நீர்நிலைகளை மீட்டெடுத்ததற்காக கோவை இளைஞருக்கு மத்திய அரசின் விருது; நம் காலத்தின் நாயகர்கள்: கமல் வாழ்த்து

நீர்வள அமைச்சகத்தின் விருதைப் பெற்றுள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2019-2020 ஆண்டுகளில் நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு வழங்கும் தேசிய நீர் விருதுகள், இரு தினங்களுக்கு முன்னர் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு தமிழகத்தைப் பாராட்டிப் பேசினார்.

இந்த விழாவில், கோவை சமூக ஆர்வலர் மணிகண்டனுக்கு மத்திய அரசு சார்பில் தென்னிந்தியாவின் சிறந்த தண்ணீர் போராளிக்கான விருது வழங்கப்பட்டது.

கோவையில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் 'கோவை குளங்கள் பாதுகாப்பு' அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மணிகண்டனின் முயற்சிகளை பாராட்டும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிகண்டனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (நவ. 15) தன் ட்விட்டர் பக்கத்தில், "நீர் வள அமைச்சகத்தின் விருதைப் பெற்றுள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் இரா.மணிகண்டனுக்கு என் வாழ்த்துக்கள். நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் ஒரு சமூகமாக நாம் செய்து விட்ட பாவங்களுக்குப் பிரயாச்சித்தம் தேடும் மணிகண்டன் போன்றவர்கள் நம் காலத்தின் நாயகர்கள்"என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE