அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து மனு அளித்தனர்.
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கோப்பு தயாரித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஒப்புதல் தர மறுத்ததுடன் கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் கிரண்பேடி அனுப்பி வைத்தார்.
இந்த விவகாரம் புதுச்சேரி மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆலோசிக்க புதுச்சேரி சட்டப்பேரவை 4-வது மாடியில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நேற்று (நவ. 09) மாலை முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் கூறிய முதல்வர் நாராயணசாமி, "கோப்புகளில் கருத்து வேறுபாடு இருந்தால் விதிமுறைப்படி அமைச்சர்களை அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அப்போது, கருத்துகள் நியாயமாக இருந்தால் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் தர வேண்டும். அப்படி இல்லாமல் தன்னிச்சையாகக் கோப்பினை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருப்பது விதிமுறைக்கு மாறானது. இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே மத்திய அரசுக்கு ஆளுநர் கோப்பை அனுப்பியுள்ளார். இதுகுறித்துச் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோர் இன்று (நவ. 10) ராஜ்நிவாஸில் ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
பின்னர் வெளியே வந்த சாமிநாதன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைத்தோம். நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆளுநர் தடையாக இருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். அதனடிப்படையில் இன்று ஆளுநரை நாங்கள் சந்தித்து மனு அளித்து விளக்கம் கேட்டோம்.
புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதில் ஆளுநருக்குக் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், தமிழக ஆளுநருக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச ஆளுநருக்கும் வேறுபாடுகள் உள்ளன. ஆகவே, மத்திய அரசின் ஒப்புதலுக்கான கோப்பை அனுப்பி வைத்துள்ளார். இது சம்பந்தமாக மத்திய அமைச்சரை நாங்கள் தொடர்புகொண்டு பேசி உடனடியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வாங்கிக் கொடுப்போம்.
ஆளுநர் தடுத்து நிறுத்துவது போன்ற குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். 'யூனியன் பிரதேச ஆளுநர் என்பதால் தன்னிச்சையாக என்னால் முடிவு எடுக்க முடியாது. ஆகவே, கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இதனை நான் தடுக்கவில்லை. கொடுக்கக்கூடாது எனவும் சொல்லவில்லை. மத்திய அரசின் கருத்தைக் கேட்டுள்ளேன். மத்திய அரசு சொன்னால் உடனே ஒப்புதல் அளிப்பேன்' என்று ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
10% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அனைவரும் ஒத்தகருத்தில்தான் உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தின் நலன் கருதி அரசு மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு பெற்றுத்தர பாஜக தொடர்ந்து போராடும். மத்திய உள்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்களையும் சந்திப்போம்.
கேரளா, தமிழகம், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற அனைத்து மாநிலங்களிலும் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். ஆனால், இங்கு ஆளுநரைக் காரணம் காட்டி முதல்வர் நாராயணசாமி தப்பித்துக் கொள்கிறார்.
1 லட்சத்து 3,000 பேருக்கு ஆயுஷ்மான் திட்டம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு பணமும் கொடுத்துள்ளது. ஆனால், முதல்வர் சென்று ஒரு கார்டு கூட வழங்கவில்லை. அதற்கான பிரீமியம் தொகையையும் கட்டவில்லை. இந்தியாவிலேயே நூறு சவீத பிரீமியம் தொகை இங்குதான் கட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் பாஜக வளர்ந்துவிடும்.
புதுச்சேரியில் அனைவருக்கும் வீடு, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடமாட்டார்கள். முதல்வர் நாராயணசாமி அரசியல் நடத்துகிறார். காங்கிரஸ் தலைவராக மட்டுமே செயல்படுகிறார். திட்டத்துக்கும், ஆளுநருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்தத் திட்டத்தை ஆளுநர் தடுத்தார் என்பதைச் சொல்ல முடியுமா?
பிரதமரின் திட்டங்களைத் தடுத்தால் ஆளுநரை அவரே கேட்க மாட்டார்களா? எனவே, பொய்யான தகவல்களை முதல்வர் கூறி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை புதுச்சேரி மாநிலத்தில் திட்டங்களைத் தடுப்பது முதல்வர் நாராயணசாமிதான், ஆளுநர் கிடையாது. அப்படித் தடுத்தால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றுகின்றனர். ஆனால், புதுச்சேரியில் நாராயணசாமி பொய்களைக் கூறி வருகிறார்".
இவ்வாறு சாமிநாதன் எம்எல்ஏ தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago