்தனை தொகுதிகள்.. எந்தெந்தத் தொகுதிகள்? என உறுதி செய்தால்தான் கூட்டணி பற்றி பேசலாம்’ என்று அக்கட்சி கூறுவதைத்தான் ஏற்க முடியாமல் கையைப் பிசைகின்றன. இதனிடையே, திமுகவும் தேமுதிக-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், திமுக தரப்பில், ‘இல்லவே இல்லை’ என மறுக்கிறார்கள்.

அதேசமயம், தேமுதிக இல்லாவிட்டாலும் வேறு பல கட்சிகளை சேர்த்து தமிழகத்தில் தனிக் கூட்டணி அமைக்கவும் தயாராய் இருக்கிறது பாஜக. ஆனால், தேமுதிக-வைத் தனித்துவிட்டால் திமுக, அதிமுக-வுக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போகும். இதனால் தங்களது வெற்றிவாய்ப்புப் பாதிக்கும் என்று பாஜக கருதுகிறது. தேமுதிக-வுடன் கைகோர்க்க அக்கட்சி பகீரத பிரயத்தனம் செய்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

“நாங்கள் எங்கே இருக்கின்றோமோ அந்தக் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி’’ என்று சொன்னவர்களுக்கு எல்லாம் கடந்த காலங்களில் மக்கள் சரியான படிப்பினையை தந்திருக்கிறார்கள்.

இதை எல்லாம் எண்ணிப் பார்த்து தேமுதிக தனது முடிவை காலத்தே அறிவிக்காவிட்டால், தமிழக மக்கள் அந்தக் கட்சியை நிஜமான ஜோக்கராக பார்க்க ஆரம்பித்துவிடுவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE