தூத்துக்குடி மாநகராட்சியில் 'கழிவுல காசு' புதியத் திட்டம்: குப்பையில் கிடைத்த வருமானத்தில் தீபாவளி போனஸ் 

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாநகராட்சியில் 'கழிவுல காசு' என்ற திட்டத்தில் குப்பையில் இருந்து கிடைத்த வருமானத்தில் 450 தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, தேசிய பசுமை தீர்ப்பாய்த்தின் வழிகாட்டுதல்களோடு காற்று மாசு நிறைந்த நகரங்களின் படடியலில் தூத்துக்குடி மாநகராட்சி இடம் பெற்றிருப்பதை மாற்றியமைக்கும் பொருட்டு, இம்மாநகராட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றில் குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை பணிகளில் குப்பைகளை திறம்பட மக்கும் மற்றும் மறுசுழற்சி குப்பை என பிரித்து கையாள்வதன் மூலம் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுசூழலை பாதுகாப்பதோடு கழிவுகளிலிருந்து சுழல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் புதிய முயற்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேற்கொண்டது.

ஆணையர் வீ.ப.ஜெயசீலன் வழிகாட்டுதலின்படி மாநகர் நல அலுவலர் சு.அருண்குமார் தலைமையில் பொதுசுகாதார பிரிவு அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்போடு ஏற்படுத்தப்பட்ட இந்த புதிய முயற்சி தான் 'கழிவுல காசு' என்ற திட்டமாகும்.

திடக்கழிவுகளில் கலந்திருக்கும் விலைமதிப்புடைய பொருட்கள் பணியாளர்களால் நேரடியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேநேரத்தில் தூக்கி எறியப்படும் இதர மதிப்பு குறைந்ததாக கருதப்படும் கழிவுகளால் சுற்றுசுழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, மண்ணுக்கு தேவையான இயற்கை உரங்களும் வீணாகின்றன.

இதனை தவிர்க்க, சுழல் பொருளாதார தத்துவத்தை திடக்கழிவு மேலாண்மையில் நடைமுறைபடுத்துவதன் மூலம் மதிப்பு குறைந்த கழிவுகளாக கருதப்படும் காகிதம், பிளாஸ்டிக், டயர்கள், துணிகள் போன்றவற்றை முறையாக பிரித்து மக்கும் குப்பைகளின் அளவையும், தரத்தையும் அதிகரிப்பதன் வாயிலாக இயற்கை வளங்கள் பாதுகாக்கபடுவதோடு, பொருளாதார மேம்பாடும் ஏற்பட வழிவகுக்கும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

உதாரணமாக காகிதத்தை எடுத்துக்கொண்டால் பணத்தை அச்சிடுவது முதல் பொட்டலம் மடிப்பது வரை அனைத்து இடங்களிலும் தேவைப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்பட்ட காகிதங்களில் பெரும்பாலானவை குப்பைகளோடு தூக்கி எறியப்படுகின்றன. மீண்டும் அடுத்த தேவைக்காக புதிய காகிதங்களை நம்பி இருக்கின்றோம்.

இதனால் காகித தேவை அதிகரித்துக்கொண்டே போவதால் காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

ஆனால், பயன்படுத்திய காகிதங்களில் இருந்து மாற்று காகித பொருளை உருவாக்குது என்பது சாத்தியமானது என்பதோடு, உற்பத்திச் செலவும் குறைவு. இதனால் மரங்கள் வெட்டப்படுவது குறைவதோடு காடுகள், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.

இதுபோலவே அனைத்து வித கழிவுப் பொருட்களின் மூலப் பொருட்களும் இயற்கை வளங்களிலிருந்து எடுக்கப்பட்டதாகும். எனவே எந்த அளவிற்கு கழிவு பொருட்களை மறுபயன்பாடு, மறுசுழற்சிக்கு உட்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு வருங்கால சந்ததிக்கான இயற்கை வளங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இத்தத்துவத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு மண்டலத்தில் சுகாதார அலுவலர் வீ.அரிகணேசனுடன் இணைந்து பொது சுகாதார பிரிவு பணியாளர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் தங்கள் பகுதிகளில் இத்திட்டத்தை நடைமுறைபடுத்தினர்.

பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி குப்பைகளை பிரித்து வழங்கச் செய்ததோடு, பணியாளர்களும் மறுசுழற்சிக்கு ஏற்புடைய பொருட்கள் எவ்வகையிலும் நேரடியாக கழிவாக வெளியேறிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு கடந்த 5 மாத காலத்தில் 202-டன் மறுசுழற்சி கழிவுகளை மீட்டெடுத்து ரூ.4.05 லட்சத்துக்கு கூடுதலாக மறுசுழற்சி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர்.

இவ்வகையில் சேகரிக்கப்பட்ட தொகையை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இத்திட்டத்தில் பங்கு கொண்ட 450 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் பிரித்து பங்கு தொகையுடன், இனிப்பு பொட்டலங்கள் சேர்த்து வழங்கப்பட்டன.

நாட்டிலேயே முதல்முறையாக இத்தகைய கழிவுல காசு திட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மச்சாதுநகர் நுண் உரம் செயலாக்க மையத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு கழிவுல காசு திட்டத்தில் போனஸ் வழங்கினார். மாநகர் நல அலுவலர் சு.அருண்குமார், சுகாதார அலுவலர் வீ.அரிகணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்