யானைகவுனியில் நேற்றிரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், குடும்பப் பிரச்சினையில் மருமகளே கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க மகாராஷ்டிராவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
சென்னை யானைகவுனி விநாயகர் மேஸ்திரி தெருவில் வசித்தவர் தலில் சந்த் (74). இவரது மனைவி புஷ்பா பாய் (70). இவர்களுக்கு ஷீத்தல் (38), பிங்கி (35) என்கிற மகன், மகள் உள்ளனர். தலில் சந்த் சொந்தமாக ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
ஷீத்தலுக்கும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஜெயமாலா என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயமாலா 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, புனே சென்றுவிட்டார்.
கணவரிடம் விவாகரத்துக் கேட்டு வழக்குத் தொடுத்துள்ள ஜெயமாலா, ரூ.5 கோடி ஜீவனாம்சம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் அவர் உறவினர்களுடன் வந்து அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை தலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகிய மூவரும் தங்கள் வீட்டில் இருந்தனர்.
தலில் சந்தின் மகள் பிங்கி என்பவர் பேசின் பிரிட்ஜ் ரோடு, ஓசியன் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவர் தினமும் வீட்டுக்கு வந்து பெற்றோரைப் பார்த்துச் செல்வது வழக்கம்.
பிங்கி, நேற்று மாலை 7 மணி அளவில் வழக்கம்போல் பெற்றோருக்கு உணவு கொண்டு வந்தார். வீட்டின் படுக்கையறையில் தாய், தந்தை, அண்ணன் ஆகிய 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் கிடைத்து யானைகவுனி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸார் அங்கு சென்ற பின்னர்தான் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கே தகவல் தெரிந்துள்ளது. அக்கம் பக்கத்தவருக்குச் சத்தம் கேட்காமல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை நடந்துள்ளது.
வீட்டுக்குள் கொலையாளிகள் எளிதாக நுழைந்துள்ளதால், அறிமுகமான நபர் அல்லது உறவினராக இருக்கலாம். திட்டமிட்டுக் கொலை செய்தபின்னர் தப்பிச் சென்றுள்ளனர். கொல்லை செய்யப்பட்ட மூவரும் போராடியதற்கான அறிகுறி இல்லாததால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதினர். தலில் சந்த் நெற்றிப்பொட்டிலும், புஷ்பா பாய் பக்கவாட்டில் காதுக்கு அருகிலும், மகன் ஷீத்தல் தலை உச்சியிலும் சுடப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தனர்.
உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் மருமகள் ஜெயமாலாவுக்கும் குடும்பத்தாருக்கும் உள்ள பிரச்சினைகள் தெரியவந்தன. கடந்த வாரம்கூட ஜெயமாலாவின் சகோதரர்கள் விகாஷ், கைலாஷ் இருவரும் வந்து சண்டையிட்டுச் சென்றது தெரியவந்தது.
நேற்று போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் ஜெயமாலா தனது இரு சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் சென்னை வந்ததும், வீட்டுக்கு வந்த அவர் மூவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி, பின்னர் சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது. கொலையாளிகள் மும்பையிலிருந்து காரிலேயே வந்து கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு காரிலேயே தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களைப் பிடிக்க தனிப்படை, மகாராஷ்டிரா மாநிலம் விரைந்துள்ளது. குடும்பப் பிரச்சினையில் மருமகளே கணவர் குடும்பத்தாரைக் கொடூரமாகத் திட்டமிட்டுச் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளிகளைக் கைது செய்து சென்னை அழைத்துவந்த பின்னரே மேலும் உண்மைகள் தெரியவரும். கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளைத் தனிப்படை போலீஸார் கண்டுபிடித்ததை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
யானைகவுனியும் துப்பாக்கிச் சூடு கொலைகளும்:
சென்னை, யானைகவுனியில் துப்பாக்கிச் சூடு கொலைகள் நடந்தது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி எலக்டிரிக்கல் மொத்த வியாபாரி ஆசிஷ்சர்மா (50) என்பவர் யானைகவுனி தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அவரது உறவினரே அவரைக் கொலை செய்தது தெரியவந்தது.
இதேபோன்று 2016-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி பட்டப்பகலில் சென்னை சவுகார்பேட்டையில் டிராவல்ஸ் அதிபர் பாபுசிங் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ராகேஷ் என்பவரை 25 நாட்கள் கழித்து போலீஸார் கைது செய்தனர்.
தற்போது மூன்றாவது கொலைச் சம்பவமாக மருமகளே கணவர் உள்ளிட்ட 3 பேரைச் சுட்டுக்கொன்றதும் சேர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago