நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டுமென வலியுறுத்தி, தீபாவளி பண்டிகையை புறக்கணித்து திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 9-வது நாளாக இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கேத்தாண்டிப்பட்டி பகுதியில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கரும்பு அரவை நடைபெறாது என ஆலை நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆலை தொழிலாளர்கள், கடந்த 7-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் இன்று (நவ. 15) 9-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் 230-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கூட்டுக்குழுத் தலைவர் அன்பழகன் கூறுகையில், "திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆண்டொன்றுக்கு சுமார் 2 லட்சம் டன் வரை கரும்பு அரவை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் தொடங்கும் கரும்பு அரவை மே அல்லது ஜூன் மாதங்களில் நிறைவு பெறும். கடந்த 2019-ம் ஆண்டு மழையின்மையால் கரும்பு வரத்து குறைந்துவிட்டது எனக்கூறி கரும்பு அரவை நடைபெறாது என ஆலை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்துள்ளது. கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 35 ஆயிரம் டன் கரும்புகளை அரவை செய்ய விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதுதவிர, 40 ஆயிரம் டன் கரும்புகளை அரவை செய்ய தயாராக உள்ளனர்.
இதுபோக, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பும், கடலாடி, கலசப்பாக்கம், கேட்டவரப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 40 ஆயிரம் டன் என கிட்டத்தட்ட சுமார் 1 லட்சம் டன் கரும்புகளை திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை செய்ய ஒப்புதல் கேட்டு விவசாயிகள் ஆலை நிர்வாகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆனால், ஆலை நிர்வாகம் இதையெல்லாம் ஏற்காமல் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அரவைக்காக அனுப்பி வைக்கிறது. திருப்பத்தூரில் இருந்து வேலூர் சர்க்கரை ஆலைக்குக் கரும்புகளை அனுப்புவதால், 2 இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை விவசாயிகளுக்குக் கூடுதலாக ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் கரும்பு அரவையை ஆலை நிர்வாகம் உடனடியாக தொடங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய 8 மாத சம்பளத்தொகையை தாமதமின்றி வழங்கவும் ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிடமாட்டோம்" என்றார்.
சர்க்கரை ஆலை தொழிலாளர் தீபாவளி பண்டிகையையும் புறக்கணித்துக் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வீட்டுக்குச் செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவதால் அவர்களின் குடும்பத்தார் தொழிலாளர்களை காண தொழிற்சாலைக்கு இன்று காலை வந்தனர்.
அப்போது, தொழிற்சாலை நிர்வாக மேலாளரிடம் உள்ளிருப்புப் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக்கூறி, கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். மனுவை பெற்ற ஆலை நிர்வாகத்தினர், விரைவில் சுமூக முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago