முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துரோகப் பட்டியலை அடுக்கலாம், வேதனைப் பட்டியலை அடுக்கலாம். ஆனால், சாதனைப் பட்டியலை அடுக்க முடியாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். .
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10), விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்துக்குக் காணொலி வாயிலாகத் தலைமையேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
"திமுகவைப் பொறுத்தவரை இது ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம். ஆட்சியில் இருந்தால் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமையைச் சட்டமாக்கும். ஆட்சியில் இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் போராடும்.
பட்டியல் இனச் சமூகமாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் தமிழர்களாக நினைத்துப் பாதுகாக்கும் இயக்கம்தான் திமுக. அவர்களது பாதுகாப்புக்கு நலத்திட்டங்களை உருவாக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி.
ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு எந்தச் சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறை கிடையாது. அவரது எல்லா அக்கறைகளும் டெண்டர்கள், அதுவும் கமிஷன் வருகின்ற டெண்டர்கள் மீது மட்டும்தான் இருக்கும்.
அதனை மறைப்பதற்காகத்தான் விவசாயி என்று வேடம் போட்டுக் கொண்டு வலம் வருகிறார். அவரை விவசாயி என்று சொன்னால் செடிகள் கருகிவிடும். மரங்கள் சாய்ந்துவிடும். அந்த அளவுக்கு மகா பெரிய பொய் எது என்றால் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்று சொல்வதுதான். அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்திருக்க வேண்டும்.
எதிர்க்காதது மட்டுமல்ல, ஆதரித்துப் பேட்டிகள் கொடுக்கிறார். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை கூட வழங்காத ஒரு சட்டத்தை ஒரு விவசாயியால் எப்படி ஏற்க முடியும்?
இந்த நாட்டில் இருக்கின்ற வேளாண் சேமிப்புக் கிடங்குகளை மூடிவிட்டு, தனியார் கிடங்குகளை மட்டும் உருவாக்கவே இந்தச் சட்டம் அடித்தளம் அமைக்கிறது. தனியார் சேமிப்புக் கிடங்கு மட்டும் இருக்குமானால் அங்கு அவர்கள் சொல்லும் விலைக்குத்தான் வேளாண் விளைபொருட்களை விற்க வேண்டும்.
இப்படி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களைக் குறைந்த விலைக்கு விற்க நிர்பந்திக்கும் கொள்கைதான் அந்த வேளாண் கொள்கை? பழனிசாமி இந்தக் கொள்கையை எப்படி ஏற்க முடியும்?
மத்திய அரசாங்கம் கொண்டு வரப்போகிற மின்சட்டமானது விவசாயிகளின் இலவச மின்சாரத்தில் கை வைக்கப் போகிறது. அதனைப் பழனிசாமி எப்படி ஏற்க முடியும்? காவிரி ஆணையத்தின் அதிகாரத்தைக் குறைத்து, அதனை மத்திய அமைச்சகத்துடன் இணைத்துவிட்டார்கள். அதனைப் பழனிசாமி எதிர்த்தாரா? சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை அனுமதிக்கும் சுற்றுச்சூழல் சட்டத்தைப் பழனிசாமி எதிர்த்தாரா? இல்லை.
சில மாதங்களுக்கு முன்னால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது வீதிவீதியாய் போய் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சொன்னார். 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இன்னமும் ஆய்வறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லையே? இதுதான் விவசாயி ஆட்சியின் லட்சணமா? சோ.குப்பம் ஏரி முதல் பனைமலை ஏரியும் அந்நியூர் ஏரியும் வறண்டு கிடப்பதை முதல்வர் போய் பார்க்கட்டும்.
கருணாநிதி காலத் திட்டம் என்பதால் நந்தன் கால்வாய் திட்டத்தை புறக்கணிக்கிறீர்கள் என்றால், திமுக ஆட்சி அமைந்ததும் அதை நிச்சயம் நிறைவேற்றும். படூர் அணையை சுற்றுலாத் தலம் ஆக்குவோம் என்றீர்களே? செய்தீர்களா? விழுப்புரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் அதிமுக ஆட்சியில் முழுமையாக முடிக்கப்படவில்லை.
அது மட்டுமல்ல, கழிவுநீர் வசதிகளை ஏற்படுத்தாமல் சாலைகள் போட்டு, தெருக்கள் முழுக்க சாக்கடையாக ஓடும் காட்சியை சமீபத்தில் மக்கள் பார்த்தார்கள். அதிமுக ஆட்சியே இப்படித்தான் நாறிக் கொண்டு இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் துரோகப் பட்டியலை அடுக்கலாம். வேதனைப் பட்டியலை அடுக்கலாம். சாதனைப் பட்டியலை அடுக்க முடியாது.
மக்களுக்குச் சாதனைகள் செய்வதற்காக அவர் ஆட்சிக்கு வரவில்லை. அவரது அமைச்சர்களும், மக்களுக்கு சாதனை செய்வதற்காக வரவில்லை. அவர்களும் எடப்பாடி பழனிசாமி வழியில் கொள்ளையடிப்பதற்காகத்தான் வந்துள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். அவர் என்ன சாதித்தார்? ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் மலையளவு உள்ளன.
திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், ஆகிய இடங்களில் போக்குவரத்துப் பணிமனைகள், மத்திய அமைச்சர்கள் டி.ஜி.வெங்கட்ராமன், டி.ஆர்.பாலு காலத்தில் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகள், நான்குவழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், இப்படி எண்ணற்ற திட்டங்களைச் செய்து கொடுத்த அரசுதான் திமுக அரசு!
இந்த அதிமுக அரசு என்ன செய்தது? எடப்பாடி பழனிசாமி இந்த விழுப்புரம் மாவட்டத்துக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்? அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன திட்டங்களை பெற்றுத்தந்தார்? இதுபோல பட்டியல் போட முடியுமா?
திண்டிவனத்துக்கு புதிய பேருந்து நிலையம் கட்டித்தருவதாகச் சொல்லி பத்து ஆண்டுகள் ஆனது. வந்ததா? சொந்தக் கிராமமான கூட்டேறிப்பட்டுவில் பாலம் அமைக்கப்படும் என்று சொன்னாரே? இதுவரை நிலத்தையாவது கையகப்படுத்தினாரா? விழுப்புரம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுற்றுவட்டச்சாலை வந்ததா? வரவில்லை!
விழுப்புரத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது இரண்டாம் கட்ட கழிவுநீர்ப் பணிகளைத் தொடங்குவதாகச் சொன்னார்களே? செய்தார்களா?
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அருகில் மேம்பாலம் வரும் என்றார்கள். வந்ததா?
ஆனால், தனக்கு வேண்டிய ஆட்களுக்கு டெண்டர் கொடுத்து தனது உறவினரை வைத்து டெண்டரை முடித்துச் சுருட்டுவதில் மட்டும் சி.வி.சண்முகம் குறியாக இருக்கிறார் என்றால் இந்தக் கூட்டத்தை மன்னிக்கலாமா?
தமிழ்நாட்டுக்கு சாதனைகள் எதையும் செய்யாத சி.வி.சண்முகம் செய்த துரோகங்களைப் பட்டியல் போட முடியும்.
* நீட் தேர்வில் இருந்து விலக்குக் கேட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு அனுப்பினோம். அதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வாங்கித் தர சி.வி.சண்முகத்தால் முடியவில்லை. இது முதல் துரோகம்!
* நீட் தேர்வில் இருந்து விலக்குக் கேட்டு சட்டப்பேரவையில் இரண்டாவது தீர்மானம் போட்டு அனுப்பினோம். அதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வாங்கித் தர சி.வி.சண்முகத்தால் முடியவில்லை. இது இரண்டாவது துரோகம்!
* இந்த மசோதாக்களை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அதனை மறைத்தது சி.வி.சண்முகத்தின் மூன்றாவது துரோகம்!
* மத்திய அரசு திருப்பி அனுப்பியதை தமிழ்நாடு சட்டப்பேரவைக்குச் சொல்லாமல், நாங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறோம், காத்திருக்கிறோம் என்று பொய் சொல்லிக் கொண்டு இருந்தது ஐந்தாவது துரோகம்!
* 7 பேர் விடுதலைக்காக அதிமுக அமைச்சரவை தீர்மானம் போட்டு அனுப்பியது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ஆளுநர் அனுமதி தராதது சி.வி.சண்முகத்தின் ஆறாவது துரோகம்!
* ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. அதுபற்றி சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழ்நாட்டுக்குள் ஹைட்ரோகார்பன் திட்டம் வராது என்று சொன்னவர் அமைச்சர் சி.வி.சண்முகம். ஆனால், அந்தத் திட்டங்கள் அதிகமாகவே தமிழ்நாட்டுக்குள் நடந்து வருகிறதே. இது சி.வி.சண்முகத்தின் ஏழாவது துரோகம்!
* ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை சந்தேக மரணமாகப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு அமைதியானது அவரது எட்டாவது துரோகம்!
* பன்னீர்செல்வத்தை பரம்பரை எதிரியைப் போலப் பேசி வந்த சி.வி.சண்முகம் அவரை ஏற்றுக் கொண்டது அவரது ஒன்பதாவது துரோகம்!
* ராமதாஸுடன் கைகோத்தது அவரது பத்தாவது துரோகம்! அதற்கான காரணங்களை நான் இங்கே விவரிக்க விரும்பவில்லை. அது சி.வி.சண்முகத்தின் மனசாட்சிக்கே தெரியும்!
இப்படிப்பட்ட துரோக வரலாறு கொண்டவர்தான் சி.வி.சண்முகம்!
அவர் சட்டத்துறையை எந்த லட்சணத்தில் கவனிக்கிறார் என்பதற்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை அடித்தே கொன்றது சாத்தான்குளம் காவல்துறை. அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள் என்று அந்தக் கொலையை மறைக்கும் அறிக்கை விட்டவர் சி.வி.சண்முகம்.
இதுகுறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை விசாரணைக்கு அனுப்பியது. அந்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனையே சாத்தான்குளம் போலீஸார் மிரட்டினார்கள். அச்சுறுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தார்கள்.
அதாவது, இந்த நாட்டில் ஒரு மாஜிஸ்திரேட்டுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது. அதன்பிறகுதான் அந்தக் காவல் நிலையத்தையே உள்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டுக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது. இதைப் போல அவமானம் என்ன வேண்டும்? மாஜிஸ்திரேட்டை போலீஸார் மிரட்டுகிறார்கள் என்றால் சி.வி.சண்முகத்துக்கு வெட்கமாக இல்லையா?
தலைமைச் செயலகத்துக்குள் வருமான வரித்துறை நுழைகிறது. தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழைகிறது. அமைச்சர் வீட்டுக்குள் சிபிஐ நுழைகிறது. டிஜிபியையே சிபிஐ விசாரிக்கிறது. மாஜிஸ்திரேட்டே மிரட்டப்படுகிறார். அப்படியானால், இந்த நாட்டில் கிரிமினல்கள் கையில் கோட்டை போய்விட்டதா? குற்றப்பின்னணி கொண்டவர்கள் கையில் அதிகாரம் போய்விட்டதா?
காணொலி வாயிலாகப் பேசுவதால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி போல நான் சென்னைக்கும் சேலத்துக்கும் மட்டும் அலைந்தவன் அல்ல. தமிழ்நாட்டில் நான் போகாத ஊர் இல்லை, செல்லாத கிராமம் இல்லை என்கிற அளவுக்கு மக்களை அறிந்தவன்.
கரோனா காலம் என்பதால் அரசின் கட்டுப்பாடுகளை மதித்து காணொலி மூலமாக கூட்டம் நடத்தி வருகிறோம். அதில் என்ன குறை கண்டுபிடித்தார் சி.வி.சண்முகம்?
பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கெடுக்கும் கூட்டங்களை இப்போது நடத்த முடியாது என்பதால் காணொலிக் கூட்டங்களின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கிறேன். சி.வி.சண்முகத்தின் ஆசையை நிறைவேற்றும் வகையில் விரைவில் மக்களை நேரடியாகச் சந்தித்து அதிமுக ஆட்சியின் ஊழல்களைப் பொதுமக்கள் மத்தியில் எடுத்து வைப்பேன்.
தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு மீட்டுவிட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லி இருக்கிறார். எந்த உரிமையை மீட்டார்கள் என்று தெரியவில்லை. அதைச் சொன்னால் நன்றாக இருக்கும்.
இவர்கள் தமிழகத்தின் உரிமையை மீட்கவில்லை. தங்கள் தலையை மீட்டுள்ளார்கள். பாஜகவுக்கு அடிமைச் சேவகம் செய்யாமல் போயிருந்தால் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும், வேலுமணியும் விஜயபாஸ்கரும் சிறைக்குப் போயிருப்பார்கள்.
இவர்கள் தங்கள் வாழ்க்கையை மீட்டுக் கொண்டார்கள் என்று சொல்லலாமே தவிர, தமிழக உரிமைகளை மீட்டார்கள் என்று சொல்வது சி.வி.சண்முகத்தின் அடிமை மனோபாவத்தைக் காட்டுகிறது.
ஊழலுக்காக உரிமையை விலை பேசி விற்றுவிட்ட கூட்டம்தான் எடப்பாடி பழனிசாமி கூட்டம். அந்த எடப்பாடி பழனிசாமி கூட்டத்திடம் இருந்து கோட்டையை மீட்டு தமிழக உரிமைகளை மீட்கும் தீரர்களின் கூட்டம்தான் திமுகவின் கூட்டம்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago