உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான, நூறு விழுக்காடு இடங்களின் மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையையும், மீண்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட வேண்டும். அகில இந்தியத் தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“நாடு விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் ஆன பிறகும் கூட மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான குழப்பங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசு , மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருகின்றது. மாநில மக்களின் மருத்துவத் தேவைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. இதில் உச்ச நீதிமன்றத்திற்கும் பங்குள்ளது.
மருத்துவக் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 14 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான மருத்துவ இடங்கள் உள்ளன.
» திசைமாறி எல்லை தாண்டிய தமிழக மீனவர்களுக்கு உணவும், டீசலும் அளித்து திருப்பியனுப்பிய இலங்கை கடற்படை
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்களும், 1,922 முதுநிலை மருத்துவ இடங்களும், 369 உயர் சிறப்பு மருத்துவ இடங்களும் உள்ளன. தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்தான், இந்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
அதிகமான மருத்துவ இடங்கள் நம்மிடம் இருந்த போதிலும், அவற்றை முழுமையாக நமது மாநிலத்தவர் பெற முடியவில்லை. வேறு மாநிலத்தவர் அதிக இடங்களை அபகரித்துக் கொள்ளும் நிலை உள்ளது. அதற்கு அகில இந்தியத் தொகுப்பு முறை காரணமாக உள்ளது.
1986இல் உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட 'அகில இந்தியத் தொகுப்பு' முறை, நமது நலன்களுக்கு வேட்டு வைத்துள்ளது. இளநிலை மருத்துவ இடங்களில் 15 விழுக்காட்டையும், முதுநிலை மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டையும் அகில இந்தியத் தொகுப்பிற்கு நாம் அளித்து வருகிறோம்.
நாம் அகில இந்தியத் தொகுப்பிற்கு வழங்கும் அளவிற்கு தமிழக மாணவர்கள் அதிலிருந்து இடங்களைப் பெறுவதில்லை. வேறு மாநிலங்களுக்குச் சென்று நமது மாணவர்கள் படிப்பதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
பல மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளே இல்லை. சில மாநிலங்களில் போதிய அளவில் இல்லை. எனவே அங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. அதன் காரணமாக அம்மாநில மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை கிடைப்பதில் பிரச்சினைகள் உள்ளன.
எனவே, அத்தகைய பின்தங்கிய மாநிலங்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் உதவ வேண்டும் என்ற காரணத்தைக் கூறியே, உச்ச நீதிமன்றத்தால், ‘அகில இந்தியத் தொகுப்பு’ உருவாக்கப்பட்டது. கடந்த 34 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத அல்லது அதிகம் இல்லாத மாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் போதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க எந்த நடவடிக்கை களையும் மத்திய – மாநில அரசுகள் எடுக்கவில்லை.
ஆனால், அதே காலகட்டத்தில் , நமது தமிழகம் படிப்படியாக அதிக மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி வந்துள்ளது. இருப்பினும் அக்கல்லூரிகளில் நாம் உருவாக்கியுள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால், பாரபட்சப் போக்கால் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலையே உள்ளது. இதனால் நமக்குப் பேரிழப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் , தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள டி.எம், எம்.சி.எச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் நமக்கு பேரிழப்பு ஏற்படும் நிலையை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியது. ஆரம்பத்திலிருத்து தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து 100% உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்குமான கலந்தாய்வு தமிழக அரசே நடத்தி வந்தது.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து (100%) உயர் சிறப்பு மருத்துவ இடங்களிலும் தமிழக மருத்துவர்கள் மட்டும்தான் சேர்ந்து படிக்க முடியும். வேறு மாநிலத்தவர்கள் சேரமுடியாது என்ற நிலை இருந்தது. தமிழக அரசு உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 50% இடங்கள், அரசு மருத்துவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
அவர்கள் படித்து முடித்த பின் பணிமூப்பு அடையும் வரை அரசு மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகள், உயர்சிறப்பு மருத்துவர்களின் சேவையை இலவசமாகப் பெற முடிந்தது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் படித்த முடித்த, அரசு சாரா தமிழக மாணவர்களில் பலரும் பின்னர் அரசு மருத்துவமனைகளில், சேர்ந்து மக்கள் பணியாற்றினர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நமது உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் வேறு மாநிலத்தவர்களும் சேரலாம் என்ற நிலையை 2016 ஆம் ஆண்டில் உருவாக்கியது. பின்னர், தமிழகத்திற்குச் சொந்தமான ஒட்டுமொத்த (100%) இடங்களையும் பிடுங்கி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சொந்தமான இடமாக, பொதுப் போட்டி இடமாக மாற்றியது.
மாநிலத்திற்கென்று தனியாக இடங்களை வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு திணித்தது. அது மட்டுமன்றி, உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடத்தும் உரிமையும், மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையும் மத்திய அரசு பறித்துக்கொண்டு விட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூட தனது மருத்துவ இடங்களில் மாநில அரசுக்கு ஒரு குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை மட்டுமே வழங்குகிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தனது மருத்துவ இடங்களை மத்திய, மாநில அரசுக்கு வழங்காமல் தானே முழுமையாக வைத்துக் கொள்கின்றன.
ஆனால், தமிழக மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கி உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை. மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையும் கூட தமிழக அரசுக்கு இல்லை. தமிழக அரசு மாநில உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு, நீட்டிலிருந்து விலக்கு பெற, மசோதாவைக் கூட சட்டப்பேரவையில் தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமன்றி, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடும், உச்ச நீதிமன்றத்தால் ரத்தானது. இவை பல்வேறு பாதிப்புகளை உருவாக்கின.
• தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் இப்படிப்புகளில் சேரும் விகிதம் குறைந்துவிட்டது.
• தமிழகத்தில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் பிற மாநிலத்தவர் அதிக அளவில் சேரும் நிலை ஏற்பட்டுவிட்டது.
• தமிழக மாணவர்கள் தமது மாநில இடத்தைப் பெறுவதற்காக, அகில இந்திய அளவில் இதர லட்சக்கணக்கான மாணவர்களுடன் போட்டிபோட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுவிட்டது.
• இதனால் உயர்சிறப்பு மருத்துவம் படித்த மருத்துவர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் எதிர்காலத்தில் குறைந்துவிடும்.
• அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை மக்கள் பாதிப்படுவர்.
• அரசு மருத்துவமனைகளின் சேவைத் தரம் பாதிக்கப்படும்.
• பெண் மருத்துவர்கள் பாதிக்கப்படுவர்.
• பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும்.
• தற்போது தொடங்கப்பட உள்ள 11 கல்லூரிகள் உட்பட புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதிலும், சிறப்பாகச் செயல்படுவதிலும் சிரமம் ஏற்படும்.
• தமிழக மக்களின் வரிப் பணத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகளால் தமிழக மக்களுக்குப் பயன் கிடைக்காமல் போய்விடும்.
• ஏழை நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் கிடைத்து வரும் உயர்சிறப்பு மருத்துவச் சிகிச்சைகள் கிடைக்காமல் போய்விடும்.
எனவே, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம், இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய இந்திய மருத்துவக் கழகத்திற்கு உரிமை இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அரசியல் சட்ட அமர்வு வழங்கியது.
எனவே, அதன் அடிப்படையில், உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கிட தமிழக அரசும், கேரள அரசும் முயல்கின்றன. இது வரவேற்கத்தக்கது. இதற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். மாநில உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
• ஆகஸ்ட் மாதமே உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு கால தாமதமாக ,7.11.2020 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதற்கான சட்ட ஆலோசனை பெற்று தகுந்த சட்டத்தையும் இயற்ற வேண்டும்.
• தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.
• அகில இந்தியத் தொகுப்பு முறையை( All India Quota System) ரத்து செய்ய வேண்டும்.
• முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
• தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கும், உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும்.
• தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்ற அடிப்படையில், INI CET நுழைவுத் தேர்வு AIMS, JIPMER, PGI CHANDHIGAR போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கு நவம்பர் முதல் தனியாக நடத்தப்பட உள்ளன. நீட்டிலிருந்து மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் மீண்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
• மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் நீட்டிலிருந்து மீண்டும் விலக்கு அளிக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு விலக்களிக்க மறுப்பது, மாநில உரிமைகளை அப்பட்டமாகப் பறிக்கும் செயலாகும்.
• நீட்டிலிருந்து விலக்கு பெற விரும்பும் மாநிலங்களுக்கு, அத்தேர்விலிருந்து விலக்கு அளிக்க, தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை,தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இப்பிரச்சி னைகளுக்கு நிரந்தரத் தீர்வை காண, தேவையான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக எடுத்திட வேண்டும்.
• சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட அதிகமாக உள்ளது. இதனால், இக்கல்லூரிகளில் பயிலும் மாணர்வர்களும் அவர்களது பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளான இவற்றில் சேர ஏழை எளிய மாணவர்கள் தயங்குகின்றனர்.
இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே இக்கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.
• அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
• அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும்.
• பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்திட வேண்டும்.
• கரோனாவால் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்களுக்கும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். கரோனா காலத்தில் இறந்த அனைத்து பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் குடும்பங்களுக்கும் ரூ.50 லட்சம் நிவாரணமும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை வழங்கிட வேண்டும்.
• கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள், தற்காலிக மற்றும் வெளிக் கொணர்( அவுட் சோர்சிங்) முன்களப் பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.
• கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை வழங்கல் பணிக்காக தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். யாரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது”.
இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago