அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா பதவியில் நீடிப்பது கூடாது என்றும், உடனே இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (நவ. 13) வெளியிட்ட அறிக்கை:
"அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரிப்பதற்குத் தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ள நிலையில், அவர் பதவியில் நீடிப்பது சரியானது அல்ல. எனவே, அவரை உடனடியாக இடைநீக்கம் செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராகப் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.
சூரப்பாவின் காலத்தில் பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அண்ணா பல்கலைக்கழகச் சட்டம் 1978க்கு உட்பட்டவையாக உள்ளனவா? அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்கள், முறையாகச் செய்யப்பட்டுள்ளனவா? பல்கலைக்கழகத்தால் வசூலிக்கப்பட்ட கட்டணம், நன்கொடை , நிதி நல்கை போன்றவை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? உள்ளிட்டவற்றை நீதிபதி கலையரசன் ஆணையம் விசாரிக்கும் என்று தமிழக அரசின் அரசாணை தெரிவிக்கிறது.
சூரப்பாவுக்கு எதிராக திருச்சியைச் சேர்ந்த சுரேஷ், 'சேவ் அண்ணா யுனிவர்சிட்டி' அமைப்பைச் சார்ந்த சி.வரதராஜன், செல்லதுரை மற்றும் ஆர்.ஆதிகேசவன் உள்ளிட்டோர் புகார்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமெனில் அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் ஆளுநரே அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
அந்த விசாரணை ஆணையம் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலோ அல்லது தலைமைச் செயலாளர் தகுதியில் உள்ள அதிகாரி ஒருவரின் தலைமையிலோ இருக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகச் சட்டம்-1978 இன் பிரிவு 4ஏ கூறுகிறது. அதன் அடிப்படையிலேயே இப்போது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் குளறுபடிகள் மட்டுமன்றி, நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களும் துணைவேந்தர் சூரப்பா மீது தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்.
எனவே, விசாரணை ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும் அல்லது அவரை உடனடியாக இடைநீக்கம் செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்டுள்ள நியமனங்கள், சிண்டிகேட், செனட் உறுப்பினர் நியமனங்கள் தமிழக அரசின் உயர்கல்வித் துறைக்குத் தெரிந்துதான் நடக்கின்றனவா? என்கிற ஐயமும் பலராலும் எழுப்பப்படுகிறது. இந்த ஐயத்தைக் களையவும் தமிழக அரசு முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago