அருந்ததி ராய் புத்தகத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை; வன்மப் போக்கின் தொடர்ச்சி: ஆ.ராசா கண்டனம்

By செய்திப்பிரிவு

அருந்ததி ராயின் புத்தகத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஆ.ராசா இன்று (நவ. 12) வெளியிட்ட அறிக்கை:

"நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.பிச்சுமணி தலைமையில் நடந்த ஆலோசனையின்படி, 2017-ம் ஆண்டு முதல் முதுகலைப் படிப்புக்கான சமூகவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் 'வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்' (Walking With The Comrades) என்ற ஆங்கிலப் புத்தகம் நீக்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் எது இடம்பெற வேண்டும் என்பது அதன் துணைவேந்தர், பேராசிரியர்கள், கல்விப்புலம் சார்ந்த வல்லுநர்கள் ஆகியோரின் முடிவுக்குட்பட்டதே!

எனினும், மூன்றாண்டுகளாக பாடத்திட்டத்தில் இருந்த ஒரு புத்தகம் திடீரென நீக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், ஆர்எஸ்எஸ் - பாஜக சார்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) நிர்பந்தம் என்பதே இங்கு கவனிக்கத்தக்கது.

கல்வித்துறையைக் காவித்துறையாக்கும் நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ் வியூகத்தின்படி தொடர்ந்து செயல்பட்டுவரும் பாஜக மற்றும் அதன் மாணவர் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் அடாவடிப் போக்கு சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரங்கேறியது.

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ஏ.கே.ராமானுஜன் எழுதிய '300 ராமாயணங்கள்' என்ற கட்டுரைக்கு எதிராக ஏபிவிபி அமைப்பினர் உருவாக்கிய கலவரத்தினால் அந்தக் கட்டுரை நீக்கப்பட்டது. டெல்லியில் ஆரம்பித்த அவர்களின் அடாவடிப் போக்கு இப்போது நெல்லை வரை வால் நீட்டியிருக்கிறது.

அருந்ததி ராய் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகத் தனது புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்ற ஏபிவிபி அமைப்பின் குற்றச்சாட்டின் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்தப் புத்தகத்தை நீக்கியுள்ளது. முதுநிலைப் பட்டப்படிப்பில் அனைத்து வகை வரலாறு, இலக்கியம் ஆகியவற்றைக் கற்கின்ற வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகள், பாடங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் படித்து, அதிலிருந்து ஏற்க வேண்டியவற்றை ஏற்பதும், தள்ள வேண்டியதைத் தள்ளுவதும் அவர்களின் அறிவாற்றல் மேம்பாட்டுக்குரியதாகும்.

கல்வியைக் காவிமயமாக்கும் போக்கினால் மாற்றுச் சிந்தனைகளே இடம்பெறக்கூடாது என்கிற எதேச்சதிகாரப் போக்குடன் புகழ்பெற்ற எழுத்தாளரின் புத்தகத்தை மூன்றாண்டுகள் கழித்து நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உயர்கல்வித்துறை என்பது, மாநில அரசிடம் உள்ள நிலையில், பாஜகவின் மாணவர் அமைப்பின் எதிர்ப்புக்குப் பயந்து, பணிந்து புத்தகத்தை நீக்கியிருப்பதில் அடிமை அதிமுக அரசும் உடன்பட்டிருப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?

திருக்குறளுக்குப் பதில் பகவத் கீதையைத் திணித்து தமிழ் மொழிக்குத் துரோகம் செய்யும் பாஜகவின் காவிமயக் கல்விக்கேற்றபடி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா வழியில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.பிச்சுமணியும் துணை போகிறாரா?

தமிழ், திருக்குறள், திராவிடம், மதநல்லிணக்கம், தோழமை போன்ற வார்த்தைகளால் நடுநடுங்கும் இந்துத்வா மதவெறி சக்திகள், மற்றவர்களை 'அர்பன் நக்சல்கள்' என்றும், 'ஆன்ட்டி இந்தியர்கள்' என்றும் முத்திரை குத்தும் வன்மப் போக்கின் தொடர்ச்சிதான் அருந்ததி ராயின் புத்தகம் நீக்கப்பட்டிருக்கும் செயலாகும்.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் உண்மையான தேசவிரோதிகள் இத்தகைய மதவெறி சக்திகளே. கல்விப்புலத்தில் காவி விதைகளைத் தூவுவது எதிர்காலச் சமுதாயத்தின் மனதில் நஞ்சைக் கலப்பதாகும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது அனைவரின் கடமையாகும். அதனைச் செய்ய வேண்டிய முக்கியப் பொறுப்பு மாநில அரசிடம் இருக்கிறது.

அந்தக் கடமையில் இருந்து மாநில அரசு வழுவுவதை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவற்றுக்காக மானுடத்தின்பால் நம்பிக்கை கொண்டு பெரியார் - அண்ணா - கருணாநிதி ஆகியோர் வகுத்தளித்த கொள்கைகளை நெஞ்சில் ஏந்திச் செயல்படும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுக ஒருபோதும் அனுமதியாது.

இதனை மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனிக்கும்போது, பல்கலைக்கழகங்களை மொத்தமாக மத்திய பாஜக அரசிடம் அடமானம் வைத்துவிட்டதா அடிமை அதிமுக அரசு என்ற கேள்விதான் எழுகிறது".

இவ்வாறு ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்