ஸ்டெர்லைட் ஆலை தொடங்க நான் காரணம் என்று முதல்வர் சொல்வதா?- ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டது ஜெயலலிதாவின் ஆட்சியில்தான். அப்பாவி மக்கள் 13 பேரைச் சுட்டுக் கொன்ற பழியிலிருந்து தப்பிக்க, ஸ்டெர்லைட் ஆலை தொடங்க நான்தான் காரணம் என முதல்வர் பழனிசாமி கூறுவது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

"தூத்துக்குடியில் ஜனநாயக ரீதியில் அறப்போராட்டம் நடத்திய அப்பாவிப் பொதுமக்களை எந்தவிதக் காரணமுமின்றிச் சுட்டுவீழ்த்தி, 13 பேர் படுகொலைக்கு முழுக் காரணமாக இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்குகின்றது என்றதும், “இந்தச் சம்பவம் நடப்பதற்கு நான் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம்” என்று என் மீது “பச்சைப் பொய்” கூறி, குற்றம் சாட்டி, நீலிக் கண்ணீர் வடித்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போலீஸ் வேன்களில் நின்றெல்லாம் பொதுமக்களை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்த அராஜகக் காட்சியை நாடே தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்ததை மறந்துவிட்டு, அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓர் ஆணையத்தை அமைத்து, எங்கே உண்மைகள் வெளிவந்து தனது முகமூடி கிழிந்து தொங்குமோ எனப் பயந்து, அதையும் முடக்கி வைத்துள்ள முதல்வர் இப்படி ‘உலக மகா’ பொய் சொல்வதைக் கேட்டு அப்பகுதி மக்கள் வெட்கி முகம் சுழிக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் வருவதற்கு முழு முதற்காரணம் அதிமுக ஆட்சி. அதிலும் அவர் உதட்டளவில் “அம்மா” என்று உச்சரிக்கும் மறைந்த ஜெயலலிதா அம்மையார். ஸ்டெர்லைட் ஆலை அமைக்கத் தடையின்மை சான்றிதழை 1.8.1994 அன்று கொடுத்தது அதிமுக அரசு. ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்குச் சுற்றுப்புறச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு 17.5.1995 அன்று உத்தரவு பிறப்பித்தது அதிமுக அரசு.

இதனடிப்படையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த அதிமுக அரசின் கீழ் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆலை அமைப்பதற்கு 22.5.1995 அன்று “ஒப்புதல் ஆணை” (Consent Order) வழங்கியது. முத்தாய்ப்பு வைத்தாற் போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டித் திறந்து வைத்தவர் முதல்வராக இருந்த ஜெயலலிதாதான். அப்படித் திறந்து வைத்த போது, “தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிப் பாதையில் மேலும் ஒரு புதிய மைல்கல்” என்று பேசியதும் ஜெயலலிதாதான்.

2013-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கமிட்டியில் இருந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர், “ஆலை பாதுகாப்பாக இருக்கிறது. விதிமுறை மீறல் இல்லை” என்று அறிக்கை தாக்கல் செய்ததும் அதிமுக ஆட்சியில்தான். அதனடிப்படையில்தான் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.

இப்போது பச்சை ரத்தம் குடிக்கத் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைக் கொன்றதும் அதிமுக ஆட்சிதான் - அதுவும் பழிக்கஞ்சாத முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிதான். துப்பாக்கிச் சூட்டிற்கு கமிஷன் அமைத்த போது - ஸ்டெர்லைட் கோப்புகளில் உள்ள இந்தத் தகவலைக் கூட பழனிசாமி படிக்கவில்லை என்றால்- அவரது “அம்மாவின்” அடிக்கல் நாட்டு விழா உரையைத் தமிழரசு பத்திரிகையிலிருந்தோ - செய்தித் துறையிடமிருந்தோ பெற்றுப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

ஆகவே ஸ்டெர்லைட் பற்றிய அடிப்படை உண்மைகூடத் தெரியாமல்- திரித்துப் பேசலாம்; பொய் புரட்டுக்களைப் பொது மேடையில் நின்று கொண்டு “உண்மை போல்” ஆவேசமாக சப்தம் போட்டுப் பேசலாம்; மக்களைத் திசைதிருப்பலாம்; என்றெல்லாம் பழனிசாமி பகல் பொழுதிலேயே கனவு கண்டால், அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது. முதல்வரின் உளறலை, நெஞ்சறிந்தே சொல்லும் நீளமான பொய்யை, தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். எத்தனை பெரிய இடத்தில் எத்தனை பெரிய எத்தர் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள்; ஏன், தூத்துக்குடியில் அவரது பேச்சைக் கேட்ட மக்களே எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

“நீர் மேலாண்மைக்கு திமுக என்ன செய்தது” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் பழனிசாமி. அவரது ஆட்சியில் நீர் மேலாண்மை என்று கூறி - வெட்டாத குளத்திற்கும், தூர்வாரப்படாத கால்வாய்க்கும், மண் வெட்டாமலேயே கண்மாய்களுக்கும் பில் போட்டு ஊழல் செய்வது போன்ற “நீர் மேலாண்மை” திமுக ஆட்சியில் செய்யப்படவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் 1967 முதல் 1976 வரை கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த போதுதான். 20 அணைகள் கட்டப்பட்டன. பிறகு 1989 முதல் 2011 வரை கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதுதான், 22 அணைகள் கட்டப்பட்டன. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன. எடப்பாடி அதிமுக ஆட்சியில் - இவரது ஊழல் ஆட்சியில், கட்டிய ஒரு அணையின் பெயரைச் சொல்ல முடியுமா?

அதுவும் கழக ஆட்சியில் 2009-ல் கொண்டு வரப்பட்டு - பணிகள் வேகமாக நடைபெற்ற கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தை, பத்தாண்டு காலமாக - குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் 4 ஆண்டுகாலம் கிடப்பில் போட்டு விட்டு - நீர் மேலாண்மைக்கு திமுக என்ன செய்தது என்று கேள்வி கேட்க முதல்வருக்கு என்ன அருகதை இருக்கிறது?

நாட்டிலேயே ஊழலில் - மூட்டை மூட்டையான முறைகேடுகளில் - முடை நாற்றமெடுக்கும் லஞ்ச லாவண்யத்தில் - முதலிடம் வகிக்கும் ஆட்சி, அதிமுக ஆட்சி. ஆனால் அந்த ஆட்சிக்கு “நல்லாட்சி விருதை” மத்திய பாஜக அரசு வழங்கலாம். நீர் மேலாண்மையில் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரிலும் ஊழல் செய்யும் ஆட்சி அதிமுக ஆட்சி. அதற்கு “நீர் மேலாண்மையில் விருது” கிடைக்கலாம்.

அதெல்லாம் “தமிழகம் எக்கேடோ கெட்டுப் போகட்டும். நமக்குள் அனைத்திலும் கூட்டணி வைத்துப் பகிர்ந்து கொள்வோம்” என்று அதிமுகவிற்கும் - பாஜகவிற்கும் உள்ள கூட்டணியின் ரகசியம் என்பது தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?

ஆகவே, இப்படியெல்லாம் கயிறு திரித்துப் பேசி, தமிழக மக்களின் காதில் பூ சுற்றி விடலாம் என்று முதல்வர் பழனிசாமி ஒரு போதும் நம்பிக்கை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த அப்பாவி மக்களில் 13 பேரைச் சுட்டுக் கொன்று விட்டு - “நான் டி.வி.யில்தான் அதைப் பார்த்தேன்” என்று கூறிய பழனிசாமி - முதல்வர் பதவியிலிருந்து கொண்டு இப்படி அபாண்டமாகப் பொய் பேசுவதை முதலில் தவிர்க்க வேண்டும். அரசு விழாக்களில் அரசியல் நாகரீகத்தைத் தூக்கியெறிந்து விட்டு - இப்படி எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற புகார்கள் சொல்வதைக் கைவிட வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் மீது அவருக்குக் கோபம் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சுட்டதற்காக அமைக்கப்பட்ட கமிஷன் விசாரணையை முடக்கிப் போட்டிருக்கலாம். ஆனால் தங்களது உயிர்களைக் கப்பாற்றிக் கொள்ள- தங்களது சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாத்துக் கொள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்திட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

“கெட்டிக்காரர் புளுகு எட்டு நாளைக்கு” என்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் புளுகு எட்டு நொடிக்குக் கூடத் தாங்காது, அவரால் தாங்க முடியாத அளவுக்கு அது திருப்பித் தாக்கும். ஊழல் மூட்டையோடு சேர்த்துக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆளுவோருக்கு முக்கியமாக வேண்டியது நாவடக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்